சொர்க்கவாசல் – இது உண்மைக் கதையா?!

சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, வாழ்வில் தொடர்ந்து தமக்கு உவப்பில்லாத அனுபவங்களை எதிர்கொள்கையில் அது போன்றதொரு எண்ண வட்டத்திற்குள் சிக்குவது இயல்பு. தம்மைப் பிடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, நல்லதொரு கரையைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்குவது எல்லா மனிதருக்குமானது.

அப்படியொரு ஏக்கத்தை மட்டுமே சுமக்கிற மனிதர்களைக் காட்டவல்லவை ‘சிறைப் படங்கள்’. த்ரில்லர், மிஸ்டரி, ஆக்‌ஷன், ட்ராமா, காமெடி, க்ரைம் என்று பல வகைமைகளில் இப்படங்களின் கதைக்களம் பெரும்பாலும் ஒரு சிறைச்சாலையைச் சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும்.

ஆங்கிலத்தில் வெளியான ‘பிரிசன் ப்ரேக்’ உள்ளிட்ட சில சீரிஸ்கள், ஷஷாங் ரிடெம்ஷன், க்ரீன் மைல் உள்ளிட்ட சில ஆங்கிலப் படங்கள் மற்றும் உலகத் திரைப்படங்கள் அப்படியொரு தாக்கத்தைப் படைப்பாளிகளிடத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன.

அவற்றைக் காணும்போதே, தமிழிலும் இது போன்ற படங்கள் அமையுமா என்ற கேள்வி எழும். தமிழில் சில படங்களில் ஒரு காட்சிக்கோர்வையாக அந்த வகைமை இடம்பெற்றிருக்கும்.

மிகச்சில படங்கள் முழுக்க அந்த வகைமையில் அமைந்திருக்கும். மிஷன்: சேஃப்டர் 1, விசாரணை, ஜெயில், சிறைச்சாலை போன்றவற்றை அதற்கான உதாரணங்களாகக் காட்ட முடியும்.

அந்த வரிசையில் முதலிடத்தைப் பெற முயன்றிருக்கிறது, சித்தார்த் விஸ்வநாத் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ’சொர்க்கவாசல்’. இதில் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், ஹக்கீம் ஷா, நட்டி, கருணாஸ், சந்தானபாரதி உட்படப் பலர் நடித்துள்ளனர்.

கிறிஸ்டோ சேவியர் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, ‘சொர்க்கவாசல்’ எப்படிப்பட்ட அனுபவத்தைத் திரையில் தருகிறது?

ஒரு நிகழ்வு!

சென்னையில் ஒரு பகுதியில் வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி). யானைக்கால் வியாதியால் அவதிப்படும் தாய், அவர் நடத்தி வந்த தள்ளுவண்டிக்கடை உணவகம், பிறகு தனது பூக்கடை நடத்தி வரும் காதலி ரேவதி (சானியா அய்யப்பன்) ஆகியன மட்டுமே தனது உலகம் என்று இருந்து வருகிறார். தாய், காதலி, அக்கம்பக்கத்தினர் அனைவரும் அவரை ‘பார்த்தி’ என்றே அழைக்கின்றனர்.

சண்முகம் எனும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, பார்த்தியின் கடைக்கு அடிக்கடி வந்து போகிறார். இருபதாண்டுகளுக்கும் மேலாக அந்தக் குடும்பத்தைப் பற்றி நன்கறிந்த மனிதர் அவர்.

சண்முகத்தின் உதவியோடு, ஒரு இடத்தில் ஹோட்டல் நடத்துவதற்கான முதலீட்டுக் கடனை வாங்க முயற்சிக்கிறார் பார்த்தி. அவர் சொன்ன தேதியில், அவரை அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகவும் கூறுகிறார்.

இந்த நிலையில், சண்முகத்தின் நேர்மையான குணத்தால் அவதிப்படும் ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அடியாட்களைக் கொண்டு அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

அன்றிரவு, சண்முகம் வீட்டில் இருக்கும் ‘பிளம்பிங்’ பணிகளைச் செய்யச் செல்கிறார் பார்த்தி. வேலை முடிந்தாலும், வீட்டுக்குள் சென்று அவரிடம் அதனைத் தெரிவிக்காமல் வீடு திரும்புகிறார்.

