ரயில் ஏசி வகுப்புகளில் அடிக்கடி செல்லும் பயணிகள் அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் நிச்சயமாக ஒன்றை உணர்ந்திருப்பார்கள்.
அதாவது, இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் வழங்கப்படும் வெள்ளைத்துணிகளும் கம்பளியும் எந்த அளவுக்கு சுகாதாரத்துடன் இருக்கின்றன என்பதை நடைமுறையில் அனுபவித்திருப்பார்கள்.
சிலருக்கு கம்பளி போர்த்தி தூங்கும்போது ஒரு விதமான அலர்ஜியையும் கூட உணர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
ரயில் பயணத்தின்போது இப்படி ரயில்வே நிர்வாகத்தால் கொடுக்கப்படும் கம்பளிகள் முறைப்படி சுத்தப்படுத்தப்பட்டுப் பயணிகளுக்கு தரப்படுகிறதா?
பலருடைய மனங்களில் எழும் இத்தகைய கேள்விகளுக்கு வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமந்சு சேகர் டெல்லியில் இப்படி விளக்கம் அளித்திருக்கிறார்.
“2010-ம் ஆண்டுக்கு முன்பு ரயில்வேயில் வழங்கப்படும் கம்பளிகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை துவைக்கப்பட்டன. அதன்பிறகு இந்த நடைமுறை மாதம் ஒருமுறையாகி தற்போது மாதத்திற்கு இரண்டு முறை என கம்பளிகள் துவைக்கப்படுகின்றன” என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது.
ரயில்வே நிர்வாகத் தரப்பிலேயே ஒளிவு மறைவு இல்லாமல் கம்பளிகள் துவைக்கப்படுவது பற்றி தெரிவித்திருக்கிறார்கள்.
ஏசி வகுப்புகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி நம்பிக்கையுடன் பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு வேளை இந்த செய்தி உறுத்தலாம்.
அதிலும் மழைக்காலத்தில் பயணிக்கும் சிலருக்கு காய்ச்சல், சளி இருமலோ அல்லது வேறு சில தொற்றுகள் கூட இருக்கலாம்.
அவர்கள் உபயோகித்த அதே கம்பளியைத் துவைக்காத நிலையில் அடுத்த பயணிக்கும் பயணிகள் அதே கம்பளியைப் பயன்படுத்தினால் நோய்த் தொற்றுகள் பரவ வாய்ப்பு உருவாகாதா? என்பது ரயிலில் வழக்கமாக பயணிக்கும் பலருடைய கேள்வி.
இதெல்லாம் சரி, ரயில்வே நிர்வாகம் வெளிப்படையாகவே சொல்லிவிட்டது. ஆனால் ஏசி ஆம்னி பஸ்களில் இரவு நேர பயணத்தின் போது கொடுக்கப்படும் கம்பளிகளை எப்படி, எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தி அதாவது, சுருக்கமாகச் சொல்லப்போனால் ஹைஜீனிக்காக பயணிகளுக்குத் தரப்படுகிறது.
அது குறித்த முறையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? இது பற்றி ஆம்னி பஸ்கள் அல்லது இரவு நேர பேருந்துகளை இயக்குபவர்கள் வெளிப்படத்தன்மையுடன் விளக்கம் தருவார்களா?
ரயிலிலோ அல்லது ஆம்னிபஸ்களிலோ, கூடுதல் கட்டணம் செலுத்தி தான் பயணம் செய்கிறார்கள் நம் சகப் பயணிகள்.
நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு இல்லாமல் நம்பிக்கையுடன் பயணம் செய்ய வேண்டாமா?
– யூகி