ராகங்களே தம்மைப் பாடச்சொல்லி தவமிருக்கும் ராட்சசப் பாடகர்!

மதுரை சோமு நினைவுகள்

ஜி.என்.பி என்றால் இசை சாம்ராட். அவர் முன் பாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனை பெரிய வித்வானுக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும். அப்படித்தான் ஒரு நாள் ஜி.என்.பியின் கச்சேரிக்கும் பின் அந்த இளைஞரின் கச்சேரி.

ஜி.என்.பி கல்யாணி ராகத்தை மிக அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தார். அந்த இளைஞனுக்குள் சிறு அச்சம் வந்தது. தன்னால் ஜி.என்.பி அளவுக்குப் பாட முடியாது என்று புலம்பினார்.

உடன் வந்திருந்த மிருதங்க வித்வானோ, “பேசாமல் நீ ஜி.என்.பி பாணியிலேயே உன் குரலில் பாடிவிடேன்” என்றார்.

கச்சேரி தொடங்கியது. ஜி.என்.பி முன்வரிசையில் அமர்ந்திருக்க அவர் பாணியிலேயே பாடி அசத்தினார் அந்த இளைஞன்.

நிகழ்ச்சி முடிந்ததும், ஜி.என்.பி மேடைக்கு வந்து, “நீ இனி சித்தூர் பிள்ளையின் சிஷ்யன் இல்லை. என்னோட சிஷ்யன்” என்று சொல்லித் தன் சால்வையை அவருக்கு அணிவித்தாராம். அந்த இளைஞர் வேறு யாருமில்லை மதுரை சோமு எனப்படும் மதுரை எஸ். சோமசுந்தரம்.

தஞ்சை மண்டலம், விவசாயம் போலவே இசையும் செழித்த மண். இங்கு பிறந்த இசை ஆளுமைகள் தமிழிசையையும் கர்னாடக இசையையும் இந்த தேசமெங்கும் கொண்டு சேர்த்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மதுரை சோமு.

சுவாமிமலையில் வாழ்ந்த பாரம்பர்யம் மிக்க இசை வேளாளக் குடும்பத்தில் பிறந்தவர் சோமு. அவர் தந்தைக்கு மதுரை நீதிமன்றத்தில் வேலை கிடைக்க அவர்கள் குடும்பமே மதுரைக்குக் குடி பெயர்ந்தது.

சோமுவின் சகோதரர்களான முத்தையா மற்றும் கல்யாணசுந்தரம் கால்பந்து விளையாட்டு வீரர்கள். அந்தக் காலத்தில் நடந்த டி.வி.எஸ். புட்பால் கிளப்புக்காக விளையாடியவர்கள். இவர்களுக்குக் குத்துச் சண்டையும் தெரியும். சோமுவுக்குக் குத்துச் சண்டை வீரராக ஆசை. ஆனால் இசையே அவரின் முதல் தெரிவாக இருந்தது.

பல குருக்களிடம் இசை பயின்றார். சென்னையில் வாழ்ந்த சித்தூர் சுப்பிரமண்யப் பிள்ளையிடம் இசை பயில விரும்பி குருகுல வாசம் செய்தார்.

சித்தூர் சுப்பிரமண்யப் பிள்ளைக்கு இருபத்தி ஐந்து சீடர்களுக்கும் மேல் இருந்தார்கள். ஆனாலும் அவர் சோமுவின் இசை ஆர்வத்தைப் பார்த்து சேர்த்துக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக சோமுவின் இசை ஞானமும் குரல் வளமும் பெறுகியது.

ஒரு கட்டத்தில் தனியே கச்சேரி செய்யும் தகுதி உனக்கு வந்துவிட்டதென்று குருநாதரே தம்புரா எடுத்துக்கொடுத்து அனுப்பிவைத்தார். அதன்பின் மதுரை சோமு தனியாகக் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.

சோமு, தனக்கென ஒரு பாணியைக் கடைப்பிடித்தார். அதாவது ரசிகர்களின் மனம் விரும்பும் பாடல்களைப் பாடுவது. பாடும்போது தன் மேதாவித்தனம் வெளிப்பட்டுவிடாமல் இனிமை வெளிப்படும் படிப் பாடுவது என்று வரையறை செய்துகொண்டார்.