அடுத்த நாள், சண்முகம் இறந்த தகவல் கேட்டு இறக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து, கொலை நடந்த அன்று பார்த்தி தான் அந்த வீட்டில் இருந்து வெளியேறியதாக எதிர்வீட்டில் இருப்பவர் சாட்சி சொல்கிறார். அதனால், பார்த்தி கைது செய்யப்படுகிறார். அவர் அடிக்கடி தகராறில் ஈடுபடுபவர் என்று போலீசாரும் நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றனர். அதையடுத்து, பார்த்திக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

சிறைக்குச் சென்றபிறகு, அந்தக் கொலையைச் செய்தது ரவுடி சிகாமணியின் (செல்வராகவன்) ஆட்கள் என்று பார்த்திக்குத் தெரிய வருகிறது. அதனால், அவரைச் சந்தித்து தன்னிலையை எடுத்துக் கூற முயல்கிறார்.

ஆனால், அதற்குள் சிகாவின் ஆட்கள் அவரைத் தாக்குகின்றனர்; அவமானப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், திகார் சிறையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் சிறைக் கண்காணிப்பாளர் சுனில்குமார் (ஷரப் யூ தீன்) அங்கிருக்கும் கைதிகள் தன் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்க வேண்டுமென்று மெனக்கெடுகிறார். அதற்குத் தடையாக இருக்கும் சிகா போன்ற கைதிகளின் கொட்டத்தை அடக்கும் வேலைகளில் இறங்குகிறார்.

அப்போதுதான், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினருக்காகச் செய்த தவறுகளை ஊடகத்தில் வெளிப்படுத்துவது என்று சிகா முடிவெடுக்கிறார். ‘அது ஆபத்து’ என்று இரு கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் நினைக்கின்றனர்.

அந்த முடிவு, சிகாவை மட்டுமல்லாமல் பார்த்தியையும் பெரும் பிரச்சனையில் தள்ளிவிடுகிறது. அதன்பிறகு என்னவானது? பார்த்தி என்னவானார்? அவரது குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்று சொல்கிறது ‘சொர்க்கவாசல்’ படத்தின் மீதி.

1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் மரணமடைந்ததும், அதன் தொடர்சியாகச் சிறையில் நிகழ்ந்த கலவரமும் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பின. இப்போதும் அது குறித்த தகவல்களை நம்மால் இணையத்தில் காண முடியும்.

அந்த நிகழ்வை நினைவூட்டும்விதமாக அமைந்திருக்கிறது ‘சொர்க்கவாசல்’ திரைப்படம்.

செறிவான உள்ளடக்கம்!

சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களை இயக்கும் அதிகார வர்க்கத்தினரைக் காட்டுகிற பல படங்கள் உலகமெங்கும் வெளியாகியிருக்கின்றன. காவல் நிலைய லாக் அப் தொடங்கி கிளைச் சிறை, மத்திய சிறைச்சாலை எனப் பல்வேறு நிலையில் அமைந்த சிறை அனுபவங்கள் திரையில் காட்டப்பட்டிருக்கின்றன.

அவற்றில் தேசிய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக மாறி நிற்கிறது ‘சொர்க்கவாசல்’. படம் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, நாமும் சிறைக்குள் மாட்டிக் கொண்ட உணர்வு எழுகிறது. அந்த வகையில், இதன் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் தந்திருக்கும் காட்சியாக்கம் செறிவான உள்ளடக்கத்தைத் திரையில் உணர வைக்கிறது.

தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இருவரும் அந்த உள்ளடக்கத்திற்குக் காரணமாக விளங்குகின்றனர்.

நாயக பாத்திரமான பார்த்தி, கண்காணிப்பாளர் சுனில் குமார், சிறை அதிகாரி கட்டபொம்மன், ரௌடி சிகா, அவரது அடியாள் மணி, நீதிபதி இஸ்மாயில், சிறைச்சாலை சமையலறையை நிர்வகிக்கும் பஷீர், அவருடன் பணி செய்பவர்கள் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கென்ட்ரிக், போதைக்கு அடிமையான மோகன் மற்றும் இதர கைதிகள், பார்த்தியின் தாய், காதலி, அவரது கடையில் வேலை பார்ப்பவர் என்று பல பாத்திரங்கள் திரையில் நம் மனதில் பதியும் வகையில் வந்து போகின்றன. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

அதேநேரத்தில் சண்முகம் போன்ற ஒருவர் ஏன் கொலையாகிறார்? அவர் பின்னணி என்ன? சிறையில் சிகாவுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்திற்கான காரணம் யார் அல்லது என்ன என்பது போன்ற கேள்விகளுக்குத் திரைக்கதையில் தெளிவான பதில் கிடைக்கவில்லை அல்லது அது சொல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது எனச் சொல்லலாம். அதனால், கிளைமேக்ஸை படம் நெருங்கியபிறகு ஒருவித எரிச்சல் அல்லது விரக்தி நம்மைத் தொற்றுகிறது.

சென்னை செண்ட்ரல் ரயில்நிலையம் அருகே அமைந்திருந்த மத்திய சிறைச்சாலையும், அங்கு நிகழ்ந்த கலவரமும் மட்டுமே இப்படத்தின் மையமாக உள்ளது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விருமாண்டி’யில் அது ஒரு கிளையாகக் காட்டப்பட்டிருந்தது.

அதில் ‘ஹீரோயிசமாக’ காட்டப்பட்டிருந்த நிகழ்வை ‘அவலமாக’ச் சித்தரித்திருக்கிறது ‘சொர்க்கவாசல்’. அது மட்டுமல்லாமல், ’இது உண்மைக்கதையா, ஆவணப்படுத்தும் முயற்சியா’ என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அந்தக் கேள்வியே இப்படத்தின் பலம்.

படம் பார்ப்பவர்கள் மொபைல் போனை நோண்டாத அளவுக்குப் படத்தின் திரைக்கதை ஓட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில் படம் முழுக்கப் பறந்தோடி அலைகிறது பிரின்ஸ் ஆண்டர்சனின் ஒளிப்பதிவு.

செல்வா ஆர்கேவின் படத்தொகுப்பில், ஒவ்வொரு காட்சியும் ‘இதற்கு மேல் எக்ஸ்ட்ரா தேவையில்லை’ என்பதாக அமைந்திருக்கிறது.

ஜெயச்சந்திரனின் கலை அமைப்பில் மார்க்கெட் செட்டப் கொஞ்சம் செயற்கையாகத் தெரிந்தாலும், சிறைச்சாலைக் காட்சிகளின்போது நாம் அப்படியொரு உலகைப் புதிதாகக் காணும் அனுபவம் கிடைக்கிறது.

தினேஷ் சுப்பராயனின் சண்டைக்காட்சி வடிவமைப்பில் வன்முறை அதிகம் தெறித்தாலும், அது கதை நிகழும் களத்தோடும் கதாபாத்திர உணர்வுகளோடும் பொருந்தும் வகையில் இருக்கிறது.

சுரேன் ஜி, அழகியகூத்தனின் ஒலி வடிவமைப்பானது படத்தில் ஒலிக்கிற இசையையும் வசனங்களையும் களத்திற்குப் பொருத்தமான ஒலிகளையும் மிகச்சரியாகக் காதுக்குள் விழ வைத்திருக்கிறது.

இன்னும் டிஐ, விஎஃப்எக்ஸ், ஒப்பனை என்று பல அம்சங்கள் நம்மைத் திரையோடு பிணைக்கின்றன.

கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசையானது ஆங்கிலப் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தினாலும், ‘இது ஒரு சிறப்பான கமர்ஷியல் படமாக அடையாளம் காணப்பட வேண்டும்’ எனும் நோக்கிலேயே அவரது மெனக்கெடல் அமைந்துள்ளது.

