ஹீரோவில் இருந்து ’வில்லன்’!

சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த வாரம் முதல் இணையத்தில் உலா வருகிறது. அந்தப் படம் குறித்து முறையான அறிவிப்பு வெளிவராத நிலையில், ‘வலைப்பேச்சு’ உள்ளிட்ட சில யூடியூப் தளங்களில் அது வெளியானது.

‘ஜெயம் ரவி வில்லனா’ என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சாதாரணமாகப் படம் பார்க்கிறவர்களும் கூட ‘ஞே’ என்று முழிக்கிற வகையிலான தகவல்தான் அது. எந்தளவுக்கு அதில் உண்மை இருக்கிறது என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

அதேநேரத்தில், கடந்த காலத்திலும் கூட இது போன்ற சில ஆச்சர்யகரமான தகவல்களை ரசிக உலகம் எதிர்கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. காரணம், ‘இவரெல்லாம் வில்லனாக நடிக்க மாட்டார்’ என்று ரசிகர்கள் நினைத்த பலர் வில்லன்களாக, ஆன்ட்டி ஹீரோக்களாக திரையில் அவதரித்திருக்கின்றனர்.

’வில்லனாக மட்டுமே நடிக்க முடியும்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் நாயகனாகத் திரையில் தோன்றி ‘நல்ல அபிப்ராயங்களை’ ரசிகர்களிடத்தின் பெற்றிருக்கின்றனர்.

சரி, நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சில நாயகர்களின் ‘வில்லன்’ அவதாரங்களைப் பார்க்கலாமா?

எம்ஜிஆரும் சிவாஜியும்..!

 ‘சதிலீலாவதி’க்குப் பிறகு சிறு வேடங்களில் எம்ஜிஆர் சுமார் பதினைந்து படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அவற்றில் நாயகர்களுக்கு எதிரான நிலையில் நிற்கும் பாத்திரங்களில் தோன்றியிருக்கிறார்.

‘மீரா’ படத்தில் நாயகியைத் துன்புறுத்தும் அரசரின் கையாட்களில் ஒருவராக எம்ஜிஆர் தோன்றியிருக்கிறார்.

அது வில்லத்தனம் நிறைந்த ஒரு பாத்திரமாக அமைந்தது. பின்னாட்களில் ‘குடியிருந்த கோயில்’, ‘நினைத்ததை முடிப்பவன்’ போன்ற மிகச்சில படங்களில் லேசாக வில்லத்தனத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

நல்லவன், கெட்டவன், இரண்டும் கலந்த மனிதன் என்று விதவிதமான பாத்திரங்களில் தன்னைப் பொருத்திக் கொண்டு திரையில் வெவ்வேறு அனுபவங்களைத் தந்தவர் சிவாஜி கணேசன். நடிக்க வந்த புதிதிலேயே ‘அந்த நாள்’ படத்தைத் தைரியமாகத் தேர்ந்தெடுத்தவர்.

பிறகு திரும்பிப்பார், கூண்டுக்கிளி என்று சில படங்களில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் அது கனகச்சிதமாக அமைந்திருக்கும்.

வில்லனாக ’ஜெமினி’!

மிகவும் மென்மையான பாத்திரங்களில் மட்டுமே தோன்றுவார் என்றிருந்த ஜெமினி கணேசனின் திரைப்பிம்பத்தை ‘நான் அவன் இல்லை’ போன்ற சில படங்கள் சுக்குநூறாக்கியிருக்கின்றன. அதற்கு முன்னரே, மாடர்ன் தியேட்டர்ஸின் நூறாவது படமான ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் அவர் வில்லனாகத் தோன்றியிருக்கிறார்.

அந்த படத்தில் வில்லன் நடிகர்களான அசோகன், மனோகர் இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர். ஆங்கில பட பாணியில் கதை மட்டுமின்றி, காஸ்ட்டிங்கும் அந்த காலத்தில் இருந்ததற்கான சான்று அந்தப் படம்.

எழுபதுகளில் தலையெடுத்த நாயகர்களில் ஜெய்சங்கர் ‘முரட்டுக்காளை’யில் வில்லனாக மாறியிருந்ததும், ‘ஊமை விழிகள்’ படத்தில் ரவிச்சந்திரன் ‘சைக்கோ’ வில்லனாக மிரட்டியிருந்ததும் நாம் அறிந்ததே.

’மலபார் போலீஸ்’ படத்தில் சிவகுமார் வில்லனாக நடித்தார். ஜெய் கணேஷ், விஜயகுமார் உட்பட அந்த தலைமுறை நடிகர்களில் பலர் அவ்வாறு வில்லன்களாக மாறியிருக்கின்றனர்.

வில்லனுக்கு மரியாதை!

