திரைப்படம் என்பது என்ன? அது ஏன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பித்து பிடித்தவர்களாகத் திரிய வைக்கிறது?
குறிப்பிட்ட படம் அல்லது நட்சத்திரத்திற்கு முன்னால் தங்கள் வாழ்வு ஒன்றுமில்லை என்று எண்ண வைக்கிறது? இது போன்ற பல கேள்விகள் நம்மைத் தொடர்ந்தாலும், அவற்றுக்கான பதிலை அறிவது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. ஏனென்றால், எல்லோருக்குள்ளும் இந்தக் கேள்விகள் அத்தனை எளிதாக முளைக்காது.
அப்படிப்பட்ட கேள்விகளைக் கண்டடைந்தவர்கள், ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிலோ, வெளியிலோ அது பற்றிப் பரவசப்படுவதில்லை. ‘என்னோட ஹீரோ, ஹீரோயின் தான் பெஸ்ட்டு’ என்று சண்டையிடுவதில்லை.
அந்த நிலையை எட்டாதவரை, எதிர்பார்ப்புக்குரிய திரைப்படத்தைப் பார்க்கும் வரை எதிலும் மனம் நிலை கொள்ளாது.
அப்படிப்பட்ட ரசிகர்களை, அவர்களது குடும்பத்தினரை மன வருத்தமடையச் செய்யும்படியான நிகழ்வாக அமைந்திருக்கிறது ’புஷ்பா 2’ காணச் சென்ற ரேவதி எனும் பெண் உயிரிழந்த சம்பவம்.
வருத்தத்தில் ஆழ்த்திய நிகழ்வு!
கடந்த 5ஆம் தேதியன்று ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகெங்கும் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு, ஹைதராபாதில் சில தியேட்டர்களில் ‘பிரீமியர் காட்சி’ திரையிடப்பட்டது.
ஹாலிவுட் பாணியில் ஒரு படம் வெளியாவதற்கு முந்தைய நாள் மாலை அல்லது இரவில் திரையிடப்படும் இந்த வழக்கத்தினால் படத்தயாரிப்பாளரின் வசூல் கணக்கு அதிகமாகும்.
தீபாவளியன்று வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் இப்படி உலகெங்கும் சில பிரிமியர் காட்சிகளைக் கண்டது. அந்த வரிசையில் ‘புஷ்பா 2’ மேலும் ஒரு படி ஏறியது. ரசிகர் கூட்டம் அக்காட்சியைக் காண முண்டியடித்தது.
ஹைதராபாதிலுள்ள சந்தியா தியேட்டரில் பிரீமியர் காட்சியைக் காண, அன்றிரவு 9.30 மணி அளவில் ரேவதி, அவரது கணவர் பாஸ்கர், மகன் ஸ்ரீதேஜா மற்றும் 5 வயது மகள் என நால்வரும் சென்றிருக்கின்றனர். சில நிமிடங்கள் கழித்து, அங்கிருக்கும் ஹாலுக்குள் நுழைந்திருக்கின்றனர்.
சுமார் 9.45 மணியளவில் அங்கு ‘விசிட்’ செய்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜுன். அவர் வரும் தகவல் அறிந்ததும், நள்ளிரவு காட்சிக்கு டிக்கெட் வாங்க வெளியே காத்திருந்த கூட்டம் தியேட்டருக்குள் புகுந்திருக்கிறது.
கூட்டத்தைப் பார்த்து மகள் மிரண்டு அழுத காரணத்தால், தியேட்டர் வாசலில் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருக்கிறார் பாஸ்கர்.
அந்த களேபரத்திற்கு நடுவே மகன், மனைவி எங்கிருக்கின்றனர் என்று தேடியிருக்கிறார். அவர்களைக் கண்டறிய முடியவில்லை.
இதற்கு நடுவே, தொடர்ந்து அழுது கொண்டிருந்த மகளைச் சமாதானப்படுத்த முடியாமல் தவித்திருக்கிறார் பாஸ்கர். அந்தப் பகுதியில் தனக்குத் தெரிந்தவர் வீட்டில் மகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு மீண்டும் தியேட்டருக்கு திரும்பியிருக்கிறார்.
அங்கு நின்றிருந்த போலீசாரிடம் தனது மனைவியையும் மகனையும் காணவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அவர் சொன்ன தகவல்களைக் கேட்டதும், தங்களிடம் இருந்த ஒரு வீடியோவை அவர்கள் காட்டியிருக்கின்றனர்.
ஸ்ரீதேஜாவுக்கு போலீசார் முதலுதவி செய்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதைக் கண்டதும், பாஸ்கர் அலறியிருக்கிறார். மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்.
மருத்துவமனையில் ஸ்ரீதேஜாவுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டபிறகு, கிட்டத்தட்ட அதிகாலையில் ரேவதி உயிரிழந்த தகவல் பாஸ்கரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன், தியேட்டர் நிர்வாகத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாகவும், அக்குடும்பத்தினரின் நலனுக்காக மேற்கொண்டு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.
’புஷ்பா 2’ வின் இமாலய வெற்றிக்கு நடுவே, அப்படம் சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த நிகழ்வு.
வேட்கை தேவையா?!
மேற்சொன்ன சம்பவத்தில் அந்தச் சிறுவன் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகர் என்பதாலேயே, அந்தக் குடும்பம் பிரிமியர் காட்சி காண தியேட்டருக்கு வந்திருக்கிறது.
இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததன் பின்னணியில் சில கவனக்குறைபாடுகள் இருக்கின்றன.