’இப்படியொரு சீரியசான கதையில் ஆர்ஜே பாலாஜியா’ என்ற எண்ணம் ட்ரெய்லர் பார்த்ததும் ஏற்பட்டது. படத்தில் அந்த எண்ணத்திற்கு இடமே தராத வகையில் ‘பார்த்தியாக’த் தோன்றி அசத்தியிருக்கிறார் பாலாஜி. மிகச்சாதாரணமான ஒருவன் எனும் பாத்திர வார்ப்புக்கு அவரது தோற்றம் பொருத்தமாக இருக்கிறது.

செல்வராகவனுக்கு இதில் ‘சிகா’ பாத்திரம். வசனத்தை உச்சரிக்கும்போது அவர் காட்டும் சிரத்தை மட்டுமல்லாமல், முடித்தபிறகு அவர் முகத்தில் தென்படுகிற மௌனமும் சிறப்பாக இருக்கிறது. என்ன, அவருக்குப் பொருத்தமானதாக ஒரு ‘விக்’கை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பதுதான் ஒரு குறை.

சிறைக் கண்காணிப்பாளர் சுனில்குமாராக வரும் மலையாள நடிகர் ஷரப் யூ தீனுக்கு இது ஒரு நல்ல அறிமுகம். அதிகார மிடுக்கு, குயுக்தியை வெளிப்படுத்துகிற பாவனை, நபர்களுக்கு ஏற்ற உடல்மொழி என்று தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தான் ஏற்றிருக்கும் பாத்திரம் சர்ச்சையைக் கிளப்பக்கூடியது என்று தெரிந்தும், அதனைத் துணிந்து ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க ‘அண்டர்ஸ்கோர்’ செய்திருந்தாலும், அவருக்கான முக்கியத்துவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

மீசை இல்லாமல், வாயுக் கோளாறினால் அவதிப்படுகிற ஒரு நடுத்தர வயது பாத்திரத்தில் சிறப்பாக மிளிர்ந்திருக்கிறார் நட்டி.

சிகாவின் அடியாட்களில் ஒருவராக, மணி எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கீம் ஷா மிரட்டியிருக்கிறார்.

தொடக்கத்தில் வரும் நான்கைந்து காட்சிகளில் காதலைக் கொட்டிவிட்டு, இரண்டொரு காட்சிகளில் சோகமே உருவாக வந்து போயிருக்கிறார் சானியா அய்யப்பன்.

இவர்கள் தவிர்த்து பஷீராக வரும் பாலாஜி சக்திவேல், மோகனாக வரும் ரவி ராகவேந்திரா, கென்ட்ரிக் ஆக வரும் சாமுவேல் ராபின்சன், சீலன் எனும் பாத்திரத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தி, அமைச்சராக வரும் சந்தானபாரதி என்று பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.

விவேக் உடன் ‘ரன்’னில் காக்கா காமெடியில் நடித்த கோபால், இதில் ஆர்ஜே பாலாஜியின் உறவினராக வந்து போயிருக்கிறார். அதேபோல பாலாஜியின் தாயாக நடித்தவரும் நம் கவனம் கவர்கிறார்.

ஏற்கனவே சொன்னது போன்று இக்கதை அமைப்பில் பெரிதாகக் குறைகள் இல்லாவிடினும், சில பாத்திரங்களை இன்னும் தெளிவாக வார்த்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது ‘சொர்க்கவாசல்’.

கிளைமேக்ஸில் எந்தெந்த பாத்திரங்கள் என்னவாகின்றன என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகக் காட்டியிருக்கலாம். ஆனால், வலுக்கட்டாயமாக அதனைப் படக்குழு தவிர்த்திருப்பதாகத் தோன்றுகிறது.

அதேநேரத்தில், இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக உழைத்திருக்கின்றனர் என்ற எண்ணம் படம் முடிந்தபிறகு நம்மைத் தொற்றுகிறது. அதுவே இப்படத்தின் வெற்றி.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment