புஷ்பா 2 – முதல் பாகம் போல இருக்கிறதா?!

வெற்றியடைந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்போது, ‘முதல் பாகம் போன்று இல்லையே’ என்ற பேச்சு எழுவது இயல்பு.

போலவே, முதல் பாகம் நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்திருக்க, இதர பாகங்களோ மிகப்பெரிய ஓபனிங்கை பெறுவதென்பது உலகெங்கும் இருந்து வருகிறது.

ஒரு தெலுங்கு படமாக வெளியாகி, பின்னர் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டப்பிங் படமாக வந்து பெரும் வசூலைக் குவித்த ‘புஷ்பா’வின் இரண்டாம் பாகமும் அப்படியொரு சாதனையைப் படைக்குமா என்ற கேள்வியே தற்போது இந்தியத் திரையுலகை ஆக்கிரமித்திருக்கிறது.

சுகுமாரின் எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் அமைந்த இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடி உடன் பகத் பாசில், சுனில், அனுசுயா, ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், ஜகதீஷ் பிரதீப் பண்டாரி, சண்முக், அஜய், ஆதித்ய மேனன், பிரம்மாஜி, ஆடுகளம் நரேன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீலீலா ஒரு பாடலில் நடனமாடியிருக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசையை அவரோடு இணைந்து அமைத்திருக்கிறார் சாம் சி.எஸ்.

சரி, முதல் பாகம் போன்றே ‘பக்கா கமர்ஷியல் படம்’ ஆக அமைந்திருக்கிறது ‘புஷ்பா 2’?!

மனைவிக்காக..!

செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் மரம் வெட்டும் கூலியாளாகச் சேர்ந்து, பின்னர் தனியாக மரம் கடத்த ஆரம்பித்து, அதில் கைதேர்ந்து, எதிரிகளின் சவால்களைச் சமாளித்து,

அதே போன்று பல இடங்களில் செயல்பட்டு வரும் கடத்தல்காரர்களுக்கான சிண்டிகேட்டில் தலைமை இடத்தைப் பிடித்தது வரை, புஷ்பராஜ் எனும் புஷ்பாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களைச் சொன்னது முதல் பாகம்.

இரண்டாம் பாகமோ, ஜப்பான் நாட்டில் அவரிடம் இருந்து செம்மரக் கட்டைகளை டன் கணக்கில் வாங்கிவிட்டு பணம் அனுப்பாமல் இருக்கும் கடத்தல் கும்பலை அங்கேயே சென்று புஷ்பா துவம்சம் செய்வதில் இருந்து தொடங்குகிறது.

புஷ்பாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார் சித்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பன்வர் சிங் ஷெகாவத் (பகத் பாசில்). அதற்காக, புஷ்பாவின் ஆட்களோடு சேர்ந்து மரம் வெட்டுவது போன்று காட்டுக்குள் சென்று அனைவரையும் கையும் களவுமாகப் பிடித்து லாக்கப்பில் அடைக்கிறார்.

அதனை அறியும் புஷ்பா, அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களை ராஜினாமா செய்ய வைக்கிறார்; தனது ஆட்களை விடுவித்துச் செல்கிறார்.

அதனை அவமானமாகக் கருதும் ஷெகாவத், எப்படியாவது புஷ்பாவை மண்டியிட வைக்க வேண்டுமென்று கருவுகிறார்.

இந்நிலையில், தனது நலம் விரும்பி பூமி ரெட்டியை (ராவ் ரமேஷ்) அமைச்சர் ஆக்கும் நோக்கில் முதலமைச்சரை நேரில் சந்திக்கச் செல்கிறார் புஷ்பா.

வீட்டில் இருந்து கிளம்பும் அவரிடம், ‘முதலமைச்சரோட ஒரு போட்டோ எடுத்துட்டு வாங்க’ என்கிறார் மனைவி ஸ்ரீவள்ளி (ராஷ்மிகா மந்தனா). அதனை வீட்டு வரவேற்பறையில் மாட்டி வைக்க வேண்டும் என்கிறார்.

தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், மனைவிக்காக அதனைச் செய்யத் தயாராகிறார் புஷ்பா.

பூமி ரெட்டியையும் புஷ்பராஜையும் பார்த்ததும் முக மலர்ச்சியோடு பேசுகிறார் முதலமைச்சர் (நரேன்).

ஆனால், புஷ்பாவோடு புகைப்படம் எடுக்க மறுக்கிறார். ‘ஒரு கடத்தல்காரனோட எப்படி போட்டோ எடுக்கறது’ என்று முகத்திற்கு நேரே சொல்லிவிடுகிறார்.

அந்த அவமானத்தைப் பொறுக்க மாட்டாமல் மனதுக்குள்ளேயே புழுங்கும் புஷ்பா, முதலமைச்சர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது ‘வரும் ஜூலை 24ஆம் தேதி முதலமைச்சர் என் வீட்டுக்கு சாப்பிட வருவதாகச் சொன்னார்’ என்று செய்தியாளர்களிடம் கூறுகிறார்.

அதற்கு முன்னதாகவே, ‘நீங்கதான் அடுத்த முதலமைச்சர்’ என்று பூமி ரெட்டியிடம் சொல்லிவிடுகிறார்.

பூமி ரெட்டியின் கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கப் பெரும்பணம் தேவைப்படும் என்பதால், தன்னிடம் செம்மரக்கட்டைகளை வாங்கி அயல்நாடுகளுக்கு அனுப்பும் முருகன் (மைம் கோபி) போன்றவர்களைத் தாண்டி தானே நேரில் ‘டீல்’ செய்யத் தயாராகிறார்.

தான் அங்கம் வகிக்கும் சிண்டிகேட்டை சேர்ந்தவர்களிடம் 50 டன், நூறு டன் என்று மொத்தமாகச் செம்மரக்கட்டைகளை வாங்கி ஒரேநேரத்தில் மொத்தமாக இரண்டாயிரம் டன் கட்டைகளை அனுப்பத் தயாராகிறார்.

இந்த தகவல் புஷ்பாவின் தொழில்முறை எதிரியான மங்கலம் சீனுவுக்கும் (சுனில்) அவரதுமனைவி தாட்சாயிணிக்கும் (அனுசுயா) தெரிய வருகிறது. அவர்கள் அந்த விஷயத்தை ஷெகாவத்திடம் சொல்ல, அதன்பிறகு என்ன ஆனது?

புஷ்பா நினைத்தவாறு இரண்டாயிரம் டன் செம்மரக்கட்டைகளை அனுப்பினாரா? அவரிடம் பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் மனம் குமையும் ஷெகாவத் என்ன செய்தார்? இந்த விஷயத்தில் இறங்கியபிறகு புஷ்பாவின் எதிரிகள் பட்டியல் பெருகியதா என்பது போன்று பல கேள்விகளுக்கு நீட்டி முழக்கிப் பதிலளிக்கிறது படத்தின் இரண்டாம் பாதி.

‘புஷ்பா 2’ கிட்டத்தட்ட 3 மணி நேரம் 20 நிமிடங்கள் திரையில் ஓடுகிறது. என்னதான் பாடல்கள், சண்டைக் காட்சிகள், சவால் விடும் வசனங்களோடு நாயகன், நாயகி பாத்திரங்களின் கிளுகிளுப்புமிக்க தருணங்கள் தொடர்ச்சியாக வந்துபோனாலும், அவற்றை மீறிப் படம் போரடிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம் தொடங்கி சர்வதேச அளவில் பல டான்களை அதிர வைக்கிற நாயகன், தனது மனைவியின் அன்புக்கும் காதலுக்கும் மிரட்டலுக்கும் அடங்கி நடப்பதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் சுகுமார். அந்த காட்சிகளே இப்படத்தின் யுஎஸ்பி.

வழக்கமான தெலுங்கு படம்!

