திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ஆதவ் அர்ஜூனா?!

விஜயும் துணை போவதால் அதிர்ச்சி

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக உற்று நோக்கப்பட்ட நிகழ்வு ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூலின் வெளியீட்டு விழா.

கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, இந்த நூல் வெளியிடப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் விழா நடக்கவில்லை.

பல மாதங்கள் கழித்து, அம்பேத்கரின் நினைவு நாளான நேற்று (டிசம்பர்-6) வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நூலை வெளியிட்டார்.

திருமாவளவன், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், ஆயிரக்கணக்கில் விழாவுக்கு வந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில், விஜய் முன்னிலையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவை வறுத்தெடுத்தார். அப்போது இரு கட்சித் தொண்டர்களும்  கரஒலி எழுப்பினர்.

‘திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது‘ என உரையை ஆரம்பித்த ஆதவ், ’பட்டியலினத்தவர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற குரல் ஒலித்தபோது, அதற்கு ஆதரவாக முதல் குரலாக நடிகர் விஜயின் குரல் ஒலித்தது’ என ‘இளையத் தளபதி‘க்கு புகழாரம் சூட்டியவர், அதன் பின்னர் திமுகவை குறி வைத்து அம்புகளைத் தொடுத்தார் .

விஜய் 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறார் – இங்கே சிலர், சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செய்கின்றனர் – ஒரு நிறுவனம் எப்படி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது?’ என கேள்வி எழுப்பினார் ஆதவ் அர்ஜுனா.

திமுக – விசிக கூட்டணிக்கு உலை வைக்கும் வகையில் அவரது பேச்சு தொடர்ந்தது.

‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்கி, அதில் பட்டியலின மக்களை பங்கேற்க வைக்க வேண்டும் – இங்கு மன்னராட்சி நிலவுகிறது – ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கேட்டால் சங்கி என்கிறார்கள்.

2026-ம் ஆண்டு  அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் – தமிழகத்தில் புதிய அரசியலை மக்கள் உருவாக்க முடிவெடுத்துள்ளனர் – பிறப்பால் ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகக்கூடாது’ என கர்ஜித்து விட்டு ஓய்ந்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய விஜய், திருமாவைத் தாங்கி பிடிக்கும் வகையில் சில கருத்துகளைப் பதிவு செய்தார்.

‘அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது – அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்” என்றார் விஜய்.

தர்ம சங்கடத்தில் திருமாவளவன்:

இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளானார் திருமாவளவன். நூல் வெளியீட்டு விழா நடந்தபோது அவர் திருச்சியில் இருந்தார். இரவு 10 மணி வாக்கில் செய்தியாளர்களை அவசரம், அவசரமாக சந்தித்தார்.

‘நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என விஜய் கூறியிருக்கிறார் – அதில் எனக்கு உடன்பாடில்லை.

அப்படி எந்த அழுத்தமும் எனக்கு இல்லை – அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்’ என்றவர், ஆதவ் பேசிய கருத்துக்கும் பதில் அளித்தார்.

‘வாய்ஸ் ஆஃப் காமன்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தான் ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றார் – அவர் கூறியிருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு – கட்சிப் பொறுப்பல்ல – அது அவரின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா, விசிக கட்சியில் உயர் பொறுப்பில் இருப்பவர். அவர், விஜய் அரவணைப்போடு, திமுகவை கடும் வார்த்தைகளால் துளைத்திருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment