அன்றாடம் நாம் அணிந்து கொள்ளும் காலணிகள் இந்த காலச் சூழ்நிலைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்படுகிறது. ஆரம்பகாலக் கட்டங்களில் மிருகங்களின் தோல், மரம், இலை, தழை என எது கிடைக்கிறதோ அதையே பயன்படுத்தி வந்தனர்.
நாகரிகம் வளர வளர காலமாற்றத்தால் வித்தியாசமான, விதவிதமான காலணிகள் சந்தைக்கு வந்து குவிந்தன.
மழைக்காலம், கோடை காலம், பனிக்காலம் என மூன்று கால நிலைக்கு ஏற்றதுபோல் தனித்தனியாக காலணிகளும் காலுறைகளும் பயன்படுத்துகிறோம்.
நாம் அணிந்து கொள்ளும் காலணிகளுக்குப் போட்டியாக காலுறைகளும் வந்துவிட்டன. பலவிதமான வகைகளில் லோ கட் சாக்ஸ், கணுக்கால் சாக்ஸ், முழங்கால் சாக்ஸ் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இத்தனை சிறப்பு மிக்க சாக்ஸ், இதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி தேசிய சாக்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய சாக்ஸ் தினத்தில் அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தினமும் சாக்ஸ் பயன்படுத்துகின்றனர்.
கி.பி 2-ம் நூற்றாண்டுக்கு முன்பு மக்கள் காலணிகளை அணிந்திருக்கும்போது தட்பவெப்ப சூழ்நிலையில் இருந்து கால்களைப் பாதுகாப்பதற்கு சாக்ஸ் பயன்படுத்தத் தொடங்கினர்.
குளிர்காலம் மற்றும் வெயில் காலங்களில் தங்கள் கால்களைப் பாதுகாக்க உலர்ந்த விலங்குகளின் தோல்கள், உலர்ந்த துணி, போர்வைகளைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், இப்போது பருத்தி, கம்பளி, வெல்வெட் மற்றும் பாலியஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட பல வண்ணங்களில் கிடைக்கிறது.
தற்போது பல விதமான ஆடைகளுக்கு ஏற்றது போல் காலுறைகள் கலை மற்றும் ஃபேஷனை அடையாளப்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது.
அவர்கள் இந்த நாளைத் தொடங்க காரணமாக இருந்தது 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி “ஆன் யுவர் டோஸ்” என்ற பிராட்வே இசை நிகழ்ச்சிதான் காரணமாக அமைந்தது.
இந்த இசை நாடகம் ஆங்கிலேயர் இடையே மிகவும் பிரபலமானது “கால்-தட்டுதல்” நிகழ்வு. கால் தட்டுதல் என்பது க்ளோக் நடனம்.
இந்த நடனம் இரண்டு பேர்கள் ஆடக்கூடாது. கால்களில் ஷீ, சாக்ஸ் அணிந்து கொண்டு கால்களால் சத்தம் எழுப்புவது. க்ளாக் வடிவில் ஒருவரை ஒருவர் சுற்றி நடனம் ஆடுவதாகும். இது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான நடனமாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி முடியும்போது தேவைப்படுபவர்களுக்கு சாக்ஸ் நன்கொடையாக வழங்கினர். அதிலிருந்து சாக்ஸ் பிரபலமாகத் தொடங்கியது.
இதன் காரணமாக பல இடங்களில் சாக்ஸ் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக சாக்ஸ் தினம் அறிவிக்கப்பட்டது.
அதிலிருந்து ஆண்டு தோறும் டிசம்பர் 4ஆம் தேதி தேசிய சாக்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
தற்போது பலவிதமான சாக்ஸ் ஆடைகளுக்கு ஏற்றது போல் சந்தைகளில் வடிவமைக்கப்படுகிறது. இதில் எத்தனை விதமான சாக்ஸ் இருக்கிறது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
கணுக்கால் சாக்ஸ் (Ankle socks)
இந்த சாக்ஸ், கட் ஷூ அணியும் போதும் சுடிதார், சல்வார் கமீஸ்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஜிம் செல்பவர்களுக்கு எளிதாக அணிந்துகொள்ள ஏற்றதாகவும் நல்ல ஸ்டைல் லுக் தரக்கூடியதுமாக உள்ளது. கவுன் டைப் மற்றும் ஸ்கர்ட் உடைகளுக்கும் இது நன்றாக இருக்கும்.
ஷீர் சாக்ஸ்
இந்த மாதிரியான ஷீர் சாக்ஸ் சுடிதார், புடவை, லெஹங்காக்கள், அனார்கலி போன்ற ஆடைகளுக்கு ஏற்றதாக இருக்கும். சுடிதார்களுக்கு இவை பொருத்தமாக இருந்தாலும் தட்டையான செருப்புகள் அல்லது ஹீல்ஸ் அணிந்தால் மட்டுமே லுக்காகத் தெரியும்.
காட்டன் க்ரூ சாக்ஸ்
இது வியர்வையை உறிஞ்சக்கூடியவை, வெயில் காலங்களுக்கு ஏற்றது. சல்வார் கம்மீஸ், குர்த்தாவுடன் கூடிய லெக்கின்ஸ் அல்லது சுடிதார் போன்ற ஆடைகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.
எம்பிராய்டரி சாக்ஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தேர்வாக உள்ளது. பாரம்பரிய நிகழ்ச்சி, திருமணம், மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளான லெஹங்காக்கள், புடவைகள் அல்லது சுடிதார்களுக்கு அணிந்து கொள்வோம். அப்படி செல்லும் போது இந்த மாதிரியான சாக்ஸ் அணிந்து கொள்வது அழகாக இருக்கும்.
நோ ஷோ சாக்ஸ்
இந்த வகையான சாக்ஸ் அணிந்திருப்பது வெளியில் அவ்வளவாக தெரியாது. அணிவதற்கு வசதியாகவும் நாம் அணியும் ஷூக்களுடன் அணிந்து கொள்ளலாம். பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கும்.
லெக் சாக்ஸ்
இந்த வகையான சாக்ஸ் முழங்கால் வரை இருக்கக் கூடியது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்கர்ட், ஷார்ட் பேண்ட் போடுபவர்கள் சாதாரண செருப்புகளுடன் அணிந்து கொள்ளலாம்.
கம்பளி சாக்ஸ்
குளிர் காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும் வெதுவெதுப்பாக இருக்கக் கூடியது. பார்ப்பதற்கு அழகாகவும் கால்களுக்கு இதமாகவும் இருக்கும்.
ஷூ மற்றும் பூட்ஸ்கள் அணிந்து கொள்ளலாம். இதற்கு ஏற்ற உடை என்றால் குர்தாக்கள் உல்லன் சல்வார் கம்மீஸ் பொருத்தமாக இருக்கும்.
தற்போதைய நாகரிக உலகத்தில் சாக்ஸ்களும் ஆடைகளுக்கு இணையாகப் போட்டி போட்டுக்கொண்டு விதவிதமாக கிடைக்கிறது.
ஆகவே, டிசம்பர் 4 தேசிய சாக்ஸ் தினமான இன்று முதல் ஆடைகளுக்கு ஏற்ற சாக்ஸ் வகைகளை நாமும் தேர்ந்தெடுக்கப் பழகுங்கள்.
– யாழினி சோமு