வாழ்க்கை அதன் இயல்பிலேயே போகட்டும்!

நூல் அறிமுகம் : 

பரமபத சோபன படம்: கூடிப்போகும் கவிதை அனுபவம்

மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. தினசரி, தினமணி, ஆனந்தவிகடன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். தன் செய்திக் கட்டுரைகளுக்காக பல விருதுகளையும் ஒரு பத்திரிகையாளரின் கவிமனம் இந்தக் கவிதைத் தொகுப்பில் வெளிப்படுகிறது.

பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும் அவ்வப்போது வெளிப்படுவார்கள். அவர்கள் இயல்பில் அப்படித்தான் இருக்கிறார்கள். தங்களின் பணி வாழ்க்கை கலையிலிருந்து அவர்களை சற்று தள்ளிவைத்துவிடுகிறது. மேகங்கள் திரளும்போது அவர்கள் மழையாக பொழிந்துவிடுவார்கள்.

பொன். தனசேகரனின் இந்த கவிதைத் தொகுப்பு ஒருவிதத்தில் முந்தைய இரண்டின் நீட்சியாகவே வைத்துக்கொள்ள இடமுண்டு. எதிலும் கட்டுப்பாடு வேண்டாம். உங்கள் ஆசைகளை கருத்துகளைத் திணிக்கவேண்டாம். அதனதன் இயல்பிலேயே செல்லட்டுமே.

நடைவண்டி இல்லாமலே
நடை பழகும்
குழந்தைகள்

வாழ்க்கை அதன் இயல்பிலேயே போகட்டும். நம் செயல்களில் எதை விட்டுச் செல்கிறோம். தடங்கள் தேவையா, தண்ணீரில் தடத்தை அழித்துவிட்டு நீந்துகிறது மீன். வானில் பறந்துசெல்லும் பறவையின் கால்தடங்களை அழித்துச் செல்கிறது காற்று என்று நூலுக்கான அணிந்துரையில் கவித்துவமாகப் பேசுகிறார் ஆர். ராஜகோபாலன்.

முள்ளும் மலரும் என்ற கவிதையில் எதார்த்தமாக வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வை கவித்துவமாக மாற்றுகிறார்.

காலில் குத்திய
முள்ளை எடுத்தபோது
இலைகளுடன் நிழலைத் தொலைத்த மரம்
ஏங்கிக் கிடந்தது
காற்றின் தாலாட்டை நினைத்து

முள் மரத்திலிருந்து
விழுந்த நிழல்
என்னைக் குத்தவில்லை

மலர் என்று நெருங்கினேன்
அங்கே முள்

சமூகத்தின் கோபத்தை, சந்தேகங்களை, விமர்சனங்களை கவிதைகளாக மாற்றி நம்மைச் சிந்திக்கவைக்கிறார் கவிஞர் பொன் தனசேகரன். அவரது கவிதை நடை எளிமையாக இருக்கிறது. எந்த வார்த்தை விளையாட்டுகளும் இல்லை. வர்ணஜாலங்கள் இல்லை. எதார்த்தம்… எதார்த்தம்.

அலங்காரம், ஆடம்பரம், படாடோபம் தவிர்த்த நேரடியான பேச்சுவழக்கிற்கான சொற்கட்டு. எளிமையில் பிடிபட்டுப்போகாமல் வாசகன் அதையும் மீறிய கவிதைச்சாரத்தைக் கைக்கொள்ளும்போது கவிதை தரும் அனுபவம் மேலும் கூடிப்போகிறது.

******

நூல்: பரமபத சோபன படம்
ஆசிரியர்: கவிஞர் பொன். தனசேகரன்

போதிவனம் வெளியீடு
அகமது காம்ப்ளக்ஸ்
ராயப்பேட்டை
சென்னை – 14
விலை: ரூ. 100/-

Comments (0)
Add Comment