ரஜினி அரசியல் பிரவேச முடிவு: அன்று சொன்னதும் இன்று சொல்வதும்!

- மணா

”2017-ம் ஆண்டு என்னை அரசியலுக்குள் வரவழைக்க பலர் முயற்சித்தார்கள். யார் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படி நான் அரசியலில் இறங்கி இருந்தால் உடல் அளவிலும், பண நெருக்கடியிலும் மாட்டிக் கொண்டிருப்பேன்” என்று தன்னுடைய அரசியல் வருகையைப் பற்றி சமீபத்தில் திருமதி.ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவை ஒட்டி வெளியிட்ட காணொலிக் காட்சியில் வெளிப்படை தன்மையோடு சொல்லி இருக்கிறார் ரஜினி.

பாட்ஷா படம் வெளிவந்து அந்தப் படத்தில் சில பஞ்ச் டயலாக்குகளை அவர் பேசியதையடுத்து கிளம்பிய அரசியல் சர்ச்சை நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது.

“என்னுடைய இயல்புக்கு அரசியல் ஒத்து வராது” என்கிற ரீதியாக 90-களுக்கு முன்பே அவர் பல பேட்டிகளில் தன்னைப் பற்றி சொல்லியிருந்தாலும் தற்போது மீண்டும் அதை மீள் பார்வையோடு உறுதிப்படுத்தி இருக்கிறார் ரஜினி.

அரசியலுக்கு வருவதைப் பற்றி ஊடகங்களில் பெரும் சர்ச்சையும் விவாதமும் நடந்து கொண்டிருந்த நேரத்தில், ரஜினி அரசியலுக்கு வருவது இந்து தமிழ் திசை நாளிதழில், நான் எழுதியிருந்த கட்டுரையின் தலைப்பு ‘யோசித்து முடிவெடுங்கள் ரஜினி’.

துரதிருஷ்ட வசமாக அப்போது அந்தக் கட்டுரை பல விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பியது. நேரடியான சில மிரட்டல்களையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால், அன்றைக்கு நான் எழுதியிருந்த கட்டுரையின் மையப் பொருளை காலம் சாவுகாசமாக அவருக்கு உணர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அன்றைய சந்தர்ப்பத்தில் வெளியான கட்டுரை மீண்டும் இங்கே மீள் பதிவாக உங்கள் பார்வைக்கு.

****

‘’ரஜினி அரசியலுக்கு வருவாரா? அப்படி வந்தால் தனிக்கட்சியைத் துவக்கப் போகிறாரா? அல்லது வேறு ஏதாவது ஒரு கட்சியில் சேரப் போகிறாரா?’’

இவை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் எழுப்பிய பரபரப்பினால் தமிழக மக்களும் ‘எதிர்பார்க்கிற ’ கேள்விகளாகி விட்டன.

அதிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில் இந்தக் கேள்விகள் மீண்டும் உயிர் பெற்றிருக்கின்றன.

ரஜினியைப் பொறுத்தவரை அவருக்கென்று தனியான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவர் மீது மிகத் தீவிரமான ஈடுபாடு கொண்ட ரசிகர்களும் உண்டு என்பதை நேரடியாக நான் உணர்ந்திருக்கிறேன்.

‘பாட்ஷா’ படம் வெளிவந்து ‘’ரஜினி அரசியலுக்குள் நுழைவாரா?’’ என்கிற விவாதங்கள் பத்திரிகைகளில் பொறி பறக்க நடந்து கொண்டிருந்த நேரம்.

ரசிகர் மன்றங்களுக்குப் பெயர் போன நகரம் மதுரை.

(எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. என்கிற கட்சியை உருவாக்குவதற்கு முன்பே தனிக்கொடியை உருவாக்கி மையப்பகுதியான நியூ சினிமா அருகில் ஏற்றி ஆதரவு கொடுத்தவர்கள் மதுரையிலுள்ள அவருடைய ரசிகர்கள்).

அதே மதுரையின் மையப் பகுதியில் ரஜினி ரசிகர் ஒருவர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிற விதத்தில் அதிரடியான ஒரு சாகசத்தைச் செய்தார்.

தன்னுடைய உடல் முழுக்கப் சீனி வெடிச் சரத்தைக் கத்தையாக உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு ரஜினி ஆதரவுக் கோஷத்தை எழுப்பியபடி பற்ற வைத்துக் கொண்டார்.

உடம்பு முழுக்கக் காயங்களுடன் காப்பாற்றப்பட்ட அவரை சோழவந்தானுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கூரை வேய்ந்த வீட்டில் சந்தித்துப் பேட்டி எடுத்தபோது தன்னுடைய உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை விட, ரஜினி நேரடியாக அழைத்து ஆறுதலாகப் பேசி அனுப்பியதை மிக நெகிழ்வான வார்த்தைகளில் பரபரத்தபடி சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய ரசிகர்களின் மனநிலைக்கு இது ஓர் அதீத உதாரணம்.