ரஜினிகாந்த், சத்யராஜ், தியாகராஜன் என்று எண்பதுகளில் பலர் வில்லன்களாக இருந்து நாயக நிலையை எட்டினர். அவர்களுக்குக் கிடைத்த பெயரும் புகழும் பலரை அப்படியொரு பாதையைத் தேர்ந்தெடுக்க வைத்தது. தொண்ணூறுகளில் ஆனந்தராஜ், சரத்குமார் போன்றோர் அந்த வழியில் சில படங்களில் நடித்தனர்.

தெலுங்கில் மோகன்பாபு, கன்னடத்தில் பிரபாகர் உட்படப் பலர் அவ்வாறு நாயகன்களாக ஆனார்கள்.

அந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாயகர்கள் வில்லன்களாக நடிக்க விருப்பப்படவில்லை. ஆனால், ‘பாஸிகர்’ மூலமாக ஷாரூக்கான் இந்தி திரையுலகில் அதனைச் சாதித்தார். தொடர்ந்து நெகடிவ் பாத்திரங்கள் மூலமாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து பின்னர் பெரிய ஹீரோவாக உருவெடுத்தார்.

தமிழில் சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியொரு ‘ட்ரெண்ட்’ உருவானது.

‘வாலி’யில் இரட்டை வேடத்தில் நடித்த அஜித், வில்லத்தனத்தில் மிரட்டினார். அது, அவரது திரை வரலாற்றில் முக்கியமான படமாக மாறிப் போனது.

’பிரியமுடன்’ படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்த விஜய், பின்னர் அழகிய தமிழ்மகன், சமீபத்தில் வந்த தி கோட் படங்களில் அவ்வாறு நடித்திருக்கிறார்.

’ஆளவந்தான்’ படத்தில் கமலும், ‘எந்திரன்’ படத்தில் ரஜினியும் கூட ‘டெரர் வில்லன்’களாக திரையில் மிரட்டியிருக்கின்றனர்.

‘24’ படத்தில் சூர்யா, ‘இருமுகன்’ படத்தில் விக்ரம் போன்றோரும் அப்படி நடித்திருக்கின்றனர். மேற்சொன்ன படங்களில் சில சம்பந்தப்பட்ட நாயகர்கள் இரட்டை வேடங்களில் இடம்பெற்றிருந்தனர்.

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியான ‘மங்காத்தா’வில் முழுக்க வில்லனாகவே தோன்றியிருந்தார் அஜித்குமார். அர்ஜுனும் அதில் அப்படியொரு வேடத்தில் நடித்திருந்தார்.

’அஞ்சாதே’வில் பிரசன்னா, ‘நாணயம்’ படத்தில் சிபிராஜ் போன்றோர் வில்லன்களாக நடித்தனர். அது, ஹீரோவாக அவர்கள் நடித்த படங்களைக் காட்டிலும் பெரும்புகழ் தந்தது.

அந்த வகையில் சில படங்களில் வில்லனாக நடித்து சில நடிகர்கள் நம் கவனத்தைக் கலைத்தார்கள்.

‘என்னை அறிந்தால்’ அருண் விஜய், ‘தனி ஒருவன்’ அரவிந்த் சுவாமி, ‘எனிமி’ ஆர்யா, ’மாஸ்டர்’ விஜய் சேதுபதி, ‘கர்ணன்’ நட்டி, ’மாநாடு’ எஸ்.ஜே.சூர்யா, ‘வலிமை’ கார்த்திகேயா, ’டாக்டர்’ வினய் என்று நீள்கிறது இந்த வரிசை.

ஒரு படத்தில் நாயகனாக நடிப்பவர், இன்னொரு படத்தில் நகைச்சுவையாகவோ, குணசித்திர பாத்திரத்திலோ அல்லது வில்லன் வேடத்திலோ நடிக்கிற வழக்கம் மலையாளத் திரையுலகில் இருந்து வருகிறது. படம் முழுக்க வருகிற ஒரு நட்சத்திரம், இன்னொரு படத்தில் இரண்டொரு காட்சிகளில் இன்னொரு பாத்திரமாக வந்து போவதும் நிகழ்கிறது.

அப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பதாலோ என்னவோ, சிறப்பான நடிப்பைத் தந்தால் ‘வில்லனுக்கும் மரியாதை உண்டு’ என்கிறது இளைய தலைமுறை. அவர்களது வரவேற்பைப் புரிந்துகொண்ட நாயக நடிகர்களில் மிகச்சிலரே, திரைக்கதையில் தங்களுக்கான இடத்தை ஏற்றுக்கொண்டு வில்லனாகத் தோன்றுகின்றனர். மேற்சொன்னது போன்று ஒரு நடிகர் எந்தப் பாத்திரத்திலும் நடிக்கத் தயார் எனும் சூழல் அமைகிறபோது, தியேட்டரில் படம் முழுக்க விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படியொரு சூழ்நிலை விரைவில் வர வேண்டும்..!

மாபா

Comments (0)
Add Comment