புரிதலின் பாதையில் கடக்கவேண்டிய தொலைவு நிறைய…!

நூல் அறிமுகம்: பெருந்தக்க யாவுள!

பெருந்தக்க யாவுள புத்தகத்தில் சில இடங்களில்… அல்ல அல்ல, நிறைய இடங்களில் பெண்ணை உயர்த்திப் பிடிக்கவே செய்திருக்கிறேன். பெண்ணைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலே இல்லாத தேசத்தில் அப்படி ஒரு படி உயரத்துவது அவசியம் என்று கருதுகிறேன்.

பெண்ணென்பவள் உடலால் ஆனவள் என்றும் அவளின் உடல் ஆணுக்கான கனவு என்றும் பெண்ணை உடலால் கீழ்மை செய்யமுடியுமெனவும் ஊறிப்போன மனங்கள் நிறைந்த சமூகத்தில் அவளை எந்த நோக்கங்களும் இன்றி இயல்பாக அணுகு என்று சொல்லுவதே – பெண்ணைப் போற்றி புகழ்வதென்று புரிந்துகொள்ளப்படுகிறது.

பெண்ணிடம், எப்போதாவது உன்னை நான் தப்பா ஒரு பார்வை பார்த்திருப்பேனா? என்று ஆதங்கம் பொங்கக் கேட்பதே ஒருவகையில் நான் இயல்புக்கு மாறாக உன்னிடம் நடந்துகொண்டு வந்திருக்கிறேன் என்னும் சுயதம்பட்டத்தின் வெளிப்பாடு தான்.

இயல்பென்பது அவளை சக உயிராக பார்க்கும் பார்வை மட்டும்தான். அதில் சிறப்பித்துக் கூறவோ பெருமைகொள்ளவோ எதுவுமே இல்லை. ஆனால் அதுவே இங்கு கர்வமாக இருக்கிறது என்றால் இன்னும் அவளை இயல்பாக அணுகத்தெரியவில்லை என்றுதானே அர்த்தம்! புரிதலின் பாதையில் கடக்கவேண்டிய தொலைவு நிறைய இருக்கிறது.

– யாத்திரி (கார்த்திக்)

*****

இரண்டு பெண்களின் ஆழமான நட்பு, அவர்கள் இச்சமூகத்தை பார்க்கும் பார்வை, அதிலும் குறிப்பாக ஆண்களின் மீதான பார்வை, இந்த ஆண்கள் பெண்களைப் பார்க்கும் மோகப் பார்வை, திருமணம், திருமணத்தின் போது ஒரு ஆண் பெண்ணின் மீது எதிர்பார்க்கும் மூடநம்பிக்கையான விஷயங்கள்.

ஒரு ஆண் மூன்று பெண்ணை கூட திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், அதுவே ஒரு பெண் மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்டால் என்ன ஆகும்? இச்சமூகம் அதை எப்படி பார்க்கும்? அதை ஏற்குமா? என்ற மாதிரியான கருத்து.

கணவனை இழந்து தன் பிள்ளைகளை வளர்க்க அம்மா படும் துயரம், பிறகு இச்சொந்த பந்தங்கள் விலகி நின்று (பணம் இருந்தால் தான் சொந்த பந்தங்கள் கூட இருக்கும் அது இல்லை என்றால் இச்சொந்த பந்தங்கள் அவர்களை மனிதர்களாகவே மதிக்காது அல்லது அவர்கள் நம்மிடம் ஏதாவது உதவி கேட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தில் சற்று தொலைவிலே இருப்பார்கள்) அவர்களுக்கு கற்பிக்கும் பாடம், கைம்பெண்ணை எளிதாக அணுகி விடலாம் என்ற ஆணின் தவறான எண்ணம், அக்கா தம்பி – பாசம், தனது சகோதரியின் தோழியின் மீது செல்வேந்திரன் கொண்ட காதல்,

தன் மனைவி சரி இல்லை, தன்னுடன் சரியாக குடும்பம் நடத்தவில்லை என தன் மனைவியை தவறாக சித்தரித்து வெளியில் உள்ள பெண்களிடம் கூறி, அதன் வழியாக ஒரு அனுதாபத்தை பெற்று அவர்களிடத்தில் தவறான வழியில் உறவை ஏற்படுத்திக் கொள்வது, பிறகு இதற்கு ஒரு நல்ல பாடம் புகுத்தப்பட்டது,

“நாம் நேசிப்பவர்கள் நம்முடன் தான் இருக்க வேண்டும் என்று இல்லை நலமுடன் இருந்தாலே போதும்” என்ற எண்ணத்தில் தான் காதலித்த பெண் வேறொருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து அவளை தொந்தரவு செய்யாது விலகிய அமுதவனின் கதாபாத்திரம்.

ஆண்களே! நீங்கள் ஏன் எங்களுக்கு சுதந்திரம் தர வேண்டும்? அதை பெண்களுக்கு தருவதற்கும் தராமல் இருப்பதற்கும் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று அனுபா என்ற கதாபாத்திரத்தின் மூலம் கேட்ட கேள்வி.

பல ஆண்களுடன் உறவு கொண்ட அனுபா என்ற கதாபாத்திரத்தின் மீது செல்வேந்திரன் என்ற கதாபாத்திரம் கொண்ட காதல் அளப்பரியது. (பெண்களே! ஏன் உங்களால் மட்டும் தான் ஒரு ஆணை அளவு கடந்த அன்பால் காதலிக்க முடியுமா என்ன? பெண்களே உங்களையும் உடலுக்காக அல்ல உங்களின் உள்ளத்திற்காக காதலிக்க எத்தனையோ ஆண்கள் என்னை போல் உள்ளோம் என்பதை வெளிப்படுத்திய விதம், அனுபா-விற்காக செல்வேந்திரன் தன் Dairy-ல் எழுதி வைத்த கடைசி பக்கமானது ஒரு பெண்ணை இப்படியும் நேசிக்க முடியுமா என்ற ஆச்சரிய கேள்வி எழும்படி இருந்தது.

அனுபாவை “காமத்தால் வென்றுவிடலாம், ஆனால் காதலால் வெல்வதுதான் அரிது” என்று செல்வேந்திரன் என்ற கதாபாத்திரம் மூலம் சொன்ன விதம், இச்சமுகத்திற்கு பயந்து பயந்து அவர்களுக்காக வாழ்வதைவிட நமது, நம்முடைய சிந்தனைக்கும் எண்ணங்களுக்கும் ஏற்றவாறு வாழ்ந்து மடிவதே சிறந்தது. இச்சமூகம் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் என்றவாறு கூறி பெண்ணை சற்று உயர்த்து பிடித்து எழுதியது அருமை.

  • சரவணன்

******

நூல்: பெருந்தக்க யாவுள! (நாவல்)
ஆசிரியர்: யாத்திரி (கார்த்திக்)
வாசகசாலை
பக்கங்கள்: 246
விலை: ரூ. 285/-

Comments (0)
Add Comment