ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு உலக மனித உரிமை பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை அங்கீகரித்து பிரகடனம் செய்திருந்தது. அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் பத்தாம் திகதி அனைத்துலகம் ‘மனித உரிமைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் நிலவுகின்ற நிலையில் இந்த மனித உரிமை பிரகடனம் என்பதும் மனித உரிமைகள் தினமும் முக்கியத்துவம் பெறுகின்றது.
மனிதர்கள் அனைவருக்கும் இனம், நிறம், மதம், பாலினம், மொழி, நாடு என்ற வேறுபாடு இன்றி அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது என்பது மனித உரிமைகள் தினத்தின் அடிப்படை நோக்கமாக காணப்படுகிறது.
ஆனால், மனித உரிமைகள் தினம் மெய்யான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறதா? என்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது.
மனித உரிமை என்பது
இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கான சகலவிதமான உரிமைகளுடனும் வாழ்தலே அடிப்படை உரிமையாகும்.
ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் மனித உரிமைகள் இருப்புக் கொள்ளுவதற்கான அடிப்படை.
ஒவ்வொரு மனிதனுக்குமான அனைத்து உரிமைகளையும் உறுதி செய்வதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில், சிங்களப் பேரினவாத அரசின் கீழ் நாம் ஒடுங்கியும் அடங்கியும் வாழ வேண்டும் என ஆள்பவர்கள் நினைக்கின்றனர்.
இதுதான் யதார்த்தமான நிலை. நாம் பிறந்த மண்ணில் நமது உரிமைகளுடன் வாழ முடியவில்லை.
எமது உரிமைகளுடன் எம்மை வாழவிடாமல் தடுப்பதுவே இங்கே நிகழ்கிறது.
மருந்துக்கும் இல்லாத மனித உரிமை
எம்முடைய நிலத்தில் நாம் வாழ முடியாது. நம்முடைய அடையாளங்களுடன் நாம் வாழ முடியாது. நாம் நாமாக வாழ முடியாது. நம்முடைய வரலாற்றைப் படிக்க முடியாது. நம்முடைய வரலாற்றை பேச முடியாது. இழந்த உரிமைகளைப் பற்றி பேசவும் அதனைக் கோரவும் முடியாது.
உலகமயமாதல் சூழலில் உலகின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானிக்கின்ற, அல்லது தட்டிக் கேட்கக்கூடிய காலம் ஒன்றிலேயே நாம் பலவந்தமாக இனவழிப்புக்குள் அமிழ்த்தப்படுகிறோம்.
அப்படியெனில் இலங்கையில் மனித உரிமை என்பது மருந்திற்கும் இல்லாத நாடல்லவா? இந்த அதிர்ச்சி இவ் உலகத்தினர் எவரையும் உறுத்தவில்லை என்பதுதான் உலகின் தீராத வியப்பாயிருக்கிறது.
மனிதர்களும் எல்லோரும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றே ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் மனித உரிமைப் பிரகடனம் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுக்குரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.
ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு வழங்கப்பட்ட நீதியைப் பற்றி இன்றைய நாளில் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
மனித உரிமை மீறல்கள்
இலங்கையில் மனித உரிமை மீறல்களின் ஆரம்ப நிலையோ மிகவும் கொடூரமானது. உண்மையில் அதன் அடிப்படையே இன மேலாதிக்கம்தான். சக மனிதர்கள்மீதான ஒடுக்குமுறை பாரிய குற்றமாக உலகில் கருதப்படுகின்றது.
மனிதர்களுக்கிடையிலான சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை, சிறுவர்கள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் மீறல்கள் குறித்தெல்லாம் உலகில் நன்றாகப் பேசப்படுகின்றது.
மனித உரிமை அவைகளை நடாத்துவதற்கும் வருடாந்தம் அவைகள் பற்றி உரையாற்றுவதற்கும் உலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூர்வதற்குமான தேவைகளும் உள்ளடங்களுங்களும் உலகில் தொடர்ந்தும் வாய்த்து வருகின்றன.
இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் இன்னொரு பெரும்பான்மை இனத்தால் ஒடுக்கப்படுகின்றது. இது இன உரிமை மீறல். இது இன உரிமை மறுப்பு.
ஆனால், இதனை ஒரு மனித உரிமை மீறல் என்பதை ஏற்றுக் கொள்வதற்கே 30 ஆண்டுகள் இந்த உலகிற்கு தேவைப்பட்டுள்ளன என்றால் இந்த உலகம் எவ்வளவு ஆபத்தமானது?
பல இலட்சம் மக்களின் உயிர்களை காவு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டது என்பது எவ்வளவு கொடூரமான விசயம்.
ஒரு கொடும்போரின் இறுதி நாட்களில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டதே?
ருவாண்டா இனப்படுகொலை
ஈழத்தில் மாத்திரமல்ல, ருவாண்டா இனப்படுகொலை, குர்து இனப்படுகொலை, ஆர்மோனியன் இனப்படுகொலை என்று உலகில் நிகழ்ந்தேறிய எல்லா இனப்படுகொலைகளின் போதும் மனித உரிமை என்ற வார்த்தைகள் சாதாரணமாககூட உபயோகிக்கப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்படவில்லை.
