அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவை விளாசிய விஜய்!

கூட்டணிக் கணக்குப் பலிக்காது என எச்சரிக்கை

தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தெம்போடும், திராணியோடும் தயாராகி வருகிறார்.

விக்கிரவாண்டியில் நடந்த, தனது கட்சி மாநாட்டில், ‘’ஆட்சிக்கு வந்தால், கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு அளிக்கப்படும்” என அவர் பிரகடனம் செய்தது, தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மாநாட்டுக்குப் பிறகு, விஜய்யை மையம் கொண்டு தமிழக அரசியல் களம் சுழல ஆரம்பித்துள்ளது. மாநாட்டுக்கு பின்னர், அவர் சென்னையில் நடந்த பொது நிகழ்ச்சியில் முதன் முறையாக பங்கேற்றார்.

அது, அண்ணல் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா. விகடன் பிரசுரமும், ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் 992 பக்கங்கள் கொண்ட நூலைத் தொகுத்துள்ளது.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த நூலை விஜய் வெளியிட்டார். அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும், முன்னாள் நீதிபதி சந்துருவும் நூலைப் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பேசிய பலரும் விஜயை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். வரவேற்றுப் பேசிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், இதற்கு பிள்ளையார் சுழி போட்டார்.

‘தமிழக அரசியல் ஜல்லிக்கட்டில் துடிப்போடு நுழைந்துள்ள விஜய், இளைஞர்களை வசீகரித்துள்ளார். மத்திய அரசை ‘கொள்கை எதிரி’ என்றும், மாநில அரசை ‘அரசியல் எதிரி‘ என்றும் தெளிவாக அறிவித்துள்ளார்.

“ஒரே நேரத்தில், இரு அரசுகளுடன் மோதுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும்” என சீனிவாசன் சொன்னபோது, அரங்கில் பெருந்திரளாக கூடி இருந்த தவெக தொண்டர்கள், கரகோஷம் எழுப்பினர்.

சிறப்பு அழைப்பாளர்கள் பேசி முடித்த பின் மைக்கை பிடித்த விஜய், ஆரம்ப நாட்களில் அம்பேத்கர் எதிர்கொண்ட பிரச்சினைகளை நினைவு கூர்ந்தார். பின்னர், அரசியலை கையில் எடுத்தார்.

“இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் இன்றைய இந்தியாவை பார்த்து அவர் என்ன நினைப்பார்? என வினா எழுப்பிய விஜய், ’அம்பேத்கர் பிறந்த நாளை ஜனநாயக உரிமை தினமாக அறிவிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தபோது அரங்கம் ஆர்ப்பரித்தது.

‘ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல், சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்கிறது என்ற நம்பிக்கையைக் கொண்டு வரவேண்டும் – அதற்கு ஒருமித்தக் கருத்துடன் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது ஒரு கோரிக்கை.

“அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை இந்தியாவின் ’ஜனநாயக உரிமைகள் தினமாக’ அறிவிக்க வேண்டும் என்பது என்னுடைய மற்றொரு கோரிக்கை – இதனை மத்திய அரசிடம், நான் முன்வைக்கிறேன்” என்ற விஜய், உடனடியாக, நடப்பு அரசியலுக்கு வந்தார். மத்திய அரசை லேசாக தட்டியவர், மாநில அரசுக்கு சரமாரியாகக் குட்டு வைத்தார்.

இன்றைக்கும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியும் – அதை கண்டுகொள்ளாமல் ஓர் அரசு மேலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது – அங்குதான் அப்படி என்றால் இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?

சமூக நீதி பேசும் இங்கிருக்கும் அரசு, வேங்கைவயல் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.

பெண்களுக்கு எதிரான குற்றம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், மனித உயிர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன – தமிழக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பாதுகாப்புடன் முழுமையாக அளிக்கும், மக்களை நேசிக்கும் ஒரு நல்ல அரசுதான் இதற்கான தீர்வு.

இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், மக்களுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்வதும், சம்பிரதாயத்துக்காக மழை தண்ணியில் நின்று போட்டோ எடுப்பதிலும் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.

என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்கு சில நேரங்களில் அப்படி செய்யவேண்டியுள்ளது – மக்களுடன் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் – தமிழகத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களுடன் உணர்வுப்பூர்வமாகவும் எப்போதும் இருப்பேன்’ என்று ஆவேசப்பட்டார்.

நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில், ’200 பிளஸ் இடங்களில் வெல்வோம்’ என திமுக முழங்கி வருவதை, கோடிட்டுக் காட்டிய விஜய், அந்தக் கட்சிக்கு நேரடியாக எச்சரிக்கையும் விடுத்தார்.

மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கான அடிப்படை சமூக நீதிப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை, இது.

நீங்கள் உங்கள் சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்களின் கூட்டணிக் கணக்குகள் அனைத்தையும், 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்’ என கர்ஜித்தபோது, அரங்கம் அதிர்ந்தது. தவெக தொண்டர்களில் கரஒலி அடங்க வெகுநேரம் பிடித்தது.

‘இனிமேல்தான், தலைவரின் ஆட்டமே இருக்கு‘ என்று அர்த்தபுஷ்டியோடு புன்னகைக்கிறார்கள் கட்சியினர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment