அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவடைவதையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இக்கட்டான சூழல் காரணமாக ஜானகி அரசியலுக்கு வந்தார். ஜானகி மிகுந்த தைரியம் கொண்டவர். தைரியமாக முடிவெடுப்பவர்.
அதனால் தான் அதிமுக பிளவுபட்டபோது யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது எனவும் நீங்கள் தான் சரியானவர் எனவும் முடிவு செய்து ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அது அவருடைய மிகப்பெரிய நல்ல குணம், பக்குவத்தை உணர்த்தியது.
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை
எம்ஜிஆருக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்து வந்த ஜானகி ராமச்சந்திரனின் அரசியல் வருகை என்பது ஒரு விபத்து. அரசியலில் அவருக்கு ஈடுபாடு இல்லை. சூழ்நிலைக் கைதியாக அரசியலுக்கு வந்தார்.
அப்போது அதிமுகவின் பிரம்மாஸ்திரமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது, அதிமுக நலனுக்காக கட்சியையும், முடக்கப்பட்ட அந்த இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக மிகப்பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா” என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.
“ஜானகியை நான் 3 முறை சந்தித்துள்ளேன். அவர் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என எம்.ஜி.ஆர். கூறியதாக ஜானகி அம்மையார் என்னிடம் தெரிவித்தார்.
ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். – ஜானகி வீட்டில் எப்போது போனாலும் உணவு கிடைக்கும். நாள்தோறும் 200 முதல் 300 பேர் வரை சர்வசாதாரணமாக உணவு உண்டுச் செல்வார்கள். இது அனைத்தும் ஜானகியின் மேற்பார்வையில் தான் நடக்கும்.
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி, என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமர்சையாகக் கொண்டாடுவதை வரவேற்கிறேன்” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.