கேள்விப்படும்போது அதிர்ச்சியடையும் அளவிற்கு இருக்கிறது தமிழக குடும்ப நல நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள்.
ஏறத்தாழ 33,000 வழக்குகள் குடும்ப நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கிறவர்கள், கடந்த பத்தாண்டுகளில், பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு முழுக்க குடும்பத்தில் ஏற்படும் வெவ்வேறுப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கென்றே குடும்ப நல நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அம்மாதிரியான வழக்குகளை கையாள்வதற்கென்றே தனியான வழக்கறிஞர்கள் உருவானார்கள்.
சுமார் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கூட்டுக் குடும்பங்கள் பரவலாக இருந்தன. இன்னும் கூட சில இடங்களில் கூட்டுக் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அத்தகைய கூட்டுக் குடும்பங்களில், வாழ்கிற தம்பதிகளுக்கிடையே எதாவது கருத்து வேறுபாடோ, வேறுவகையான உட்பூசலோ இருப்பது தெரியவந்தால், அந்தக் கூட்டுக் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களே அவர்களை அழைத்துப் பேசி, சமரசப்படுத்தி அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு வரவழைத்துவிடுவார்கள்.
இதையும் மீறிய சில குடும்பப் பிரச்சனைகள் கிராமத்தில் அப்போது இருந்த நாட்டாமை மூலமாகத் தீர்க்கப்பட்டிருக்கிறது.
சில குறிப்பிட்டச் சமூகங்களில் அதன் தலைவர்கள் இத்தகைய சமரச முயற்சியை முன்னெடுத்து வந்தார்கள். ஏன், காவல் நிலையங்களில் கூட இத்தகைய குடும்பப் பிரச்சனைகளுக்கான சமாதான முயற்சிகள் நடந்திருக்கின்றன.
இதையெல்லாம் மீறித்தான் அப்போது மனமுறிவு கேட்டு நீதிமன்றங்களை அணுகுவது நடந்திருக்கிறது.
அப்படி நீதிமன்ற படியேறிய தம்பதிகளைக் கூட முதலில் அவர்கள் இருவரையும் வரவழைத்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பதை பரிசோதித்து, குறிப்பிட்ட கால இடைவெளிக் கொடுத்து அதன்பிறகே விவாகரத்துப் பெறுவது நடந்திருக்கிறது.
அப்போது சமூகத்தில் இருந்த கூட்டுக் குடும்ப உறவையும் அதில் சிலச்சில பிரச்சனைகள் ஏற்பட்டு பின் ஒரு சமாதானச் சூழல் நிலவுவதையும்தான் அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த திரைப்படங்கள் பிரதிபலித்தன.
குறிப்பாக இயக்குநர் பீம்சிங்கின் படங்கள். அவர் இயக்கிய பாகப் பிரிவினை, படிக்காத மேதை போன்ற பல படங்களை உதாரணம் காட்ட முடியும்.
அதற்கடுத்த தலைமுறையில் அதேமாதிரியான கருத்தாக்கத்தில், வேறு வடிவில் முன்னெடுத்தவர் இயக்குநர் விசு. அவருடைய படங்களில் மிகச்சிறந்த உதாரணமாக சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களைச் சொல்லலாம்.
இயக்குநர் வி.சேகர் போன்றவர்கள் தன்னுடைய திரைப்படங்கள் வழியாக வலியுறுத்தியதும் குடும்ப ஒற்றுமையைத்தான்.
90-களுக்குப் பிறகு குடும்பம் என்கின்ற அமைப்பில் காலத்தால் உருவான கீறல்கள் திரைப்படங்களிலும் வெளிப்பட்டன. நீதிமன்றங்களிலும் வெளிப்பட்டன.
இயக்குநர் மணிரத்னத்தின் மௌனராகம், இயக்குநர் பாலு மகேந்திராவின் மறுபடியும் போன்ற பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
குடும்ப மதிப்பீட்டிற்கு அடையாளமாகக் காட்டப்பட்ட தாலி என்பதே மாறிவரும் காலச் சூழ்நிலையில், கேலிக்குரிய ஒன்றாக வெவ்வேறு திரைப்படங்களில் காட்டப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக்குடித்தனங்கள் அதிகரித்த நிலையில், ஆண்களும் பெண்களும் சமநிகர் நிலையில் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிற நிலையில், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் வெவ்வேறு பூசல்கள் வழக்கு மன்றத்திற்குச் செல்ல ஆரம்பித்தன.
சன் டிவியில் அரட்டை அரங்கம் என்கின்ற பிரபலமான நிகழ்ச்சியை நடத்தியவரான இயக்குநர் விசு, ஒருமுறை பேட்டியில் இப்படிச் சொன்னார், “இப்போதெல்லாம் விவாகரத்துக் கேட்பதற்கான காரணங்கள் மிகவும் மலினமாக இருக்கின்றன. தான் தொலைக்காட்சிப் பார்ப்பதே தனது கணவர் தடுக்கிறார் என்பதை முன்வைத்துக் கூட விவாகரத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன”.
தமிழகத்தில் அதிகமான தற்கொலை முயற்சிகள் நடந்த பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, பூச்சி மருந்தை அவசரத்தில் குடித்து அதிலிருந்து காப்பாற்றப்பட்டு இயல்புக்குத் திரும்பியிருந்த ஒரு கிராமத்துப் பெண்மணி சொன்னார், “இந்த ஊர்ல எனக்குப் பிடிச்ச நடிகரோட படம் வெளிவந்துருக்கு… அதுக்கு போறதுக்குக் கூட என் புருஷன் அனுமதிக்கல.. இப்படி இருக்குறப்ப நம்ம எதுக்கு உசுரோட இருக்கணும்தா.. நேத்து அந்தப் பூச்சி மருந்தக் குடிச்சிட்டே…”
ஆக, குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கு மிக மெல்லிய காரணங்கள் கூட போதுமானதாக இருக்கின்றன.
முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் சில விவாகரத்துக்கு மூலமாக இருந்ததைப் போல, தற்போது செல்போன்கள் பல விவாகரத்திற்கு மூலமாக அமைந்து கொண்டிருக்கின்றன.
செல்போன் என்கின்ற தொடர்பு சாதனம் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் மன உறவுகளை மேலும் ஆழப்படுத்தி அல்லது விரிவுப்படுத்தி அவர்கள் பிரிவதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துவிடுகிறது.
இதில், பாதிக்கப்படுவது, அவர்களின் மனங்கள் ஒன்றிணைந்திருந்தபோது பிறந்த குழந்தைகள் தான்.
இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் 33,000 வழக்குகள் குடும்ப நல நீதிமன்றங்களில் தேங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. அவர்களில் பெரும்பாலானோர் எம்மாதிரியான பிரச்சனைகளுக்காக மனமுறிவு கோரியிருப்பார்கள்.
வழக்கறிஞர்கள் தரப்பில் மனமுறிவு கேட்பதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக ஆண்களிடம் வெகுவாகப் பரவியிருக்கும் குடிப்பழக்கத்தைச் சொல்கிறார்கள்.
எங்கெங்கோ டாஸ்மாக்-களிலும் தனியார் பார்களிலும் விற்கப்பட்டு அரசுக்குக் கூடுதல் வருமானத்தைத் தந்து கொண்டிருக்கும் மதுபானங்களும், விதவிதமான நவீனப்பட்டிருக்கிற செல்போன் ஆதிக்கமும்,
பணமதிப்பிழப்பிற்குப் பிறகு நாடெங்கும் நடுத்தரக் குடும்பங்களில் பரவியிருக்கும் பொருளாதார நெருக்கடியும்,
வேலையிழப்புகளும் இந்தவிதமான குடும்ப நலத்திற்கு எதிரான சிக்கல்களாகி உருமாறியிருக்கின்றன என்பதை வெளிப்படையாக உரைக்கிற விதத்தில் நமக்குச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது நம்மைச் சுற்றியுள்ள சமூக யதார்த்தம்.
– அகில் அரவிந்தன்