சில படங்களின் டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். அந்த வகையறாவில் அமைந்த திரைப்படம், புதுமுகம் செல்வ குமார் திருமாறன் இயக்கியுள்ள ‘பேமிலி படம்’.
’புஷ்பா 2-வோட சேர்ந்து வர்றோம்’ என்று வெளியான ‘டீசர்’ சிறிதாகக் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு வெளியான ட்ரெய்லர், இளைய சகோதரருக்காக மூத்தவர்கள் இரண்டு பேர் இணைந்து படம் தயாரிப்பதாகக் கதை சொன்னது.
மொத்தப்படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறதா? குடும்பத்தோடு பார்க்கும்படியாக இதன் உள்ளடக்கம் உள்ளதா?
ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை!
வாய்ப்பு அமையாமல் சோர்ந்து போகும்போதெல்லாம், அவரை ஊக்கமூட்டக் காத்திருக்கின்றனர் குடும்பத்தினர்.
மூத்த சகோதரர் சரத்குமார் (விவேக் பிரசன்னா), அதற்கடுத்தவரான பார்த்தி (பார்த்திபன்) இருவரும் ஒரு நண்பனாகவே தமிழை நடத்துகின்றனர்.
தாய் விஜி (ஸ்ரீஜா ரவி), தந்தை தவகுமார் (சந்தோஷ்) இருவருமே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கும் பெற்றோர் இல்லை. பெரிதாகப் பணபலம், செல்வாக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
சரத்குமாருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் பார்த்திக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது.
அந்தச் சூழலில், ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி அட்வான்ஸ் வாங்குகிறார் தமிழ். அவர் நீட்டுகிற ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார். முன்னணி நாயகனாக இருந்துவரும் தயாரிப்பாளரின் தம்பியிடம் கதையைச் சொல்கிறார். அவரும் அரைகுறையாகச் சம்மதிக்கிறார்.
இதற்கிடையே, சமூகவலைதளம் மூலமாக அறிமுகமான யமுனா (சுபிக்ஷா காயரோகணம்) நேரில் சந்திக்கிறார் தமிழ். இருவரும் மெல்லக் காதலிக்கத் தொடங்குகின்றனர். தமிழுக்காகத் தான் வாழும் மதுரையை விட்டு சென்னைக்கு இடம்பெயர்கிறார் யமுனா.
எல்லாமே சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், கதை விவாதத்திற்காகத் தயாரிப்பாளர் தந்த அலுவலகம் திடீரென்று பூட்டிக் கிடக்கிறது. ‘என்னவென்று கேட்கலாம்’ என்று தமிழ் முயலும்போது ஏமாற்றமே கிடைக்கிறது.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து தமிழை வரவழைக்கிறார் அந்தத் தயாரிப்பாளர். ‘புதுமுக இயக்குனர் மீது நம்பிக்கை இல்லை’ என்று தனது தம்பி சொன்னதாகச் சொல்கிறார். கூடவே, தமிழ் சொன்ன கதையைத் தானே இயக்கப் போவதாகத் தெரிவிக்கிறார்.
அதற்கு பார்த்தி எதிர்ப்பு தெரிவிக்க, ‘முடிஞ்சா கேஸ் போட்டுக்கோ’ என்கிறார் அந்த தயாரிப்பாளர். அது மட்டுமல்லாமல், ‘உங்க அண்ணனுங்க உன்னை நம்பி படம் தயாரிப்பாங்களா’ என்று தமிழிடம் கேட்கிறார்.
அது சரத்குமார் மனதை அலைக்கழிக்க வைக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ’தமிழ் தயாரிக்கும் படத்தை நமது குடும்பமே தயாரிக்கலாம்’ என்கிறார் சரத்குமார். அது உண்மையானதா, இல்லையா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
பேமிலியாக சேர்ந்து படம் தயாரிப்பதாகக் கதை அமைக்கப்பட்டிருந்தாலும், நடுத்தரக் குடும்பமொன்றில் பாசம், சண்டை, புரிதலைக் கண்ணில் நீர் துளிர்க்கச் சொல்கிறது. கூட்டுக்குடும்பமாக வாழ்வதென்பதே கனவாகிப் போன சூழலில், பல்வேறு சிக்கல் சிடுக்குகளுக்கு நடுவே அதனை வெற்றிகரமாகப் பின்பற்றி வருவதைக் காட்டுகிறது.
ரசிக்கலாம்.. கொண்டாடலாம்..!
இந்தப் படத்தில் வரும் பல காட்சிகளை நம்மால் முன்னரே தீர்மானிக்க முடியும் என்றாலும், அவற்றைத் திரையில் சொல்லியிருக்கும் விதம் உண்மையிலேயே கொண்டாட வைக்கிறது.
குறிப்பாக, பின்பாதியில் நம் கண்களில் நீர் துளிர்க்கும் வகையில் இரண்டு, மூன்று காட்சிகள் அமைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டதும் கண்ணீர் வருமளவுக்கு முன்பாதியில் அப்பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கோடு கிழித்தாற் போலத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் செல்வ குமார் திருமாறன். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
’எல்லாமே இருந்து சவால் விடுறது கெத்து இல்ல; எதுவுமே இல்லாம சவால் விடுறது தான் கெத்து’, ‘பிள்ளைங்க விரும்பறதைச் செய்ய முடியாம, நாம செத்தபிறகு அந்த சொத்து அவங்களுக்கு கிடைச்சு என்ன பிரயோஜனம்’ என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், இதற்கு முன் நாம் பல படங்களில் பார்த்த கதைச்சூழலை, காட்சிகளை, இதில் வேறு மாதிரியாகக் காண்பித்திருக்கிறார். அந்த காட்சியாக்கம் தான் இப்படத்தை போரடிக்காமல் நகர்த்த உதவுகிறது.
