இலங்கையில் இந்தியத் திரைப்படங்களுக்கான வரவேற்பு!

சினிமாத் துறையின் முதல் கட்டப் பரிமாணம் முதல் தற்காலம் வரையிலும் சினிமாத் துறையின் மீது மக்களுக்கு இருக்கக் கூடிய ஆர்வம், சினிமா மீது உள்ள எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்திய மக்களுக்கு இருக்கும் அதே அளவுக்கான ஆர்வம் இலங்கைவாழ் தமிழ் மக்களிடம் அப்போதும், இப்போதும் பெரும் வரவேற்புடன் காணப்படுகிறது.

அன்றைய காலத்தில் முதன் முதலில் அறிமுகமாகிய ‘மௌனப் படம்’ இலங்கை, இந்திய ரசிகர்களின் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த மௌனப் படங்களை மக்கள் ரசித்துப் பார்த்தனர்.

என் சிறு வயதுக் காலத்தில் நான் கண்ட அனுபவம். அன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில் மின்சார வசதி கிடையாது. பல வீடுகளில் தொலைக்காட்சி இருக்காது.

அந்தச் சமயத்தில் யார் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறதோ, அந்த வீட்டில், சுற்றியுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பேட்டரி மூலம் மின் வசதி செய்து பார்த்து ரசித்து மகிழ்வார்கள்.

அவர்கள் பார்த்து ரசித்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, சரோஜா தேவி, ஜெயலலிதா மற்றும் பல நடிகைகள் மீது மக்களுக்கு விருப்பம் இருந்தது.

அவர்கள் மீது இனம் புரியாத அன்பும் வைத்திருத்தனர். மேலும் அந்தக் காலத்தில் நடிகருக்கு ரசிகர் மன்றங்களும் உருவாயின.

மக்களிடையே சொல்லி அடக்க முடியாத அளவு மகிழ்ச்சியும் ஆனந்தமும் பட முடிவில் அவர்களின் முகத்தில் தோன்றும்.

அந்த காலத்தில் வசதி, வாய்ப்புகள் இல்லை என்றாலும், அவர்களிடம் ஒற்றுமை, யாரையும் விட்டுக் கொடுக்காத மனநிலை, அதே வேளையில் பல வீடுகளில் இருந்து கொண்டுவரும் உணவுகளைப் பகிர்ந்து உண்டு, படம் பார்த்து ஏதோ ஒரு சாதனை செய்தது போல் உணரும் எண்ணம் இருந்தது.

அடுத்த விடுமுறை நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற தவிப்பு எல்லாம் அந்த மக்கள் முகத்திலும் செயலிலும் காண முடியும்.

இதில் சிறப்பிற்குரிய விடயம் என்னவென்றால், சிங்கள மக்களிடையே எம்.ஜி.ஆர், சரோஜா தேவி அவர்களின் கூட்டணியில் வந்த படங்கள் மிகவும் வரவேற்கப்பட்டது தான்.

இந்தியத் திரையரங்குகளில் இலங்கை திரைநட்சந்திரங்கள் நேரடியாக வருகை தந்து படங்களைப் பார்த்து ரசித்த வரலாறுகள் இந்திய, தமிழ்த் திரையுலகில் காணப்படுகிறது.

சினிமாவில் சாதனைகள் படைத்த மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மூத்தத் தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் இன்றைய சமுதாயத்திலும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்க ஒரு சிறப்பு அம்சம்.

படங்களுக்கு இருக்கும் அதே அளவு வரவேற்பு பாடல்களுக்கும் இருந்தது. என்னுடைய தாயாருக்கு பழைய பாடல்களைக் கேட்பதில் பேரார்வம். சிறந்த, அர்த்தமுள்ள பாடல்களை இரவு படுக்கும்போது எங்களுக்குப் பாடிக்காட்டுவார்.

சில நேரம் அவர்கள் அந்தப் பாடல் வரிகளின் அர்த்தத்தைப் பாடி அழுவார். நான் பழைய பாடல்களை என் தாயார் பாடித் தான் கேட்டிருக்கிறேன்.

இலங்கை வானொலியில் இந்தியத் திரைப்படப் பாடல்களுக்கான வரவேற்பு, அன்று தொட்டு இன்று வரையிலும் காணப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஒலிச்சித்திரமாக வானொலிகளில் வெளியிடப்படும். கே.எஸ்.ராஜா, பி.ஹெச் அப்துல் ஹமீது, மயில் வாகனம் உள்ளிட்டவர்கள் இதில் மிகவும் பிரபலம்.

நாகரிக வளர்ச்சிக்கேற்ப சினிமாத் துறையின் வளர்ச்சியும் மேன்மையடைந்து கொண்டு இருக்கிறது.

இன்று இருக்கக் கூடிய இளைய சமுதாயம் எந்த ஒரு செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்கள் சினிமாவுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி, அஜித், விஜய் மற்றும் ஏனைய நடிகர்களுக்கு வரவேற்பு இருக்கிறது.

இந்தியாவில் வெளியாகக் கூடிய பிரமாண்டமான படங்கள் முதல் தனிப்பட்ட முறையில் அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள் படம் வெளியாகும்போது கூட சிறந்த வரவேற்பு காணப்படும். 

இதில் சிறப்புக்குரிய ஒன்று, சிங்கள மக்களுக்கு தமிழ் மொழி தெரியாவிட்டாலும் அவர்களும் திரையரங்குகளில் தமிழ் திரைப்படம் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள்.

கொழும்வில் பிரதான வசதி மிகுந்த திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்கள் வெளியாகும்.

இந்திய படங்களுக்கு இலங்கை மக்கள் வரவேற்பு கொடுப்பது வரவேற்க வேண்டிய சிறப்பு அம்சம். தமிழ் சினிமாவின் வணிகச் சந்தைக்கு சிறிய அளவில் இலங்கைக்கும் பங்கு உண்டு என்பது மகிழ்ச்சிக்குரிய  விடயம்.

திரையரங்குகளில் மட்டுமல்ல, சிங்களத் தொலைக்காட்சிகளில் பிரதானமாக தமிழ்ப் பாடம், இந்திய சின்னத்திரை சீரியல்கள் தான் பெரும்பாலும் வெளியாகும் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு இந்திய, தமிழ் சினிமாவும் பாடல்களும், இன்று இருக்கக் கூடிய நவீன தொழில்நுட்ப உதவியோடு மிக இலகுவான முறையில் போய் சேர்ந்து விடுகிறது.

பழமையோ, புதுமையோ சினிமா மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் என்பது என்றும் குறையாதது. சினிமா என்பது பொழுது போக்கு மட்டுமல்ல, மக்களின் மனதிற்கு அமைதி தரும் ஒரு ஆறுதல் வடிவம்.

– தனுஷா

Comments (0)
Add Comment