ஆண்டு இறுதி என்பது திரையுலகைப் பொறுத்தவரை சோகமும் சுகமும் இனிதே கலந்த காலமாக அமைவது. அதுவரை வெளியீட்டுத் தேதி தள்ளிப் போடப்பட்ட படங்கள் அனைத்தும், இந்த மாதத்திலாவது வெளியாகிவிட வேண்டும் என்று டிசம்பரை நோக்கி முண்டியடிக்கிற காலம்.
அதனால், மல்டிப்ளெக்ஸ்களில் ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று வாரத்திற்கு ஆறேழு படங்களாவது வெளியாகும். சம்பந்தப்பட்ட படக்குழுவினரை அது ஏதோ ஒருவகையில் ஆசுவாசப்படுத்தும். சில நேரங்களில், அவ்வாறு வெளியாகும் படங்கள் மிகச்சிறந்த படங்களாகவும் அமையும்.
அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் பான் இந்தியா வெளியீடான ‘புஷ்பா 2’ முதல் ’விடுதலை 2’, ‘சூது கவ்வும் 2’, ’ராஜாகிளி’, ‘குடும்பஸ்தன்’ வரை பல படங்கள் காத்திருப்பில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக அமைந்துள்ளது ‘ஃபேமிலி படம்’.
சந்தேகப்பட்டு இன்னொரு முறை அப்பெயரைப் படித்துப் பார்க்க வேண்டாம். படத்தின் பெயரே அதுதான்.
பேமிலியா? படமா?
ஒரு படத்தின் வசூல் சுமார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவினால், அடுத்த நாளே ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற வார்த்தையைச் சம்பந்தப்பட்ட படத்தின் விளம்பரங்களில் பார்க்க முடிகிறது. அதனால், குடும்பத்தோடு சேர்ந்தமர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதென்பதே அரிதான விஷயமாக மாறி வருகிறது.
அதனாலோ என்னவோ, இப்போதெல்லாம் மர்டர் மிஸ்டரி, க்ரைம் த்ரில்லர், நியோநாய்ர் வகைமைகளில் அமைந்த படங்களே அதிகமும் தியேட்டர்களை ஆக்கிரமிக்கின்றன. காதல் படங்கள் என்றால் கூட, நாயகன் நாயகி இடையிலான வெளி சில மில்லி மீட்டர்களே இருக்கும் அளவுக்குக் காட்சிகளில் ‘நெருக்கம்’ பாராட்டப்படுகிறது.
இந்தச் சூழலிலும் கூட ஒரு ‘மெய்யழகன்’, ‘லப்பர் பந்து’ போன்ற படங்கள் ஆபாசமோ, வன்முறையோ இல்லாமல் ரசிகர்களைச் சிலிர்க்க வைக்கின்றன என்பது ஆச்சர்யம் தான்.
அந்த வரிசையில் இடம்பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற ‘பேமிலி படம்’ திரைப்படம்.
பேமிலியா, படமா? என்கிற கேள்வியைச் சமூகத்தில் எதிர்கொள்கிற ஒரு உதவி இயக்குனரை நாயகனாகக் கொண்டுள்ள இப்படத்தில், அவரது குடும்பமே இணைந்து ஒரு படத்தைத் தயாரிப்பதாகக் கதை அமைந்துள்ளதாகச் சொல்கிறது ‘ஃபேமிலி படம்’ ட்ரெய்லர்.
புஷ்பா 2வின் பெயர்!
‘ஃபேமிலி படம்’ ட்ரெய்லர் வருவதற்கு முன்னதாக, புஷ்பா 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது. பீகாரில் ஒரு தெலுங்கு படத்தின் ஆடியோவை வெளியிடுவதும், அதற்குக் கூடிய மக்கள் கூட்டமும் ‘பான் இந்தியா’ அந்தஸ்துக்கான விளக்கமாக அமைந்தது.
அந்த நேரத்தில், ‘புஷ்பா 2க்கு நாங்க போட்டியா’ என்று ‘ஃபேமிலி படம்’ குழுவானது ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டது. அதில், ’வரும் டிசம்பர் 5-ம் தேதி புஷ்பா படம் வெளியாகிறது; அதற்கடுத்த நாள் ‘ஃபேமிலி படம்’ வருகிறது” என்றது படக்குழு. உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இடம்பெற்ற இந்த வீடியோ வெளியான பிறகு, படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிக் கவனம் பெற்றிருக்கிறது.