தற்போது ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிற அவருடைய ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்நாள் முழுக்க நினைவில் வைத்திருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ரஜினி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்கிற அளவில் அவர்களுக்கு இந்த நிகழ்வு முக்கியமானது.

ஆனால் அதே நிகழ்வில் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து வழக்கம் போல பட்டும் படாமலும் பேசியிருப்பது பலரையும் குழப்பி மீடியாவிலும், வலைத்தளங்களிலும் பலத்த விவாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

பொதுவாகத் தனிக்கட்சியைத் துவக்கும்போது பலரும் முன்வைக்கும் ‘தூய பரிசுத்த’’ வாதத்தையே ரஜினியும் முன்வைத்திருக்கிறார்.

கட்சி ஆரம்பித்தால் அதற்கு நிதி உதவி அளிப்பது யார்? ஏதாவது ஆதாயம் இல்லாவிட்டால், புதுக்கட்சிக்கு நிதியளிக்க யாராவது முன்வருவார்களா? புதுக்கட்சியில் சேர முன் வருகிறவர்கள் யார்? பல கட்சி ருசி பார்த்த சகாக்கள் தானே!

இதே மாதிரியான ஊழல் தவிர்த்த தூய்மையைத்தான் அ.தி.மு.க.வைத் துவக்கியபோது எம்.ஜி.ஆரும், காலத்தின் இன்னொரு கட்டத்தில் விஜயகாந்தும் முன்வைத்தார்கள்.

அதன் பிறகு அந்தக் கட்சிகள் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி பற்றி ரஜினி நன்றாகவே உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சினிமா சார்ந்தவர்கள் அரசியலுக்கு நுழைவதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் எந்தவிதமான நோக்கத்தின் பேரில் அவர்கள் அரசியலுக்குள் நுழைகிறார்கள் அல்லது நுழைய வைக்கப்படுகிறார்கள் என்பது தான் இங்கு பரிசீலனைக்குரிய அம்சம்.

தமிழகத்தில் சினிமாத் துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

தி.மு.க. பின்னணியில் வலுவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று -இறுதிக் காலத்தில் தனிக்கட்சி துவக்கி தன்னுடைய சொந்தத் தொகுதியான சேடபட்டியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டபோது அவரைச் சந்தித்தபோது, ’’சொந்த மக்கள் என்னைக் கைவிடுவார்களா?’’ என்று மிகுந்த நம்பிக்கையோடு பேசிக் கொண்டிருந்தார்.

தேர்தல் முடிந்தபோது குறைவான வாக்குகள் வாங்கித் தோல்வியைச் சந்தித்திருந்தார்.

தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற தனிக்கட்சியைத் துவக்கிய சிவாஜிகணேசன் அ.தி.மு.க.வின் ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 50 தொகுதிகளைப் பெற்றுத் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியபோது அவருடன் தமிழகம் முழுக்கப் பயணிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.

செல்லும் இடங்களில் எல்லாம் திரளான கூட்டம். கரை புரண்ட வரவேற்பு. அதன் உற்சாகம் ததும்பப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி. ஆனால் அவர் போட்டியிட்ட திருவையாறு தொகுதியிலேயே மோசமான தோல்வியைத் தழுவினார்.

‘’அவ்வளவு கூட்டம் வந்துச்சே.. ஆனா எவனும் ஓட்டுப் போடலையேப்பா’’ என்கிற வார்த்தைகளையே தேர்தல் முடிந்தபிறகு சலிப்பான மனநிலையில் இருந்த சிவாஜியிடம் இருந்து கேட்க முடிந்தது.

அரசியலுக்கு வருவதாகச் சொன்னதை ரஜினியின் வார்த்தையில் சொன்னால் ஒரு ‘முரட்டுத்தைரியத்தோடு’ களம் இறங்கியவர் தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த்.

கட்சியைத் துவக்கி அதை மக்களிடம் எடுத்துச் செல்ல மற்றத் தலைவர்களைவிட அதிகப்படியான கிராமங்களுக்கு அலைந்து எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான வாக்குச் சதவிகிதத்தைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனவர்.

ஆனால் சினிமாத்துறையைவிட, கூடுலான அலைச்சலும், கட்சியை நிர்வகிப்பதில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் மன உளைச்சல்களும் அவருடைய உடல் நலத்தை எப்படி உருக்குலைத்திருக்கின்றன என்கிற நடைமுறை உண்மையும் பலருக்குப் புரியாமல் இல்லை.

தனிக்கட்சி துவங்கியதற்கு வேறு என்ன பலன் கிடைக்கிறதோ, இல்லையோ, உடல் மேல் பலன் கிடைக்கிறது!

சினிமா சார்ந்தவர்களுக்கு எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும் முன்னுதாரணமாகத் தெரிகிற அளவுக்கு சிவாஜியில் துவங்கி பாக்கியராஜ், டி.ராஜேந்தர் வரை பலருடைய அனுபவங்கள் அந்த நேரத்திய பரவசப் பனிமூட்டம் காரணமாகத் தெரிவதில்லை.

இந்த வரிசையில் மிகச் சமீபத்திய உதாரணம் சரத்குமார்!

இந்தச் சமயத்தில் மிக யதார்த்தமாக இருந்த இன்னொரு நடிகரைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

நவரச நடிகர் என்றழைக்கப்பட்ட முத்துராமன் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரம். அவரை அரசியலுக்குள் இறங்கச் சிலர் ஆசை காட்டினார்கள். அவருக்கும் அந்தச் சபலம் இருந்திருக்கவேண்டும்.

தமிழின் பிரபலமான வார இதழ் ஒன்றில் ‘’தான் அரசியலுக்கு வரலாமா? உங்கள் கருத்தை எழுதுங்கள்’’ என்று வெளிப்படையாக அறவித்தார்.

அதையடுத்து வந்த கடிதங்களில் பெரும்பாலானவை

‘’அரசியலில் இறங்க வேண்டாம். நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’’ என்பதை வலியுறுத்தியதும், அரசியலில் இறங்குகிற முடிவை மாற்றிக் கொண்டார் முத்துராமன்.

(ஆனால் தந்தைக்கு இருந்த விவேகம் அவருடைய மகன் கார்த்திக்கு இல்லை என்பதும் முக்கியம்!)

சரி. ரஜினியின் அரசியலுக்கு மறுபடி வருவோம்.

ரஜினி ரசிகர்களை இதுவரை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பல அரசியல் கட்சிகள் பயன்படுத்தியிருக்கின்றன.

ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டப் பொறுப்பில் இருந்த ஒருவர் ஒரு கோவில் தக்காராக இருந்ததைக் கூடப் பார்த்திருக்கிறேன்.

தேர்தல் காலத்தில் ரஜினியின் அனுமதியை மீறி அவருடைய ரசிகர்களுக்கு ‘ருசி’’ காட்டப்பட்ட அனுபவங்கள் அநேகம். இதை ரஜினியும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட ரசிகர்களை விட, சுத்த சுயம்புவான புடம் போட்ட ரசிகர்களை எங்கிருந்து ரஜினி தேடப் போகிறார்கள்?

ரஜினி ரசிகர்களுக்கு ‘ரோல் மாடல்’களாக இருப்பவர்கள் யார்? அரசியலில் நேர்மையை வலியுறுத்திய தலைவர்களுக்கு எதிலும் பணமயமாகிவிட்ட வாக்குவங்கி அரசியல் காட்டிய எதிர்வினை என்கிற யதார்த்த அரசியல் ரஜினிக்குத் தெரியாதா?

இந்தச் சமயத்தில் 96 காலகட்டத்தில் நடந்த முக்கியமான ஒன்றை அவருக்கு மீண்டும் நினைவுபடுத்தியாக வேண்டும்.

பாட்சா படம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்காத நேரம் அது. பல பத்திரிகைளில் ரஜினி அரசியல் பற்றிய கவர் ஸ்டோரிகள் தொடர்ந்து வெளிவந்து ரஜினி ரசிகர்களைப் பதட்டப்பட வைத்துக் கொண்டிருந்தன.

துக்ளக்கில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

துக்ளக் அலுவலகத்திற்கு சோ அவர்களைப் பார்க்க ரஜினி தனியாக அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பார்.

அப்போது திருச்சி, தஞ்சை துவங்கி ராமநாதபுரம், குமரி வரை தமிழகத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களில் அரசியல் ரீதியான ஒரு சர்வையைத் துக்ளக்கிற்காக நடத்துவதற்காகக் கிளம்பும்போது சோவைச் சந்தித்தபோது

‘’நீங்க அந்த சர்வேயே முடிச்சுட்டு வாங்க. அதோடு எனக்காக இன்னொரு விஷயத்தையும் பத்தியும் நீங்க எனக்காக நீங்க சர்வே பண்ணிட்டு வரணும்’’

‘’ என்ன சார்?’’

