என்.எஸ். கிருஷ்ணன், இன்றைய தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு மகாகலைஞன். கலையுலகில் நுழைந்து பிரபலமடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே அவரது வாழ்வில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
காரணம், பூஜ்யத்தில் இருந்து தொடங்கி உச்சம் பல கண்ட அவரது வாழ்க்கைப் பயணம். அது மட்டுமல்லாமல், ஒரு சிகரத்தை அடைந்தபிறகு நேரும் சிக்கல்களையும் அந்தத் தருணத்தில் பிரபல்யத்தைத் திறம்படக் கையாள்வதில் இருக்கும் பிரச்சனைகளையும் சொல்லக்கூடியது.
மிகச்சாதாரண பின்னணி!
நாகர்கோவிலில் உள்ள ஒழுகினசேரியில் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதியன்று பிறந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். அவரது பெற்றோர் பெயர் சுடலையாண்டி – இசக்கியம்மாள்.
அவரது இனிஷியலில் ஊர் பெயரும் அதன் பின்னே தந்தை பெயரும் இடம்பெற்றன.
ஏழைக் குடும்பம். பெரிதாகப் பொருளாதார வசதி இல்லை. பள்ளிப்படிப்பை அவரால் நிறைவு செய்ய முடியவில்லை.
அதனால், டென்னிஸ் மைதானத்தில் பந்து பொறுக்கிப் போடுவது, நாடக கொட்டகையில் திண்பண்டங்கள் விற்பது என்று பல வேலைகளைச் சிறு வயதில் செய்திருக்கிறார்.
அப்போது, நாடகத்தில் அவரிடத்தில் இருந்த ஆர்வம் மிகப்பெரியது.
அதன் தொடர்ச்சியாக, பாய்ஸ் கம்பெனியில் கிருஷ்ணனைச் சேர்த்துவிட்டிருக்கிறார் அவரது தந்தை.
வளர்ந்தபிறகு ஸ்ரீ பால சண்முகனாந்த சபா, ஸ்ரீ பால மீனரஞ்சனி சபாக்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்போது கிடைத்த புகழே, அவரைத் திரையுலகம் நோக்கி நகர்த்தியிருக்கிறது.
1936இல் வெளியான ‘சதிலீலாவதி’யில் நடித்தார் என்.எஸ். கிருஷ்ணன். எம்.ஜி.ஆர், டி.எஸ். பாலையா உட்படப் பலர் போலவே, அவருக்கும் அதுவே முதல் திரைப்படம்.
ஆனால், அதற்கு முன்னதாகவே என்.எஸ்.கே வில்லனாக நடித்த ‘மேனகா’ வெளியாகிவிட்டது.
பிறகு தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பாவின் வெற்றிப் படங்கள் முதல் பலவற்றில் அவருக்கென்று தனி ‘நகைச்சுவை ட்ராக்’ அமைந்தது நாம் அறிந்ததே.
அது மட்டுமல்லாமல் பணம், மணமகளே வா, அதன் தெலுங்கு பதிப்பு ஆகியவற்றை இயக்கிய அனுபவமும் அவருக்குண்டு. ‘பராசக்தி’க்கு முன்னதாகச் சிவாஜி கணேசன் நடித்த படமே ‘பணம்’.
ஒரு சாதாரணப் பின்னணி கொண்ட என்.எஸ். கிருஷ்ணன் பிறரால் ‘கலைவாணர்’ என்று போற்றப்பட்டது சாதாரண விஷயமில்லை. அதற்கு அவரிடத்தில் பல திறமைகளும் குடி கொண்டிருந்ததே காரணம்.
பன்முகத் திறமை!
தனது நகைச்சுவை பகுதிக்கான வசனங்களை, பாடல்களை எழுதுகிற வல்லமையைக் கொண்டிருந்தார் என்.எஸ். கிருஷ்ணன். ‘பணத்தை எங்கே தேடுவேன்’, ‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்’ உட்படப் பல பாடல்களில் அதனைக் காண முடியும்.
கோமாளித்தனம் செய்வதே நகைச்சுவை என்றிருந்த காலகட்டத்தில், சமுதாயத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளைக் கிண்டலடிப்பதை ஒரு பாணியாக மாற்றிக் காட்டியவர்.
அதற்காக எதிரில் இருப்பவரைப் பேச்சாலே ரத்தக்களரி ஆக்குகிற வேலை அவரிடத்தில் கிடையாது. மயிலிறகால் வருடியது போன்றே அந்த வார்த்தைகள் இருக்கும்.
தோல்விப்படம் என்று கைவிடுகிற நிலைமையில் இருந்த சில படங்களில் டி.ஏ. மதுரம் உட்பட அவரது குழுவினர் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவை பெருவெற்றியைக் கண்டிருக்கின்றன.
அதற்காக, அதுவரை எடுக்கப்பட்ட படத்தைக் கண்டு, பிறகு அதற்கேற்ற நகைச்சுவை பகுதியை எழுதுகிற ஆற்றல் அவரிடம் இருந்தது.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒப்பனை உட்படப் பலவற்றில் அவருக்கு அபார அறிவு இருந்திருக்கிறது. அதேநேரத்தில், அது தொடர்பான கலைஞர்களைப் புண்படுத்தாத வகையில் தவறுகளைத் திருத்துகிற குணமும் அவரிடம் இருந்திருக்கிறது.
அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ், திராவிடர் கழகம், திமுக கட்சிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தபோதும், அதிலிருந்த தலைவர்களோடு நட்பு பாராட்டியபோதும், தன்னை ஒரு ‘சினிமாகாரன்’ என்றே அவர் காட்டிக்கொண்டார்.
திரைப்படக் கலைஞர்கள் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவர்கள் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்.
இவை அனைத்துமே, இன்று அவரது பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்திருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு முன்னோடி!
திரையுலகில் நுழையும் எவரும், தமக்குப் பிடித்தமானவர்கள் என்று சிலரது பெயரைப் பட்டியலிடுவார்கள்.
அப்படிப்பட்டவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அவர்களுக்குப் பிடித்தமான சிலர் இருப்பதைக் காண முடியும்.
அப்படி அந்தந்த கலைஞர்களின் பேட்டிகளை, அவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டினால், அவர்களுக்கு முன்மாதிரியாக ‘கலைவாணர் என்.எஸ்.கே’ திகழ்ந்ததை உணர முடியும்.
‘கொடுத்துச் சிவந்த கைகள்’ என்று எம்ஜிஆரை உலகம் புகழ்வது நமக்குத் தெரிந்த விஷயம்.
ஆனால், அவருக்கே அது போன்று பல சீரிய பண்புகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்.எஸ். கிருஷ்ணன் என்பது ஆச்சர்யமான தகவல். இதனைச் சில பேட்டிகளில் எம்ஜிஆரே பகிர்ந்திருக்கிறார்.
‘சதிலீலாவதி’க்குப் பிறகு எம்ஜிஆர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் நகைச்சுவை நாயகனாகப் பெரும்புகழ் பெற்றிருந்தார் என்.எஸ். கிருஷ்ணன்.
அப்போது மைசூர், கல்கத்தா, புனே என்று பல ஊர்களில் இருந்த ஸ்டூடியோக்களுக்கு எம்ஜிஆர் நடிக்கச் சென்றிருக்கிறார்.
அப்போது, தனது நண்பன் சக்ரபாணியின் சகோதரனாக மட்டுமல்லாமல், சக கலைஞனாகவும் கருதி பல ஆலோசனைகளை, அறிவுரைகளைத் தந்திருக்கிறார்.
தொடக்கத்தில் அவரோடு பல விஷயங்களில் முரண்பட்டு நின்றவர், பின்னர் படிப்படியாக அவரது இயல்பான குணாதிசயம் உணர்ந்து மலைத்துப் போயிருக்கிறார்.
பின்னாட்களில் தனக்குப் பின்னே வந்த இளைய தலைமுறைக் கலைஞர்களை எம்ஜிஆர் ஆதரித்துப் பேண அதுவே காரணமாக இருந்திருக்க முடியும்.
வெறுமனே பொழுதுபோக்கினை மட்டுமே திரையில் தந்தால் போதும் என்றிருந்த சக கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு நின்றவர் என்.எஸ். கிருஷ்ணன்.
சுதந்திரப் போராட்டக் கருத்துகளை மட்டுமே தெரிவிப்பது புரட்சி என்றெண்ணிய காலகட்டத்தில், சமூகச் சீர்கேடுகளைக் களையும் நோக்கத்திற்கும், சக மனிதனின் மீதான பிரியத்திற்கும் முக்கியத்துவம் தந்தார்.
‘நாடோடி மன்னன்’ படத்திற்குப் பிறகு, அதைத் தனது பாணியாகவே மாற்றிக்கொண்டார் எம்ஜிஆர்.
அப்படிப்பட்ட சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுக்கு இடம் தராத சில கதைகளில் அவர் நடித்தபோதும், அந்தப் படங்களிலும் கூட பாடல்கள், வசனங்கள் மூலமாகத் தன்னால் முடிந்த சில தகவல்களைத் தெரிவித்திருப்பதே அதற்கான சான்று.
என்.எஸ். கிருஷ்ணன் போல எம்.ஜி.ஆரால் பாட முடியாது போனாலும், அவரைப் போலவே திரைப்பட உருவாக்கத்திற்குத் துணை நிற்கும் அத்தனை கலைகளையும் அவர் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.
கேமிரா காட்டும் பிரேமை தீர்மானிப்பது முதல் அதன் பின்னிருக்கும் தொழிலாளர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது வரை அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அந்த வகையில் கே. சுப்ரமண்யம், ராஜா சந்திரசேகர் முதலான இயக்குனர்கள், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் போன்ற பாடலாசிரியர்கள், கலைஞர் கருணாநிதி முதலான திரைக்கதை ஆசிரியர்கள் தொடங்கித் தான் ஏகலைவனாகக் கல்வி கற்ற இயக்குனர் சாந்தாராம், மகாத்மா காந்தி என்று பலரைப் போற்றியவர் எம்ஜிஆர்.
