தொண்ணூறுகளில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் கதைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சில நேரங்களில் பத்திரிகைகளில் வெளிவரும் ‘ஹாட் நியூஸ்’களின் அடிப்படையில் பல திரைக்கதைகள் உருவாக்கப்பட்டன. நம்மூரில் ஆர்.கே.செல்வமணி போன்ற சில இயக்குனர்கள் இந்த உத்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினர்.
ஆனால், அவர்களைக் காட்டிலும் ‘ஜகஜால கில்லாடி’களாக மலையாளத் திரையுலகின் இயக்குனர்கள், திரைக்கதையாசிரியர்கள் திகழ்ந்தனர். அவர்கள் அப்படித் தந்த சில படங்கள் பெருவெற்றி பெற்றன; சில சுமார் ரகமாக அமைந்தன; மிகச்சில படங்கள் ரசிகர்களின் கவனத்தைத் தொடாமலேயே போயின. அந்த கடைசி ரகத்தில் அமைந்த படமே, சத்யராஜ் நாயகனாக நடித்த ‘ஏர்போர்ட்’.
மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குனராகத் திகழ்ந்த ஜோஷியின் இயக்கத்தில், ‘சிபிஐ டைரிக்குறிப்பு’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களின் கதாசிரியரான எஸ்.என்.சுவாமி கூட்டணியில் உருவான படம் இது.
கௌதமி, சோமன், ஜெயசித்ரா, சுசித்ரா, ஜெய்சங்கர், நாசர், சார்லி, யுவஸ்ரீ, பொன்னம்பலம், கிட்டி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் பாபு ஆண்டனி, அஜய் ரத்னம், பொன்னம்பலம், தளபதி தினேஷ் போன்ற வில்லன் நடிகர்கள் ஒரு காட்சியில் தோன்றியிருப்பர்.
வித்தியாசமான ஆக்கம்!
அந்த நிகழ்வு, அர்ஜுனை அரசியல் வட்டாரத்தில் பிரபலப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் பாராட்டு விழா ஒன்றில் அவர் கலந்துகொள்கிறார். அதில் பங்கேற்கும் மூத்த மத்திய அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி (எம்.ஜி.சோமன்) உடன் பேசும் வாய்ப்பும் கிடைக்கிறது.
சில நாட்கள் கழித்து, கிருஷ்ணமூர்த்தி அர்ஜுனைத் தொடர்பு கொண்டு பேசுகிறார். தன் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்.
அப்போது, தனது மகள் சிலருடன் வெளியே சென்றதாகவும், அவர்களை ஒரு தீவிரவாதக் கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார். ‘அவர்களது உயிருக்கு ஆபத்து என்பதால் ரகசியமாக அனைவரையும் மீட்டு வர வேண்டும்’ என்று அர்ஜுனிடம் மன்றாடுகிறார். வேறு வழியில்லாமல் அதனைச் செய்ய ஒப்புக்கொள்கிறார்.
நாட்டு எல்லையிலுள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டரை எடுத்துக்கொண்டு செல்கிறார் அர்ஜுன். அவர்களைப் பத்திரமாக மீட்கிறார்.
ஆனால், அதன்பிறகுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. அர்ஜுன் வாடகைக்கு எடுத்துச் சென்ற ஹெலிகாப்டரில் ஒரு பாஸ்போர்ட் கிடைக்கிறது. அது போலீஸ் கையில் கிடைக்க, அந்த நபர் (லாலு அலெக்ஸ்) ஒரு தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவன் என்று தெரிய வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, அந்த கும்பலோடு அர்ஜுனுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை தொடங்குகிறது.
அவ்விசாரணை தொடரும் காலகட்டத்தில், அந்த கும்பல் பிரதமரைச் சுட்டுக் கொல்கிறது. அது அர்ஜுனை சிக்கலில் மாட்டிவிடுகிறது.
வழக்கு விசாரணை முடிந்து, சிறை தண்டனை முடிந்து வீடு திரும்பும்போது, அர்ஜுன் வாழ்வே தலைகீழாகிறது. வீட்டில் அவரது தாயோ, தங்கையோ இல்லை. தாய் மரணமடைய, தங்கை காணாமல் போன விவரம் தெரிய வருகிறது.
அதன்பிறகாவது, எந்த தவறும் செய்யாத தன்னைப் பிரச்சனையில் சிக்க வைத்தவர் யார் என்பதை அர்ஜுன் அறிந்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
உண்மையைச் சொன்னால், தொண்ணூறுகளில் வெளியான தமிழ் படங்களில் இருந்து ‘ஏர்போர்ட்’ முற்றிலும் வேறுபட்டிருந்தது. முக்கியமாக, ஆக்ஷன் காட்சிகளில் நிறைந்திருந்த பரபரப்பு இதற்கு முன் ரசிகர்கள் கண்டிராததாக இருந்தது.
அப்படியிருந்தும் ‘ஏர்போர்ட்’ பெரிய வெற்றியைப் பெறவில்லை.
ஏன் வரவேற்பு இல்லை?!
1993-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதியன்று தீபாவளி வெளியீடாக 11 தமிழ் படங்கள் வெளியாகின. அவற்றில் கிழக்குச் சீமையிலே, சபாஷ் பாபு, எங்க முதலாளி, சின்ன ஜமீன், கட்டபொம்மன் ஆகியன குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன.
டிசம்பர் 3 அன்று காத்திருக்க நேரமில்லை, புருஷ லட்சணம், ரோஜாவை கிள்ளாதே படங்கள் வந்தன. அதற்கடுத்த வாரத்தில் ஏர்போர்ட் வெளியானது. இது போக, ஆண்டிறுதியில் விஜயகாந்த் கௌரவ வேடத்தில் நடித்த ‘செந்தூரப்பாண்டி’ வெளியானது.
மேற்சொன்ன பட வரிசையே எத்தகைய போட்டிச்சூழல் அன்று நிலவியது என்பதைச் சொல்லிவிடும். அது மட்டுமல்லாமல், ஏர்போர்ட்டுக்கு போதுமான வரவேற்பு கிடைக்காத அளவுக்குச் சில காரணங்களும் அப்படத்தில் இருந்தன.
‘ஏர்போர்ட்’டில் பாடல்களே கிடையாது என்பதில் அதில் தலையாயது. அந்த காலகட்டத்தில் அது ஒரு பெரிய குறையாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. ஆனாலும், இப்படம் இரண்டரை மணி நேரம் திரையில் ஓடியது.
ஆள் கடத்தல், மீட்பு, தீவிரவாதிகள் தாக்குதல், விஐபி மரணம் என்றிருந்த திரைக்கதை பரபரப்பைத் தந்தாலும், அதைத் தாண்டி படத்தில் நகைச்சுவைக்கோ, சென்டிமெண்ட் காட்சிகளுக்கோ இடமில்லாமல் இருந்தது.
ஆக்ஷன் காட்சிகளின் தரம் ‘சூப்பர்’ என்று சொல்லும்படியாக இருந்தாலும், படத்தின் விளம்பரங்களில் அது குறிப்பிடப்படவில்லை.
வில்லனாக நடித்த சோமன் உட்படச் சில முகங்கள் தமிழ் ரசிகர்களுக்கு அந்நியமாகத் தெரிந்தன.
இப்படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்து தாமதமாகத் திரைக்கு வந்தது மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அதனால், பெருவரவேற்பைக் காணாமல் ‘ஏர்போர்ட்’ தோல்வியடைந்தது.
ஆனால், ஒரு வார இதழில் இப்படத்தைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார் நடிகர் கார்த்திக். குறிப்பாக, சத்யராஜின் நடிப்பை வெகுவாகச் சிலாகித்திருந்தார். அது, சத்யராஜின் ரசிகர்களுக்கு உவப்பானதாக இருந்தது.
சில சர்ச்சைகள்!
’ஏர்போர்ட்’ வெளியான காலகட்டத்தில், இப்படம் உண்மைச் சம்பவமொன்றைத் தழுவி எடுக்கப்பட்டதாகச் சர்ச்சைகள் உண்டாகின. 1989-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் மகளைத் தீவிரவாத இயக்கமொன்றைச் சேர்ந்த சிலர் கடத்திய சம்பவத்தை ஒட்டியிருந்ததால், இப்படம் எதிர்ப்புகளைச் சம்பாதித்தது.
மேற்கண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இப்போதும் ஜம்மு காஷ்மீர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஏர்போர்ட்டை முழுக்க உண்மைக்கதை என்று சொல்ல முடியாமல் போனாலும், தொடங்கப்பட்ட சில நாட்களில் முடிவுற்றிருந்தால் இப்படம் பெரிய வரவேற்பை ஈட்டியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்று பெரும் கவன ஈர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய இப்படம், தாமதமாக வெளியானதால் எந்தக் கவனிப்பையும் பெறாமல் போனது.
ஆனால், அதனை மீறிச் சில ரசிகர்களின் தனிப்பட்ட அபிமானத்தினால் இப்படம் இன்றும் கொண்டாடப்படுகிறது.
எஸ்.என்.சுவாமியின் சிறப்பான திரைக்கதை ஆக்கம், ஜெயனன் வின்சென்ட்டின் அபாரமான ஒளிப்பதிவு, கே.கே.பாலனின் இறுக்கமான படத்தொகுப்பு, அனைத்து தொழில்நுட்பப் பணிகளையும் சரிவர ஒருங்கிணைத்து வழக்கத்திற்கு மாறான ஆக்ஷன் படமொன்றத் தர முயன்ற இயக்குனர் ஜோஷியின் உழைப்பு எனப் பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றன.
சத்யராஜ் சிறப்பான நடிப்பைப் பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தபோதும், அவரது ‘மஜோ’ இமேஜை உயர்த்திக் காண்பித்த படம் என்று இதனைத் தாராளமாகச் சொல்லலாம்.
அதேநேரத்தில், ஒரு கதாபாத்திரமாக மட்டுமே தோன்றி அதீத உணர்ச்சிப்பெருக்கை வெளிப்படுத்தாமல் மிக இயல்பாக அவர் வந்து போன படமாகவும் இது நிச்சயம் தெரியும்.
திரைப்படங்களுக்கான இன்றைய இலக்கணங்களோடு இப்படம் பொருந்தாது என்றபோதும், ஒரு கிளாசிக் படம் பார்க்கிற எண்ணத்தோடு ‘ஏர்போர்ட்’டை கண்டால் நிச்சயம் திருப்தி கிடைக்கும். அதுவே இப்படத்தின் வெற்றி.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறபோதோ, யூடியூப்களில் இப்படத்தைக் கண்டவர்களின் எண்ணிக்கையைக் காணும்போதோ அதனை நம்மால் உணர முடியும்..!
– மாபா