தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமான வீச்சோடு பலவிதமான புயல்கள் கடந்து போயிருக்கின்றன. 2015-ம் ஆண்டு புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக பாதிப்புகளை உருவாக்கிக் கடந்து போயிருக்கிறது ஃபெஞ்சல் புயல்.
புயல் வருவதற்கு முன்பே புயல் குறித்த வானிலை மையத்தின் அறிக்கையும், தனியார் வானிலை கணிப்பாளர்களின் அறிக்கையும் மாறுபட்டிருந்தன.
முதலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று அறிவித்தார்கள், அது புயலாக மாறாது என்று அறிவித்தார்கள். பிறகு சட்டென்று புயல் உருவானதாக அறிவித்தார்கள்.
அது தமிழகத்தின் எந்தப் பகுதியில், எப்போது கடந்து போகும் என்று அறிவித்தார்கள். ஆனால் புயல் அதுக்குரிய நிதானத்தோடு மிகவும் பொறுமையாக ஒரு இடத்தைக் கடந்து செல்வதைப்போல தமிழகத்திற்குள் தாமதமாகத்தான் நுழைந்தது.
சென்னை பெருநகரம் இதனால் பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது என்றாலும் கூட, புயலால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்டப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
இவற்றில் சில பகுதிகளில், புயல் தாக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையை இந்த வானிலை குறித்த அறிவிப்புகள் வெளிப்படுத்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு மிகவும் துயர் தரக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது. அங்கு நேர்ந்த நிலச்சரிவின் காரணமாக ஒரே வீட்டில் இருந்த ஏழு உயிர்கள் மண்ணுக்குள் புதைந்து பறிபோயிருக்கின்றன.
அந்தக் காட்சிகளை நேரடியாக தொலைக்காட்சியில் பார்க்கும்போது வயநாடு நிலச்சரிவும் அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் தான் நம் நினைவில் வந்து போகின்றன. அந்த அளவுக்கு துயரமிக்கதாக இருந்தன, அந்தக் காட்சிகள்.
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று வந்திருக்கிறார். துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சென்று வந்திருக்கிறார். அமைச்சர்கள் சென்றிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும், பாமக எம்.பி.யான அன்புமணி ராமதாசும், பிரேமலதா விஜயகாந்த்தும் கூட சென்று வந்திருக்கிறார்கள். சிலர் தன்னாலான நிவாரண உதவிகளை செய்திருக்கிறார்கள்.
அரசு, புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த தங்கும் இடங்களை தற்காலிகமாக ஏற்படுத்தி, அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி, புயலில் வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்துகளை சரிசெய்து பல்வேறு காரியங்களில் துரிதமாக செயல்பட்டதை நாம் கவனித்தாலும் கூட, இந்த சயமத்தில் நாம் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது.
முன்பு கொரோனா வந்ததையடுத்து பலருடைய வாழ்வாதாரம் எப்படி பாதிக்கப்பட்டதோ அப்படிப்பட்ட பாதிப்புகள் ஒரு பெரும் புயல் அதேவீச்சோடு ஒரு குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போதும் ஏற்படுத்துகின்றன, வீட்டை சேதப்படுத்துகின்றன, அவர்களின் வாழ்வதற்கு ஆதாரமான கடைகளை சேதப்படுத்துகின்றன.
இப்படி பலருடைய அன்றாட வாழ்க்கை சார்ந்த பொருளாதாரம் பாதிக்கப்பட்ட ஒன்றாக மாறி இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதியாக 2000 கோடி நிதி உதவியை உடனே தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இதற்கு முன்பு, சென்னையிலும் வட தமிழகத்திலும் வெள்ள பாதிப்பு வந்தபோது, மத்திய அரசு எந்த அளவுக்குத் துரிதமாக உதவியது அல்லது உதவாமல் போனது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு வயநாட்டில் நடந்த பெரும் நிலச்சரிவுக்குப் பிறகு அந்த மாநிலத்திற்கு, மத்திய அரசு எந்த அளவுக்கு நிவாரண உதவியை வழங்கியது என்பதையும் பலரும் கவனித்திருப்பார்கள்.
இம்மாதிரியான பெரும் துயரை ஏற்படுத்தக் கூடிய தேசியப் பேரிடர் நிகழும்போது மத்திய அரசு எதை வைத்து ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு உதவுகிறது அல்லது உதவாமல் இருக்கிறது என்பதில் வெளிப்படை தன்மை வேண்டும்.
குஜராத்தில் வெள்ள பாதிப்பு வந்தால் உடனடியாக கிடைக்கக்கூடிய நிதியுதவி மற்ற பகுதிகளுக்குக் கிடைக்கவில்லை என்றால், இவர்கள் மத்தியில் ஆள்பவர்கள் வலியுறுத்துகிற ‘ஒரே நாடு’ என்பதற்கு அர்த்தம் தான் என்ன?
தவித்த நேரத்தில் கைக் கொடுக்காமல், தாமதமாக கை கொடுப்பதோ அல்லது கை கொடுப்பதைத் தவிர்ப்பதோ எந்த அளவிற்கு நல்லது என்பதை தேசிய எண்ணம் கொண்டவர்கள் சற்று யோசிக்க வேண்டும்.