அச்சு ஊடகங்களுக்கு மாற்றாக காட்சி ஊடகங்கள் வந்த பின் சினிமாத் தொழில் நசிந்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள், யூடியூப் சேனல்கள் ஈசல்களாக முளைத்தன.
இவை திரைப்படங்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக அண்மைக்காலமாக புலம்பல்கள் அதிகரித்துள்ளன. உச்ச நட்சத்திரங்களின் படங்கள், இந்தத் தளங்களின் எதிர்மறை விமர்சனத்தால் தோல்வி கண்டன.
இந்த நிலையில் ஆற்றல்மிகு (ஆக்டிவ்) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுச்செயலாளர் சிவலிங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களின் சாரம்சம், இது:
”எங்களது சங்கம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் இணைப்புப் பாலமாக இருந்து வருகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கும், அதன் செலவினங்கள், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவது போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறோம்.
அண்மைக்காலமாக புதிய திரைப்படங்களை யூடியூப் சேனல்கள், வலைதளப் பக்கம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விமர்சனம் என்ற பெயரில் திட்டமிட்டு எதிர்மறையாக அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பு உள்ளது.
திரைப்படங்களைக் கண்காணித்து தணிக்கை செய்ய தணிக்கை வாரியம் உள்ளது – ஆனால் யூடியூப் போன்ற வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க எந்த வழிமுறைகளும் இல்லை.
இதனால் இஷ்டம் போல யார் வேண்டுமென்றாலும் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளது – இந்த எதிர்மறை விமர்சனங்கள் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்களின் மனநிலையை மாற்றி, பல திரைப்படங்களைத் தோல்வியடைய செய்கிறது.
இதனால் பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரிக்கும் படத் தயாரிப்பாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகிறார்கள்
எனவே புதிதாக திரைப்படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களைப்பற்றி முதல் மூன்று நாட்களுக்கு விமர்சிக்கத் தடை விதிக்க வேண்டும்.
அதேபோல புதிய திரைப்படங்கள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப யூடியூப், எக்ஸ் வலைதளப்பக்கம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் – இதுதொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்’
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், ”பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்களை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் அவதூறான எதிர்மறை கருத்துக்களைத் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்
இதனால் படங்களைப் பார்க்கச் செல்லும் மக்களின் மனநிலை மாறுகிறது – திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகை, இயக்குநர் குறித்தும் அவதூறு பரப்புகின்றனர்- எனவே முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்யத் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி சவுந்தரராஜன் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
”விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம்.
அதேநேரம் பொதுவெளியில் விமர்சிப்பது என்பது தனிமனித கருத்துச் சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. – சில திரைப்படங்களுக்கு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் வருகிறது.
மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும், யூடியூப் நிறுவனங்களும் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்” என தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.
இரு அரசுகளும், யூடியூப் சேனல்களும் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதைத் தயாரிப்பாளர்கள், ஆவலோடு எதிர்நோக்கி உள்ளார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.