ஆட்சியில் பங்கு கேட்கத் தயாராகும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

விசுவரூபம் எடுக்கும் விஜயின் ‘அஸ்திரம்’!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கூட்டணிக் கட்சிகள் நெருக்குதல் கொடுப்பது வழக்கம். கூடுதல் இடங்கள் வேண்டும், இந்தந்தத் தொகுதிகள் அவசியம், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேவை என்பதாக, அந்த நெருக்குதல் இருக்கும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், இரு திராவிடக் கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும், தோழமைக் கட்சிகள், இப்போதே தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

இது, தொகுதி எண்ணிக்கையிலான தலைவலி அல்ல. ஆட்சி, அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும்’ என்பதான புதிய முழக்கம். கழகங்களுடன் கூட்டணி வைக்கும் சிறிய கட்சிகள், இதுவரை இதுபோன்ற தேவைகளை முன்வைத்ததில்லை.

சில வேளைகளில் போகிற போக்கில் ‘எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும்’ என கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள். அதனை கழகங்கள் பொருட்படுத்தியதில்லை.

சிவகங்கைக்கு வரும் போதெல்லாம், அந்த ஊர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ’ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு’ என, அண்ணா அறிவாலயத்தை நோக்கி சின்ன முழக்கம் எழுப்பி விட்டு, டெல்லிக்குப் பறந்து விடுவார்.

ஆனால், இப்போது, இரு கூட்டணிகளில் உள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்களே, ‘கூட்டணி ஆட்சி வேண்டும்’ எனும் முழக்கத்தை மெல்ல ஆரம்பித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான், இந்த விவகாரத்தைத் தீவிரமாக முதலில் கையில் எடுத்தது.

ஆனால், நடிகர் விஜய், இந்த விவகாரம் குறித்து, பேசிய பிறகே, ஏனைய கட்சிகளும், ‘கூட்டணி ஆட்சி’ முழக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்துள்ளன.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், அந்தக் கட்சியின் தலைவர் விஜய், ‘நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயித்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிப்போம்’ என பகிரங்கமாக அறிவித்தார்.

‘இதெல்லாம் தமிழகத்தில் சாத்தியமில்லை’ என விஜய்க்கு பதில் அளித்த, திமுகவின் சில கூட்டணிக் கட்சிகள், கடந்த சில நாட்களாக விஜயின் கருத்தை ஆமோதிப்பது போல் பேசி வருவது, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.

கூட்டணி ஆட்சி குறித்து, விஜய் சின்னதாய் பற்ற வைத்த பொறி, தமிழகத்தில் இப்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது.

அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதுரையில் பேட்டி அளித்தார்.

அவரிடம் செய்தியாளர்கள், ’கூட்டணி வைப்போம், ஆனால் ஆட்சியில் பங்கு தர மாட்டோம்’ அமைச்சர் ஐ.பெரியசாமி கூறி இருப்பது குறித்து, வினா எழுப்பினர்.

இதுபோன்ற கேள்விகளுக்கு புன்சிரிப்புடன் சைகையால் பதிலளித்து, கடந்து செல்லும் சி.பி.எம். தலைவர், அன்று அப்படிச் செய்யவில்லை.

திமுகவும் அதிமுகவும், தங்கள் உயரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற ரீதியில் கே.பாலகிருஷ்ணன் பதில் அமைந்திருந்தது.

”தமிழகத்தைப் பொறுத்தவரை வித்தியாசமான சூழ்நிலை உள்ளது – திமுக – அதிமுக போன்ற கட்சிகள் பெரிய கட்சிகளாக உள்ளன – அப்படி இருந்தும் கூட, அவர்களால் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது” என அமைதியாக சொன்னவரின், அடுத்த வார்த்தைகள், இரு திராவிட கட்சிகளுக்கும் சவால் விடுவது போல் இருந்தது.

“எந்த தேர்தலிலும் திமுகவோ, அதிமுகவோ தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில்லை – அதற்கு சாத்தியமும் இல்லை – வெற்றிக்குக் கூட்டணியைப் பயன்படுத்தி கொள்ளும் அந்தக் கட்சிகள், ஆட்சி அமைக்கும்போது தனி ஆட்சி முறையை மேற்கொள்கின்றனர்” என ‘பொடி’ வைத்துப் பேசினார்.

‘எங்கள் தயவில் ஜெயித்துவிட்டு, ஆட்சியில் மட்டும் எங்களுக்கு பங்கு தராதது ஏன்? என்பது பாலகிருஷ்ணன் மறைமுகமாக திமுகவுக்கு விடுத்துள்ள, பகிரங்க கேள்வி. அவரது பேச்சை ஆமோதித்துள்ளார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி இல்லாமல் திமுக, அதிமுக என எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியது என்று பாலகிருஷ்ணன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை – அதில் மாற்றுக்கருத்து இல்லை – கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது” என்று சொன்னதோடு, பெரும்பான்மை இல்லாமல் கருணாநிதி சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சி அமைத்த சம்பவத்தையும், ஏதோ ‘ஒரு முடிவோடு‘ நினைவு கூர்ந்தார் செல்வப்பெருந்தகை.

“2006 ஆம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது – திமுகவுக்கு பெரும்பான்மை இல்லை – ஆனாலும் கருணாநிதி, முதலமைச்சராக எந்தவித நிபந்தனையும் இன்றி, சோனியாகாந்தி ஆதரவு அளித்தார்’ – 5 ஆண்டுகள் கருணாநிதியை வெளியில் இருந்து, காங்கிரஸ் ஆதரித்தது” என பழைய வரலாற்றைப் புரட்டி எடுத்து, செய்தியாளர்களிடம் படித்தார் செல்வப்பெருந்தகை.

“இனிமேல், கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு, திமுக ஜெயித்தால், அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்” எனும் காங்கிரசின் நிலைப்பாட்டை அவர் சூசகமாக சொல்லி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

திமுக கூட்டணியில் உள்ள இரு பிரதானக் கட்சிகள், ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்ற விருப்பத்தை நாசூக்காக, வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான தருணம் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அரிய தருணம் – அதற்கான அஸ்திரத்தை விஜய் ஏற்கனவே எடுத்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தோடு, தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்” என கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணி ஆட்சி எனும் முழக்கத்தை அநேக கட்சிகளும் கையில் எடுத்துள்ளதால், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது, திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment