இன்று எழுத்தாளர்களும் நூல்களும் கூடி இருக்கின்ற அளவுக்கு வாசகர்கள் இல்லை என்பதே கசப்பான உண்மை.
வாசிக்க வேண்டும் என்பதனை அழுத்திச் சொல்லுகின்ற அளவுக்கு அவர்களே வாசிப்பை விட்டும் மிக மிக தூரமாக இருப்பது கண் கூடு.
முன்னட்டைகளோடும் முன்னுரைகளோடு மாத்திரமே வாசிப்பை முடித்துக் கொள்ளக்கூடிய பலரும் உள்ளனர்.
வாசித்து பல வருடங்களாகிய ஆசிரியர்கள் பலரை காணலாம்.
வாசிப்பு வாழ்வாக மாறாவிட்டால் வாசிப்பு பற்றி பேசி எப்பயனும் இல்லை.
மாணவர்களிடம் வாசிப்பை எதிர்பார்க்கக் கூடிய ஆசிரியர்கள் முதலில் வாசிக்க வேண்டும். வாசிக்க வேண்டிய நூல்கள் பற்றிய அறிமுகம் அனுபவம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.
அந்தப் புத்தகங்களை வகுப்பிலே அன்றாடம் அறிமுகம் செய்ய வேண்டும். அது குறித்து கலந்துரையாட வேண்டும். தங்களுடைய பாடங்களோடு தொடர்பான நூல்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
பாடசாலைகளிலே நூலகம் எந்தளவு தூரம் சிறப்பாக செயல்படுகின்றது என்பதனை அதிகார வர்க்கமும் நிர்வாகமும் கட்டாயம் பார்க்க வேண்டும். மேலதிகாரிகளும் வந்து நிர்வாகம் சார்ந்த விடயங்களை மாத்திரம் பார்க்காமல் மாணவர்களது வாசிப்புத் திறனை தேர்ச்சியை ஈடுபாட்டை கட்டாயம் அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வாசிப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாதாந்தம் கட்டாயப்படுத்தியாக வேண்டும்.
மாணவர்களது எழுத்தாக்கங்களுக்கான ஒரு புறச்சுவர் வெளிச்சுவர் (out door wall) திறந்த சுவர் ஒவ்வொரு பாடசாலையிலும் உருவாக்கப்பட வேண்டும். மாதாந்தம் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ஒரு மாத சஞ்சிகை மாசிகை பிரிசுரிக்கப்பட வேண்டும்
மாணவர்களிடம் கையடக்க தொலைபேசி பாவனை, போதைப் பொருளுக்கு அடிமையாதல், திரைகளுக்கு முன்னால் தம்மை மறந்து போதல் போன்றவற்றை பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் அவற்றுக்கான உருப்படியான தீர்வுகளையும் கல்விச் சமூகம் தர வேண்டும்.
ஊர் கூடி தேரிழுத்தால் மட்டுமே இது சாத்தியம்.
சுய கற்றல், சுய வாசிப்பு போன்றவற்றுக்கு போதனைகள் மட்டும் போதுமானதாக அமையாது. அதனை நடைமுறை சாத்தியப்படுத்தி கூடிய அனைத்து வழிமுறைகளையும் நாமே மாணவர்களின் பார்வைக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும்.
அதற்கான வழிகளையும் சமூகம் செய்ய வேண்டும்.
கல்விப்புலம் அதாவது ஆசிரியர்கள் இதை சாத்தியமாக்கினால் அடுத்த தலை முறை வாழும் மீளும்.
ஆகாய கோட்டைகள் மட்டும் கட்டிப் பயனில்லை. அவற்றைத் தரையிறக்கி கைகளில் சேர்த்து விடுவதற்கான படிகட்டுக்களையும் படிமுறையொழுங்கில் நாம் தான் அமைத்துக் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் வாசக உலகில் வாசகர்கள் ஆர்வத்தோடு இருப்பார்கள்.
– நன்றி: முகநூல் பதிவு