பட்ஜெட் குறித்த சிந்தனை ஏதும் ஏற்படாத வண்ணம், திரைக்கதைக்கேற்ப கே.பி.நந்துவின் கலை வடிவமைப்பு அமைந்துள்ளது.
காட்சிகள் சரியான இடத்தில் தொடங்கி சரியான இடத்தில் முடிவடைய வேண்டும் என்பதில் கவனம் காட்டியிருக்கிறது சுதர்சனின் படத்தொகுப்பு. அதேநேரத்தில், ‘என்ன நடந்தது’ என்று ரியாக்ஷனை அறிவதற்கு முன்பாகவே சில காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
அனிவீயின் இசையில் பாடல்கள் முதன்முறை கேட்கும்போதே மனதைத் தொடுகின்றன. ’கால் பாதம் இதுவா’ எனத் தொடங்கும் ‘நெசமா’ பாடல் நல்லதொரு மெலடி. திரைக்கதையின் முக்கியமானதொரு இடத்தில் அமைந்திருக்கிற ‘வழிவிடு’ பாடல் ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’டை தருகிறது. இது தவிர இன்னும் இரண்டு பாடல்கள் இருக்கின்றன.
அஜீஷின் பின்னணி இசையானது பின்பாதியில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகளின் தாக்கத்தை அதிகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. போலவே, நகைச்சுவையான வசனங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இப்படத்தில் ‘டிஐ’ ஆனது காட்சிகளைத் தனித்தனியே அழகுறக் காட்டுவதோடு, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் எந்தவித அசூயையும் எழாமல் பார்த்துக்கொள்கிறது.
இது தவிர்த்து இன்னும் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்போடுப் பெரிதாகப் புதுமையற்ற கதையை ‘ப்ரெஷ்’ஷாக தெரியும் வகையில் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
‘டைனோசர்’ படத்திற்குப் பிறகு, இதில் நாயகனாக நடித்திருக்கிறார் உதய் கார்த்திக். தான் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப சோகம், மகிழ்ச்சி, ஆத்திரம் அனைத்தையும் அளவோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதற்கு நேரெதிராக, உணர்வுக்குவியலாகப் படம் முழுக்க வந்து போயிருக்கிறார் விவேக் பிரசன்னா. நாயகனை விட அதிகமாக ‘பஞ்ச்’ டயலாக்குகள் பேசுவது அவரே.
இவர்கள் இருவரது சகோதரராக நடித்திருக்கிறார் பார்த்திபன்; அவர்கள் இருவரது பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டது போன்று நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.
தந்தையாக வரும் சந்தோஷை விட, தாயாக நடித்துள்ள ஸ்ரீஜா ரவிக்குத் திரைக்கதையில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இரண்டாவது மகனுக்குப் பெண் கொடுக்கப்போகும் நபரிடம் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாக வரும் காட்சி, அதற்கேற்பக் கனகச்சிதமாக வார்க்கப்பட்டுள்ளது.
தாத்தா ஏழுமலையாக வரும் மோகனசுந்தரம் படம் முழுக்கச் சும்மா வந்து போகிறாரே என்று பார்த்தால், அவரையும் ஒரு காட்சியில் பிரதானமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
இது போக மருமகள்களாக வரும் பிரியங்கா, ஜனனி மற்றும் பிரதான நாயகியாக வரும் சுபிக்ஷா காயரோகணம் திரைக்கதையோடு பொருந்தி நிற்கின்றனர். மூவருமே திரைப்பட நடிகைகளுக்கான அழகு இலக்கணத்தோடு இல்லை என்றபோதும், அவர்களது நடிப்பே அதனை மறக்கடிக்கிறது.
‘ஜோ’வில் காமெடியில் அசத்திய கவின் இதில் நாயகனின் நண்பன் மாணிக் ஆக வந்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ‘இதெல்லாம் கிரிஞ்சு’ என்று ரசிகர்கள் கத்துவதற்கு முன்பாகவே, அதே போன்றதொரு காமெடி வசனத்தைத் திரையில் இடம்பெற வைக்க இவரைப் பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
இவர்கள் தவிர்த்து தயாரிப்பாளர், முன்னணி நாயகனாக விளங்கும் அவரது தம்பி, நாயகியின் உறவினர்கள் உட்படச் சிலரோடு இசையமைப்பாளர் அனிவீயும் இப்படத்தில் தலைகாட்டியிருக்கிறார்.
’உறவுகளே தேவையில்லை’ என்று சொல்லும் திரைப்படங்களுக்கு மத்தியில், ‘கஷ்டநஷ்டத்துல துணையா நிக்கறது குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்’ என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
‘ஆனந்தம்’, ‘வானத்தைப்போல’, ‘சமுத்திரம்’ வகையிலமைந்த இக்கதையைச் சுவாரஸ்யமாகத் திரையில் சொல்ல முயன்றிருப்பது சாதாரண விஷயமில்லை. அதன் காரணமாக, இப்படம் நம்மைச் சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது, உணர்ச்சிவயப்பட வைக்கிறது, இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்படியொரு திரையனுபவத்தைத் தரும் இந்த ‘பேமிலி படத்தை’ குடும்பத்தோடு சேர்ந்தமர்ந்து பார்க்கலாம், ரசிக்கலாம், கொண்டாடலாம்.. அதற்கேற்ற உள்ளடக்கத்தைச் செறிவாகத் தந்திருக்கும் இயக்குனர் செல்வகுமார் திருமாறன் அண்ட் டீமுக்கு வாழ்த்துகள்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்