அதனை மனித உரிமை மீறல்களாக ஏற்றுக்கொள்ளவும், இனப்படுகொலைகளாக ஏற்றுக்கொள்ளவும் வெகுகாலம் எடுத்தது.
இந்த மக்களின் இனப்படுகொலைக் கல்லறைகள்மீது வெள்ளையும் அடிக்கப்பட்டது. உலகின் அரசியல் தேவைகளின் பிரகாரங்களின்படியே தீர்ப்புக்கள் காலம் தாழ்ந்து கிடைத்தன. இலங்கை விடயத்தில் ஐ.நா மிகவும் தோற்றுப் போயிருந்தது.
இதனை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள், இந்நாள் செயலாளர் நாயகங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
காலம் கடந்த இந்த ஒப்புதல்களும் வருத்தங்களும் இந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தவறியிருக்கின்றன.
இராண்டாம் உலகப் போரின் பேரழிவின் பின்னர், உலகின் வல்லரசு நாடுகளின் பாதுகாப்பைத்தான் இத்தகைய தினங்கள் உறுதிப்படுத்த முயலுகின்றனவா?
ஒடுக்கப்பட்ட இனங்களும் சிறுபான்மை இனங்களும் உலகின் ஆதிக்க நாடுகளினாலும், அதன் அரசியல் கூட்டு நாடுகளினாலும் உரிமை இழப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஈழத்தில் இனப்படுகொலை
இலங்கைத் தீவில் தொடரும் இன உரிமையும் இப்படி ஒரு கணக்கிலேயே தொடர்கின்றது.
ஒரு சிறு இனத்தின் பல்லாயிரம் போராளிகள் ஆயுதம் ஏந்தி மாண்டுபோனதின் அரசியல் நியாயத்தின் உண்மையை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. உலகெங்கும் அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
தன்னுடைய மொழியை, தன்னுடைய நிலத்தை, தன்னுடைய அடையாளத்தை, தன் சக மனிதர்களை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்குகிற நிலமை வருகின்றது எனில் அங்கு மனித உரிமை மீறல் என்பது எந்தளவுக்கு முற்றிப் போன பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பதை வல்லுனர்கள் அறியாதவர்களல்ல.
இத்தகைய தினங்களை பிரகடனப்படுத்திய அமைப்புக்களின் கணக்குகளில் ஏன் இவை உள்ளடங்கவில்லை? ஈழத்தில் மிகக் கொடிய இனப்படுகொலை நடைபெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
போரில் படு பயங்கரமாக ஒரு இன அழிப்பின் அத்தனை நோக்குகளுடனும் கொல்லப்பட்ட மக்கள் குறித்து எந்த நீதியும் இல்லை.
காகிதத்தில் மாத்திரம் பேணப்படுகிறதா?
ஒரு மனிதரின் உரிமை குறித்துப் பேசும் சாசனங்கள், ஒரு இனத்தின் பகுதியினரே இல்லாமல் போயிருப்பதை குறித்து பேசாமல் இருப்பது ஏன்? அவர்கள் மிகவும் கொடூரமான வழிகளில் கொல்லப்பட்டமை குறித்தும் காணாமல் ஆக்கபட்டமை குறித்தும் அவர்களின் வாழ் நிலங்கள் பறிக்கப்பட்டமை குறித்தும் பேசாதிருப்பது ஏன்? உலகின் இந்த வஞ்சகங்களிற்கும் இலங்கையில் காணப்படும் இனப் பாரபட்சங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபை போன்றவை இந்த உரிமை மீறல்களை ஊக்குவிக்கின்றன. இத்தனை உலகப் பேரழிவுகளின் பின்னரும் தரவுகளை மதிப்படும் ஒரு சபையாக, ஈற்றில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா தேவை தானா?
எங்களுக்கு நேர்ந்த இந்தக் கதி உலகில் எந்த இனத்திற்கும் நேரக்கூடாது. உலகில் உள்ள மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்.
எந்த இனமும் எங்களைப் போல அழிந்துபோகக் கூடாது. ஒடுக்கப்படக்கூடாது. அரசெனப்படுவது மக்களை பாதுகாக்கவும், அந்த மக்களை இறைமையைப் பெற்று ஆள்வதுமாக இருக்க வேண்டும்.
வெறுமனே காகிதத்தில் மாத்திரம் இந்த தினம் நினைவு கூறப்படுவதில் அர்த்தம் இல்லை.
உலகமெங்கும் ஏதோ ஒரு வகையில் கொடுக்கும் முறைகளும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
உலகின் அனைத்து மக்களது மனித உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும். இதனை கடந்த காலத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை சந்தித்த ஈழத்தமிழ் மக்கள் வலியுறுத்த வேண்டிய பொறுப்பினை கொண்டிருக்கிறார்கள்.
– நன்றி: ஐபிசி இதழ்