ஒரு கமர்ஷியல் படத்தில் கதாபாத்திரங்களின் தனித்துவமான குணாதிசயம், மேனரிசம், ஆடை அலங்காரம், பேச்சு போன்றவற்றில் வித்தியாசத்தைப் புகுத்தி,

அதனைப் பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என்று தொடக்கம் முதல் இறுதி வரை குறிப்பிட்ட சில நபர்களை நேரில் பார்க்கும் அனுபவத்தை உருவாக்குவது ஒருவகை உத்தி.

அதனைத் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுகுமார்.

முதல் பாகம் போன்று இல்லை என்றபோதும், இரண்டாம் பாகமானது ‘கேஜிஎஃப் 2’ வகையறாவில் ‘மாஸ் மொமண்ட்’களை நிறையவே கொண்டிருக்கிறது.

காவல் நிலையத்தில் நுழைந்து காவலர்களை விலைக்கு வாங்குகிற காட்சி ஒரு ரகம் என்றால், இடைவேளைக்குப் பின்னர் டன் டன்னாக மரங்களைக் கடத்திச் செல்லும் காட்சிக்கோர்வை இன்னும் ‘கூஸ்பம்ஸ்’ ஆக அமைந்திருக்கிறது.

தொடக்கம் மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளில் விஎஃப்எக்ஸ் ரொம்பவே ‘சுமார்’ ஆக அமைந்து, ‘என்னமா காதுல பூ சுத்துறாங்க’ என்று நம்மையறியாமல் புலம்ப வைக்கின்றன.

அது மட்டுமல்லாமல் சண்டைக் காட்சிகளில் அதீத வன்முறை, நாயகன் நாயகி சல்லாபக் காட்சியில் எல்லை மீறல், யதார்த்தத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத சித்தரிப்பு போன்றவை ‘தெலுங்கு படத்துல இதெல்லாம் வழக்கம் தானே’ என்று சொல்ல வைக்கின்றன.

அது போகச் சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்களையும் பொறுத்துக்கொண்டால், ‘ரோலர் கோஸ்டர் அனுபவம்’ போன்ற ஒரு ‘மாஸ்’ கமர்ஷியல் பட அனுபவத்தை இதில் தந்திருக்கிறார் சுகுமார்.

பெரும்பாலான காட்சிகள் கதாபாத்திரங்களை குளோஸ் அப்பில் காட்டுவதில் இருந்து தொடங்குகிறது; அதன்பிறகு, அது முடியும் வரை இடைவிடாமல் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டேயிருக்கிறது. அதன் மூலமாக, நம்மைப் படத்தோடு எளிதாக ஒன்ற வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மிரோஸ்லா குபா ப்ரோஸக்.

நவீன் நூலியின் படத்தொகுப்பில் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக ‘கட்’ செய்யப்பட்டிருக்கிறது. ‘வேண்டாம் இது’ என்று ஏதேனும் ஒரு காட்சியை நீக்கினால் திரைக்கதை ஓட்டம் தடைபடும் என்று சில இடங்களில் கத்திரி போட அவர் தயங்கியிருக்கிறார். அதனால், முன்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம்.

ராமகிருஷ்ணா – மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பு, கமல்கண்ணனின் விஎஃப்எக்ஸ் மேற்பார்வை ஆகியன இயக்குனர் வடிவமைத்த புஷ்பாவின் உலகத்தை நமக்குக் காட்ட உதவியிருக்கின்றன.

சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லை. ஆனாலும், திரையில் காட்டப்பட்ட வன்முறையைவிடப் பன்மடங்கு பெரிதாக ரசிகர்கள் கண்டுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் ‘புஷ்பா புஷ்பா’, ‘சூடான’ பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்கின்றன.

‘கிஸ்ஸிக்’, ‘பீலிங்க்ஸ்’ பாடல் வரிகள் கோங்குரா சட்டினியை அப்படியே அள்ளிச் சாப்பிட்ட உணர்வைத் தந்தாலும், பாடல்கள் ஆக்கப்பட்ட விதம் அதனால் ஏற்பட்ட அசூயையை மறக்கடிக்கின்றன.

சேஸிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளின்போது பின்னணி இசையில் சாம் சி.எஸ். அசத்தியிருக்கிறார்.

‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்வதற்கு வாய்ப்புள்ள கதை என்பதால் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் முதல் படத்தில் வரும் பல நடிகர்கள், நடிகைகள் அவ்வாறு குற்றம் சாட்டும் அளவுக்கான ‘பெர்பார்மன்ஸை’ தந்திருக்கின்றனர்.

ராவ் ரமேஷும் பகத் பாசிலும் நேரில் சந்தித்துப் பேசும் காட்சிக்கு தியேட்டரே அதிர்கிறது.
ஸ்ரீலீலா தோன்றும் ‘கிஸ்ஸிக்’ பாடல் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு பார்க்கலாமா?

முதல் பாகத்தில் தாய்க்கு முக்கியத்துவம் என்றால், இரண்டாம் பாகத்தில் மனைவிக்கு புஷ்பா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் திரைக்கதையை அமைத்திருக்கிறார் சுகுமார். அந்தக் காட்சிகள் நிச்சயமாகப் பெண்களைக் கவரும்.

அதேபோல, ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சி முழுக்க சேலை அணிந்து, பெண் போல அணிகலன்கள் அணிந்து தோன்றியிருக்கிறார். திருநங்கைகளை எளிதில் கிண்டலடிக்கிற வழக்கம் இருப்போரைத் துணுக்குற வைக்கும் வகையில் அக்காட்சிகள் உள்ளன.

ஆக்‌ஷன் காட்சிகள், நாயகன் வில்லன்களிடம் கர்ஜிக்கும் இடங்களை விட செண்டிமெண்ட் தருணங்களே அதிகமும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியவை.

தொடக்க வாரத்தில் வரும் இளசுகளுக்கு அது போரடிக்கும் அனுபவத்தைத் தரும் என்றாலும், அடுத்தடுத்த வாரங்களில் நடுத்தர வயதினரின் வருகைக்கு அது துணை நிற்கும்.

அதேநேரத்தில் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் தெறிக்கும் அதீத வன்முறை, நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காதல் வசனங்களில் உள்ள எல்லை மீறல்கள், பாலகிருஷ்ணா படங்களுக்கே சவால் விடும் வகையிலான காட்சியமைப்பு ஆகியன குழந்தைகளோடு படம் பார்க்க வரும் பெற்றோரைச் சங்கடத்தில் நெளிய வைக்கும்.

முதல் பாகத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் தெளிவான தொடக்கம், முடிவு இருக்கும். இதில் அது ‘மிஸ்ஸிங்’.

இறுதியாக, ‘புஷ்பா 2’க்காக தியேட்டரில் சுமார் 4 மணி நேரம் செலவழிப்பதென்பது பார்வையாளர்கள் உணரக்கூடிய இன்னொரு மைனஸ்.

இப்படிச் சில ப்ளஸ், மைனஸ்களோடு இருக்கும் ‘புஷ்பா 2’வை பார்க்கும் எவரும் ‘ஒருமுறை பார்க்கலாம்’ என்று அடுத்தவர்களுக்கு சிபாரிசு செய்யவே வாய்ப்புகள் அதிகம்.

தெலுங்கு படங்களின் ‘டப்’ பதிப்புகளைப் பார்க்கிற வாய்ப்பினை இன்று பல தொலைக்காட்சிகள் தந்து வருகின்றன. அதனால், ‘புஷ்பா 2’ அவர்களுக்குப் புதிதாக எந்த அதிர்ச்சியையும் தந்துவிடாது.

ஆக, ‘புஷ்பா’ தந்த அனுபவத்தை மறந்துவிட்டு இந்த இரண்டாம் பாகத்தைப் பார்ப்பது ஓரளவுக்கு நல்ல அனுபவத்தைத் தரும்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

புஷ்பா 2 விமர்சனம்
Comments (0)
Add Comment