‘’ரஜினி அரசியலுக்கு வரலாமா? அவர் வர்றதைப் பத்தி ஜனங்க என்ன நினைக்கிறாங்க? அவரை ஏத்துக்குறாங்களா? இல்லையா?ன்னு கேட்டுட்டு எனக்குத் தனியா ஒரு ரிப்போர்ட் கொடுக்கணும். இது பப்ளிஷ் பண்ணுறதுக்காக இல்லை. அதனால் ஜனங்க நினைக்கிறதை அப்படியே நீங்க கொடுக்கலாம்’’

ஏறத்தாழ நான்கு நாட்கள் நடந்த அந்த சர்வேயின் போது சில ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திக்க முடிந்தது.

பெரு நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை பலதரப்பட்டவர்களைச் சந்தித்து அதை ஆடியோ வடிவில் பல கேஸட்டுகளாக ‘ரிக்கார்டும்’ பண்ணி சோ-வைச் சந்தித்தேன்.

‘’ரஜினி அரசியலுக்கு வர்றதைப் பத்தி என்ன நினைக்கிறாங்க? அதைச் சொல்லுங்க.’’- சிறு குழந்தையின் ஆர்வம் வெளிப்பட்டது அந்தக் கேள்வியில்.

ரஜினி குறித்த சர்வேயையும், ரிக்கார்ட் பண்ணப்பட்ட கேஸட்டுகளையும் கொடுத்தேன்.

அந்த சர்வேயின் படி 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்கள்.

மீதமுள்ள 25 சதவிகித்தினரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

தொடர்ந்து ரஜினி நடிக்க வேண்டும் என்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்கிற முடிவை வெளிப்படுத்திய அந்த சர்வே ரிப்போர்ட் சோ-வை சற்றே சலனப்படுத்தியிருக்க வேண்டும்.

‘’ அப்போ ரஜினி அரசியலுக்கு வரணும்னு பத்திரிகைகளில் எல்லாம் பரபரப்பா இருக்கே?’’

‘’சார்.. மீடியாவுக்கு ஒவ்வொரு சமயத்திலும் பரபரப்புக்கு ஒரு தீனி வேணும். இப்போ அப்படியொரு தீனியாக ரஜினி இருக்கார்.

அவரைப் பத்தி ஒரு கவர் ஸ்டோரி வெளிவந்தால் அந்தப் பத்திரிகை பத்தாயிரம் பிரதிகளுக்கு மேலே விற்குது. சில அரசியல் கட்சித்தலைவர்கள் அவங்களோட சொந்த நலனுக்காக அறிக்கைகள் கொடுக்கிறாங்க. அதனால் பரபரப்பா ஒட்டுமொத்த ஜனங்களும் எதிர்பார்க்கிற மாதிரி ஒரு பிரமை ஏற்படுது.

ஆனா ஜனங்க ஏத்துக்குறாங்களா இல்லையாங்குகிறது தானே முக்கியம். உண்மையா நான் எடுத்துட்டதை உங்க கிட்டே கொடுத்துட்டேன். அதுக்குப்பிறகு நீங்க முடிவு எடுத்துக்குங்க சார். ‘’

– கொடுத்துவிட்டு நான் கிளம்பிவிட்டேன்.

இது நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

மறுபடியும் அரசியலை எதிர்கொள்வது பற்றிய கேள்வி ரஜினிக்கு முன் நிற்கிறது.

இந்தக் கேள்விக்குப் பின்புலமாக யாரும் இருக்கலாம்.

ரஜினி தற்போது சொல்லிக் கொண்டிருக்கும் தூய அரசியலுக்கு நேர்எதிராகக் கடும்முடிச்சுகளுடன் –

முழுக்க முழுக்கத் தந்திரபூர்வமாக –

ஒருவருக்கு ஒருவர் வாரிவிடும் கேவலமான அரசியல் உத்திகளுடன் வியாபித்து நிற்கும் தற்கால அரசியலின் நிழலில் ரஜினி தற்போது மீண்டு வந்திருக்கிற உடல்நிலையுடன் நம்பிக்கையோடு வளர முடியுமா?

96-ல் நடந்த அரசியல் குறித்து விபத்து என்று இப்போது சொல்கிறார் ரஜினி. இப்போதைய முடிவை எதிர்காலத்தில் விபத்து என்று சொல்ல மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

தனிக்கட்சியைத் துவக்கிச் சில மோசமான சரிவுகளைச் சந்தித்தபிறகு சிவாஜியை சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, ‘’அரசியலுக்குப் போய்ட்டு வந்ததிலே இத்தனை ‘சி’ வேஸ்ட் ஆனது தான் மிச்சம்’’

– என்று தன்னுடைய கை விரல்களை உதறிக்காண்பித்து சலிப்பேறிய முகத்துடன் உதட்டைச் சற்றே பிதுக்கி விரக்தி ததும்பப் பேசியது ஏனோ நினைவுக்கு வருகிறது.

Comments (0)
Add Comment