அல்லு அர்ஜுன் வரும் தகவல் முன்கூட்டியே தியேட்டர் நிர்வாகத்தினரிடம் தெரிவிக்கப்பட்டதா, அதனை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா, ரசிகர்களை ஒழுங்குபடுத்தப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? காவல் துறை விசாரணையில் இவற்றுக்கு என்ன பதில் கிடைக்கப் போகின்றன எனத் தெரியவில்லை.
ஒரு நட்சத்திர நடிகரைப் பார்க்கும் ஆவலில், அவரோடு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் முனைப்பில் பெருந்திரள் பின்னே வருவது இயல்புதான்.
ஆனால், தங்களுடனேயே வரும் ஒரு தாயும் பிள்ளையும் கீழே விழுந்ததை உணராமல், அவர்களை மிதித்துக்கொண்டு செல்கிற வேட்கையைக் கண்டுதான் நாம் அஞ்ச வேண்டியிருக்கிறது.
கிடைப்பதற்கு அரிய பொக்கிஷத்தை அடைவதற்கும் கூட, இப்படியொரு ‘வெறி’ தேவையில்லை.
சக மனிதனை நசுக்கி மேலேறி அமிர்தத்தை அடைந்தப்பிறகு, அதனை அள்ளித் தின்பதில் கிடைக்கும் சுவை எப்படி ‘உயிர்மை’ நிறைந்ததாக இருக்கும்? அந்த நினைவு வாழ்நாள் முழுக்க நரகத்தில் இருக்கும் வேதனையை அல்லவா தந்து கொண்டிருக்கும்!
மாநிலம் முழுக்க ஒரு திரைப்படத்தின் பிரதிகள் நூற்றுக்கும் குறைவாகத் திரையிடப்பட்ட நாட்களில், ‘முதல் நாள் முதல் காட்சி’க்காக நிகழ்ந்த கடந்த காலக் களேபரங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இன்று, ஒரே நேரத்தில் லட்சோபலட்சம் பேர் பார்த்து மகிழும் சூழல் வந்துவிட்டது. அப்படியிருந்தும், ‘முதல் ஆளாகப் பார்த்துவிட வேண்டும்’ என்கிற வேட்கை ஏன் நம்மை விரட்டிக் கொண்டிருக்கிறது?
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துணிவு வெளியீட்டின்போது சென்னை கோயம்பேடு தியேட்டர் ஒன்றில் நிகழ்ந்த ரசிகர் ஒருவரின் அகால மரணம் தமிழ் திரையுலகையே ஆட்டுவித்தது.
அதன்பிறகு, அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்கிற முடிவு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.
அதனை வழிமொழியும்விதமாக, இப்போது ஹைதராபாதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
மாநில, மத்திய அரசுகள் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பல நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம்.
ஆனால், ரசிகர்களான நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி சினிமா தோன்றிய காலம் முதலே நம்மைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
தியேட்டர் வளாகத்தில் துண்டு பிலிம்களைப் பொறுக்கியெடுத்த காலத்தில் கூட, திரையில் தெரியும் பிம்பம் உண்மையில்லை என்ற புரிதல் பலரிடத்தில் இருந்தது. இன்று, ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று சொன்னால் நம்ப மாட்டோம்’ என்பவர்களே அதிகம் இருக்கின்றனர்.
திரையோடு தெரியும் பிம்பங்களோடு நம்மைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளும்போதுதான், அந்தத் திரைப்படம் வெற்றி அடைகிறது.
இன்று, யதார்த்தத்தில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும் திரைப்படங்களோடு நாம் எந்த வகையில் நம்மைப் பொருத்திப் பார்க்கிறோம்? இந்த கேள்விக்கான பதிலை நாம் அனைவரும் தானாக அறிவது தான், இது போன்ற ரசிக வேட்கைக்கான பதிலாக அமையும்.
மிக முக்கியமாக, திரைப்படக் கலை குறித்த புரிதலைப் பள்ளிப் படிப்பில் இருந்து ஊட்டினால் மட்டுமே இளைய தலைமுறையினரின் மனதில் தேவையற்ற பிம்பங்கள் விஸ்வரூபமெடுப்பதைச் சிறிதளவாவது தடுக்க முடியும்.
ஒரு நட்சத்திரம் நடித்த திரைப்படத்தை அடுத்தடுத்த நாட்களில், வாரங்களில் காண முடியும் என்பதைப் புரிய வைப்பதன் வழியே, அது போன்ற சில புரிதல்களை விதைப்பதன் மூலமாக ரசிகர்களின் ரசனையை ஒழுங்குக்குள் கொண்டு வரலாம்.
அனைத்தையும் மீறிச் சக மனிதருக்கு இடர் தராத ஒழுங்கும் சுய கட்டுப்பாடும் அனைவரிடமும் இருந்தாக வேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அது போன்ற அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தராமல், அறத்திற்கு எதிரான திசையில் செல்லும் படங்களையும் அதனைப் போதிக்கும் நட்சத்திரங்களையும் ஆதரிப்பது சரியானதாக இராது.
சினிமா உள்ளிட்ட எந்தக் கலையும் நம்மை ஆசுவாசப்படுத்தத்தான்.. மாறாக, நம்மை ஆட்டுவிக்கும் வல்லமையை அவற்றின் கையில் வழங்குவது மிகப்பெரிய ஆபத்து.
அது தெரிந்தும், அந்த ஆபத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?!
-மாபா
#புஷ்பா_2 #Pushpa_2 #பெண்_உயிரிழப்பு_சம்பவம் #Woman_death_incident #ரசிகர்கள் #Fans #சினிமா #Movie #ஹைதராபாத்_சந்தியா_தியேட்டர் #Sandhiya_theatre #பிரீமியர்_காட்சி #Premire show #ரேவதி #Revathi #அல்லு_அர்ஜுன் #Allu_arjun