தமிழ்க் கீர்த்தனைகளை அதிகம் பாட ஆரம்பித்தார். உணர்வுபூர்வமான அவரின் குரல் ரசிகர்களை ஆனந்தக் கண்ணீரில் திளைக்கச் செய்தது

ஆறு மணி நேரம் ஏழு மணி நேரம் தொடர்ந்து கச்சேரிகள் செய்வதில் மதுரை சோமு வல்லவர். தெலுங்குக் கீர்த்தனைகளே பெரும்பாலும் பாடப்பட்டுவந்த காலகட்டத்தில் தமிழ்ப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பாடினார் சோமு.

வள்ளலாரின் அருட்பா, சீர்காழி மூவரின் பாடல்கள், ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள், பாரதியார் பாடல்கள், திருப்புகழ் போன்றவை இவரின் கச்சேரியில் முக்கிய இடம்பிடித்தன.

கச்சேரியின் இறுதியில் தான் பாடிப் பிரபலமான சினிமாப் பாடலைப் பாடுவது அவர் வழக்கம். அதற்காகவே கூட்டம் எவ்வளவு மணி நேரம் ஆனாலும் கலையாமல் காத்திருக்கும்.

1946-ம் ஆண்டு ‘ஆனந்த விகடனி’ல் ‘ஆடல் பாடல்’ மதுரை சோமுவின் இசை குறித்த விமர்சனம் வெளியாகியிருந்தது.

“வித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும்.

ஸ்ரீசோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும்கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன.

அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வசதிகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்.

அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷ பாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன.

உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம்.

நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூர்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார்.

சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்” என்கிறது அந்த விமர்சனம்.

இதை கல்கி எழுதியிருக்கலாம் என்கிறார்கள். இந்த விமர்சனம் போற்றும் அம்சங்கள் அனைத்தும் சோமுவின் இசைப் பயணம் முழுவதும் தொடர்ந்தன.

தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் விருது, சங்கீத நாடக அகாடமியின் விருது போன்றவை இவரால் பெருமை அடைந்த விருதுகளில் சில.

ஆனால், அவற்றை எல்லாம் விடப் பெரிய விருது ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததுதான். இன்று மதுரை சோமு என்றதும் அவரின் பாடல்களை நினைவுகூரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஜி.என்.பி, செம்மங்குடி போன்ற ஆளுமைகளால் பாராட்டப்பட்டவர் சோமு. செம்மங்குடி ஒருமுறை, “ராகங்கள் எல்லாம் தேவதைகள். ராக ஸ்வரூபம் வெளிப்படும்படி பாட அந்த ராக தேவதையின் அருள் வேண்டும்.

பொதுவாக கலைஞர்கள் எல்லாம் அந்தத் தேவதையின் அருளை நோக்கித் தவமிருப்பார்கள். சோமுவைப் பொறுத்தவரை ராகங்கள் எல்லாம் ‘என்னைப்பாடு சோமு’, என்று சோமுவிடம் தவம்கிடக்கின்றன” என்றாராம்.

தன் வாழ்வை இசைக்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர் மதுரை சோமு. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடி அவரைப் பாடச் சொல்லிக் கேட்பார்களாம்.

ரசிகர்களை மதிக்கும் உன்னதக் கலைஞனான அவர் ரயில் நிலையங்களில்கூடப் பாடிய நிகழ்வுகள் உண்டு என்கிறார்கள்.

தமிழ் இசையைத் தன்னால் முடிந்தவரை பரப்பி தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் மதுரை சோமு. அவரின் பிறந்த தினமான இன்று (பிப்ரவரி – 9) அவரின் பாடல்கள் சிலவற்றைக் கேட்பதுவே அவருக்குச் செல்லும் நல் அஞ்சலி என்றால் மிகையல்ல.

  • நன்றி : விகடன்
Comments (0)
Add Comment