அந்த வரிசையில் என்.எஸ்.கேவுக்கு தனியிடம் உண்டு என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
நமக்கான பாடம்!
‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்’ என்பதைப் படித்திருந்தாலும், அறத்தின் வழி நடப்பது கலியுகத்திற்குப் பொருத்தமாக இருக்குமா என்பதே பலரது மனதிலிருக்கும் கேள்வி.
திரைப்படங்கள் உட்பட இன்றையப் பொழுதுபோக்கு மற்றும் கலை சாதனங்களும் அது போன்ற கருத்துகளையே தாங்கி நிற்கின்றன.
அப்படியொரு காலகட்டத்தில் ‘அறம் மட்டுமே வாழ்வுக்குத் துணை’ என்பதைத் திரைப்படங்களிலும் சொந்த வாழ்விலும் பிரதிபலித்த என்.எஸ்.கேயை நம்மால் வியந்து பார்க்காமல் இருக்க முடியாது.
சக மனிதன் மீதான நேசிப்பு முதல் பெண் முன்னேற்றம், சமத்துவ சமுதாயம், விஞ்ஞான வளர்ச்சிக்கான இடம் உட்படப் பல அம்சங்களை ஏற்றுக்கொள்வது, இன்று ஒரு மனிதனின் அத்தியாவசியங்களில் ஒன்றாகியிருக்கிறது.
அதற்கு நேரெதிரான சூழல் நிலவிய காலகட்டத்தில், அப்படியொரு மனப்பாங்கைக் கொண்டிருந்ததால் மட்டுமே என்.எஸ்.கே ஒரு முன்னோடியாகக் காட்சியளிக்கிறார்.
‘எத்தனை முறை விழுந்தாலும் எழுவோம்’ என்ற தன்னம்பிக்கை பாடத்தையும் அவர் கற்றுத் தந்து சென்றிருக்கிறார்.
பூஜ்யத்தில் தொடங்கி உயரங்கள் பல தொட்டு, பெரிய புகழை அடைந்து, பின்னர் லட்சுமிகாந்தன் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று, மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு வெளியுலகைக் கண்டு, சிலரது அவதூறுகளுக்கு மத்தியில் மீண்டும் திரைத்துறையில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி, வெற்றிகள் பல கண்டு, ஒருகட்டத்தில் வறுமையின் பிடியில் சிக்கி மிகச்சாதாரண நிலையை அடைந்தபோதும், தனது இயல்பில் இருந்து துளி கூட மாறாத அவரது பண்பு என்றென்றும் போற்றத்தக்கது.
இறுதிக் காலத்திலும் கூட, தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களை அவர் வெறும் கையோடு அனுப்பியதில்லை.
வயதில் சிறியவரிடத்தில் கூட, மேலிருந்து கீழாக நோக்கியதில்லை. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்று எண்ணாமல் ஒருநாளும் இருந்ததில்லை.
இதற்கும் மேலே நாம் அறியாத பல பாடங்கள் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் ஒளிந்திருக்கலாம். அதனைப் படித்து, உணர்ந்து, தெளிய வேண்டியதே அதற்காக நாம் செய்ய வேண்டிய பயிற்சி..!
தொழில்நுட்பத்தைக் கைக்கொள்வதற்குப் பதிலாக, அதன் பிடியில் சிக்கி உழன்று, சக மனிதர்கள் மீதான நேசத்தை மெல்ல இழந்து, மனநிலையை மாசுபடுத்தி மருகித் தவிக்கும் சூழல் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில் நம்மை ஆசுவாசப்படுத்துகிறோம் பேர்வழி என்று எங்கோ, எதையோ, யாரையோ தேடியலைவதற்குப் பதிலாக, கடந்த காலத்தில் புதையல் ஆகப் பொதிந்திருக்கும் கலைவாணர் போன்றவர்களைப் பற்றி தெரிந்துகொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
அவரைப் பற்றித் தேடித் தெரிந்துகொள்ளச் சோம்பேறித்தனப்படுபவர்களுக்கு, குறைந்தபட்சமாக அவரது படங்கள் செழுமையான பாடங்களை வழங்கும்.
ஏனென்றால், இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல் இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருபவர்களுக்கும் ஏற்றதொரு வாத்தியார் அவர்..!
– உதய் பாடகலிங்கம்.
#கலைவாணர்_என்எஸ்_கிருஷ்ணன் #Kalaivanar_NS_Krishnan #பிறந்த_நாள் #சினிமா_வாழ்க்கை #Cinema_life #நாடகம் #Drama #பாய்ஸ்_கம்பெனி #boys_company #சதிலீலாவதி #Sathileelavathi #மேனகா #Menaha #பணம் #Panam #மணமகளே_வா #Manamagale_Va #டிஏ_மதுரம் #TR_Maduram #எம்ஜிஆர் #MGR #தியாகராஜ_பாகவதர் #Thiyagaraja_bhagavatar #பியூ_சின்னப்பா #PU_Chinnappa