எந்தவொரு நடிகருக்கும் முதல் படம் என்பது எப்போதும் சிறப்பானதாக அமையும். அது தந்த சிறந்த, மோசமான அனுபவங்களையும் தாண்டி, அதன் உருவாக்கத்தில் எதிர்கொண்ட மனநிலை என்றென்றும் நினைவில் நிற்கும்.
அதுவும் குழந்தை நட்சத்திரமாகச் சில படங்களில் தலைகாட்டிய வாரிசுகளுக்கு அந்த ‘ஹீரோ அந்தஸ்து’ நினைவுகள் அவ்வப்போது கண் முன்னே நிழலாடும்.
அந்த வகையில், விஜய்யின் திரைப்பயணத்தில் ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் முக்கியத்துவம் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை.
புரட்சி நாயகன்!
நாயக பாத்திரத்தின் சிறு வயதைக் காட்டும் வகையில் வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி படங்களில் தலைகாட்டியிருக்கிறார் விஜய்.
அந்த தருணங்கள் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் அவர்களைச் சார்ந்த சிலருக்கும் வேண்டுமானால் நினைவில் இருக்கலாம். ரசிகர்களுக்கு அது பற்றிப் பெரிதாக நினைவுகள் இருக்காது.
காரணம், விஜய்யின் இருப்பைக் கொண்டாடுகிற அளவுக்கு அவர் நடித்த பாத்திரங்களின் முக்கியத்துவம் அப்படங்களின் கதையமைப்பிலோ, காட்சியமைப்பிலோ இல்லை. அதனாலேயே, அவர் நாயகனாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’, ரசிகர்களைப் போலவே அவருக்கும் முக்கியத்துவமிக்க படமாக இருந்து வருகிறது.
எண்பதுகளில் வந்த பெரும்பாலான படங்களில் நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சேர்த்துக் கோர்த்தால் ’நாளைய தீர்ப்பு’ கதை நமக்குக் கிடைத்துவிடும்.
ஒரு பெரிய தொழிலதிபர். அவர்தான் அரசின் அங்கமாக இருக்கும் அமைச்சர்களை ஆட்டுவிக்கும் அளவுக்குச் செல்வாக்கோடும் பண பலத்தோடும் இருக்கிறார். ஆனால், அவரது மகனும் மனைவியும் தனியே ஏழ்மை நிலையில் வாழ்கின்றனர்.
அந்த மகன் தான் நாயகன். அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண்ணை அந்த தொழிலதிபரின் வளர்ப்பு மகன் கடத்திச் செல்கிறார். அவரைக் கொலை செய்கிறார்.
அதற்குப் பழி வாங்கும் வகையில், சட்டத்தின் பிடியில் அந்த தொழிலதிபரையும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் நிறுத்த முயற்சிக்கிறார் அவரது மகன். அது நடந்ததா, இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தில் நாயகன் பெயரும் விஜய் தான். பொது இடத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கத் துடிப்பது, அநீதிக்குத் துணை நிற்கும் பெரிய மனிதர்களை முழு மூச்சோடு எதிர்ப்பது, சக நண்பர்களின் அறியாமையைப் போக்க உரத்த குரலில் உண்மைகளை உதிர்ப்பது என்று புரட்சி நாயகனாக இதில் அப்பாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும்.
மேற்சொன்னவை மூலமாக, அக்காலகட்டத்தில் வெளியான வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பெறத்தக்க வகையில் குறிப்பிட்ட பார்முலாவில் ‘நாளைய தீர்ப்பு’ அமைந்திருப்பதை உணரலாம்.
பாராட்டும் தூற்றலும்..!
ஷோபா இப்படத்தின் கதையை எழுத, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இமயவரம்பன் இதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். கௌதம் ராஜ் இதன் படத்தொகுப்பைக் கையாண்டிருந்தார்.
டைட்டில் காட்சியில் விஜய் உடற்பயிற்சி செய்யும் ஷாட்கள் காட்டப்பட்டிருந்தாலும், அவரது முகம் தெளிவாக வெளிப்பட்டிருக்காது. அவர் தனது தாயிடம் பாசத்தை வெளிப்படுத்துவதாக, படத்தின் முதல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் அவரைக் காட்டும்போது, ‘விஜய் அறிமுகம்’ என்று திரையில் எழுத்துகள் தோன்றும். இந்த உத்தியை ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட படங்களில் விஜய் பாடும் பாடல்களில் பயன்படுத்தியிருப்பார் எஸ்.ஏ.சி.
‘நாளைய தீர்ப்பு’ படத்தில் பெரியளவில் நடனத்துக்கேற்ற பாடல்கள் இல்லை. ஆனாலும் ’உடலும் இந்த உயிரும்’, ‘வாடை குளிர்காற்று’, ‘மாப்பிள்ளை நான் சொல்லப்போறேன் கேட்டுக்கோ’ பாடல்களில் விஜய்யின் நடனம் ரிதத்துடன் பொருந்தியிருப்பதைக் காண முடியும்.
அதே பெர்பெக்ஷனை இன்றுவரை திரையில் அவர் வெளிப்படுத்துவதன் பின்னணியில், அவரது தொடர்ச்சியான பயிற்சியும் ஈடுபாடும் இருக்கிறது.
மணிமேகலை என்ற பெயரில் இப்படத்திற்கு இசையமைத்தவர் எம்.எம்.ஸ்ரீலேகா. இசையமைப்பாளர் கீரவாணி, எஸ்.எஸ்.ராஜமௌலியின் உறவினர் இவர்.
இப்படத்தின் வழியே அறிமுகமானாலும், பின்னாளில் அவர் அதிகளவில் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் பங்களிப்பைத் தந்தார்.
கீர்த்தனாவோடு இதில் ஈஸ்வரி ராவும் நாயகியாக நடித்தார். விஜய்யின் பெற்றோராக ஸ்ரீவித்யா, ராதாரவி நடித்தனர்.
இவர்கள் தவிர்த்து மன்சூர் அலிகான், எஸ்.எஸ்.சந்திரன், வினுசக்ரவர்த்தி, கே.ஆர்.விஜயா, சரத்பாபு உள்ளிட்ட பலர் இதிலுண்டு.
தாமு, சாப்ளின் பாலு இருவரும் நடித்தாலும், இதில் பெரிதாக நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. உண்மையிலேயே விஜய்யின் கல்லூரித் தோழரான ஸ்ரீநாத், இதில் நான்கைந்து காட்சிகளில் அவர்களோடு வந்து போயிருப்பார்.
இதன் பிறகு மாண்புமிகு மாணவன், வேட்டைக்காரன், மாஸ்டர் படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.
நாளைய தீர்ப்பு பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், சிறந்த அறிமுகம் எனும் பெயரில் சில விருதுகளை விஜய்க்குப் பெற்றுத் தந்தது. அதற்கடுத்து வெளியான செந்தூரப் பாண்டி, ரசிகன் வழியே பி, சி செண்டர்களில் புகழ் பெற்ற முகமாக அவர் மாறினார்.
ஆனாலும், சில பத்திரிகை விமர்சனங்களில் பாராட்டுதல்களைப் போலவே தூற்றுதல்களையும் விஜய் சந்திக்க நேர்ந்தது. பின்னாளில் அதே பத்திரிகைகள், தினசரிகளில் அவரது பேட்டிகள் வெளியானதும், அவற்றின் பிரதிகள் அதிகமாக அச்சடிக்கப்பட்டதும் தனிக்கதை.
‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அமைந்த விஜய்யின் தோற்றத்தைச் சமீபத்தில் வந்த ‘தி கோட்’ படத்தில் ஒரு காட்சியில் பயன்படுத்தியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு.
‘நாளைய தீர்ப்பு’ பட கதாபாத்திரம் போலவே உணர்ச்சிவசப்பட்டு வசனம் பேசும் வகையில் அந்தக் காட்சியை அமைத்திருந்தது இப்படத்திற்கு அர்ப்பணம் செய்யும்விதமாக இருந்தது.
சிகரம் தொடும் உத்வேகத்தோடு முதன்முறையாக மலையேறும் ஒரு வீரனைப் போன்று, இன்னொரு விஜயகாந்த் ஆகும் நோக்கோடு ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகமானார் விஜய்.
இன்று தமிழ் திரையுலகில் அவர் வகிக்கும் இடம் நாம் அறிந்ததே. அதற்கு அடித்தளம் இட்ட திரைப்படம் என்ற சிறப்பு என்றென்றும் இப்படத்திற்கு உண்டு.
‘நாளைய தீர்ப்பு’வில் விஜய் நாயகனாக அறிமுகமாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கின்றன.
- மாபா