சமீபத்திய பேட்டியொன்றில், ‘ஒரு திரைப்படம் எந்தளவுக்கு குறிப்பிட்ட வட்டாரத்தை, அங்குள்ள மக்களைப் பிரதிபலிக்கிறதோ, அந்தளவுக்கு அப்படம் தேசிய, சர்வதேச அளவில் கவனம் பெறும்’ என்று தெரிவித்திருந்தார் இயக்குனர் செல்வகுமார் திருமாறன்.
‘பான் இந்தியா’ திரைப்படங்கள் குறித்துப் பல இயக்குனர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன் பெருவெற்றி பெற்ற ‘காந்தாரா’ முதல் தற்போது சீனாவில் வெளியிடப்பட்டிருக்கிற ‘மகாராஜா’ வரை அதற்கு உதாரணங்கள் பல.
அந்த வரிசையில் ‘ஃபேமிலி படம்’ இடம்பெறுகிறதா என்று தெரியவில்லை. ஆனால், கதைக்கேற்ற ஒரு டைட்டிலையும், அதனை அழுத்தமாகப் பதிய வைக்கிற காட்சிகளையும் இப்படம் கொண்டிருப்பதாக நம்ப வைத்திருக்கிறது ட்ரெய்லர்.
வானத்தைப் போல, ஆனந்தம், கடைக்குட்டி சிங்கம், ரஜினி முருகன் போன்று இப்படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அனிவீ இசையமைத்திருக்கிற இப்படத்தில் ‘டைனோசர்’ படத்தின் நாயகன் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா, ஸ்ரீஜா ரவி, பார்த்திபன் குமார் உள்ளிட்டோருடன் பட்டிமன்றப் பேச்சாளர் மோகன சுந்தரமும் நடித்திருக்கிறார்.
’திரையுலகம் சம்பந்தப்பட்ட, அது தொடர்பான கஷ்ட நஷ்டங்களைச் சொல்கிற திரைப்படங்கள் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்காது’ என்பது சினிமா பண்டிதர்கள் நீண்டகாலமாகச் சொல்லி வருவது. சில மலையாள, இந்திப் படங்கள் அதனைச் சுக்குநூறாக உடைத்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘ஃபேமிலி படம்’ இடம்பெறுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
குவியலுக்கு நடுவே..!
தீபாவளிக்கும் பொங்கலுக்கும் நடுவே டிசம்பர் மாதத்தில் ஒரு திரைப்படம் வெளியானால் அதன் நிலைமை கேள்விக்குறி தான். தொண்ணூறுகளில் ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு கருத்து நிலவியதுண்டு. காரணம், தீபாவளிக்கு வெளியான படங்களே நூறு நாட்களைக் காண்பதற்குள் பொங்கலுக்குப் பல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் என்பதும், அதனால் சுமாரான படங்கள் 50, 75 நாட்கள் கொண்டாட்டத்தோடு நடையைக் கட்டிவிடும் என்பதும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டது.
டிசம்பர் மாதம் வெளியாகிற படங்கள் குறைவான நாட்களே தியேட்டரில் இருக்கும் என்பதும் அதன் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டது.
ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வசூலை அள்ளும் நோக்கோடு பல தியேட்டர்களில் திரையிடும் வழக்கம் வந்தபிறகு, அந்த கணக்கெல்லாம் காலாவதியாகிப் போனது.
அதனால், சமீபகாலமாக டிசம்பர் மாதத்தில் திரைப்படங்களின் குவியலுக்கு நடுவே சிறந்த படங்களைத் தேடுகிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் வரும் டிசம்பரில் பல நல்ல, சிறந்த படங்கள் வெளியாகும் என்ற எண்ணம் ரசிகர்களிடத்தில் இருக்கிறது. அவற்றைக் காப்பாற்றுகிற உள்ளடக்கத்துடன் வெளியாகிற படங்களில் ‘ஃபேமிலி படம்’மும் ஒன்றாக இடம்பெற வேண்டும். சினிமாவை தீவிரமாக நேசிப்பவர்களின் மனங்களில் அது மட்டுமே இருக்கிறது.
– உதயசங்கரன் பாடகலிங்கம்