‘All We Imagine As Light’ – நீரோட்டமாய் ஒரு வாழ்க்கை!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு ’கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்றது இயக்குனர் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. அதுவே சர்வதேச அளவில் அந்தப் படம் மீதான வெளிச்சத்தைப் பெருக்கியது.

மும்பையில் நிகழ்வதாக அமைந்த இப்படம் மலையாள மொழியில் ஆக்கப்பட்டபோதும், இதில் மராத்தி, ஹிந்தி உரையாடல்களும் உண்டு.

கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம், ஹ்ருது ஹாரூண் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ரசிகர்களிடத்தில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறுகிறது இப்படம்?

யதார்த்தமான மனிதர்கள்!

மும்பை எனும் பெருநகரத்தில், இரவு வேளையில் கொத்துக்கொத்தாக மக்கள் கூட்டம் ரயில்நிலையமொன்றில் இறங்கிச் செல்வதில் இருந்து ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைக்கதை தொடங்குகிறது.

மேட்டில் இருந்து பள்ளம் நோக்கி இறங்கும் நீரோட்டம் போன்று மக்களனைவரும் தமக்கான பாதைகளில் செல்வதாகவே அந்தத் தொடக்கக் காட்சி தெரிகிறது. அதுவே, இப்படத்தின் தன்மை எத்தகையது என்பதைப் புரிய வைக்கிறது.

மும்பையிலுள்ள மருத்துவமனையொன்றில் ‘நர்ஸ்’ ஆக பிரபா (கனி குஸ்ருதி), அனு (திவ்யபிரபா) இருவரும் பணியாற்றுகின்றனர்.

பிரபாவின் கணவர் ஜெர்மனியில் இருக்கிறார். திருமணமான சில நாட்களில் சென்றவர், சில ஆண்டுகளாக மொபைலில் மட்டுமே தொடர்பு கொள்கிறார். சமீபகாலமாக அதுவும் குறைந்துவிட்ட நிலைமை.

‘பிறந்த ஊரை விட்டு வந்தால் போதும்’ என்கிற மனநிலையில் இருப்பவர் பிரபா. மும்பையில் வசிக்கும் மலையாளியான ஷியாஸை (ஹ்ருது ஹாரூண்) அவர் காதலிக்கிறார். இது மருத்துவமனையிலுள்ள பல பணியாளர்களுக்குத் தெரியும்.

ஒருநாள், அனு காதலிக்கும் விஷயத்தை ஒரு பணியாளர் பிரபாவிடம் சொல்கிறார். ஆனால், அதன்பிறகும் அனுவிடம் அவர் அது பற்றிக் கேட்பதில்லை. ‘தன்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறாளே’ என்கிற கோபம் மட்டும் இருக்கிறது.

பிரபாவிடம் மருத்துவர் மனோஜ் (அஸீஸ் நெடுமங்காடு) நெருக்கம் பாராட்டுகிறார்.

அது காமம் சார்ந்தது என்றறியும் பிரபா, அதனை ஏற்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல் தடுமாறுகிறார்.

ஒருநாள் மனோஜ் அதனை நேரடியாக பிரபாவிடம் தெரிவிக்க, அவரிடம் தனது மறுப்பைக் கூறிவிடுகிறார்.

பிரபா, அனு உடன் மருத்துவமனையில் தூய்மைப்பணியாளராகப் பணியாற்றுபவர் பார்வதி (சாயா கடம்). கணவர் இறந்தபிறகும், அதே வீட்டில் வசிக்கிறார். ஆனால், அது சம்பந்தமான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

ஒரு கட்டுமான நிறுவனமொன்று அவர் வசிக்கும் இடத்தை ஆக்கிரமிக்கிறது. ’பத்திரம் இருந்தால் பணம் தந்து வேறு இடமும் தருகிறோம்’ என்கிறது. ’என்னால் இங்கிருந்து காலி செய்ய முடியாது’ என்று சொல்வதைத் தவிர, பார்வதியிடத்தில் வேறு பதில்கள் இல்லை.

பார்வதிக்கு உதவும் வகையில், ஒரு வழக்கறிஞரைச் சந்திக்கிறார் பிரபா. அவரும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

இந்த நிலையில், தனது சொந்த ஊரான ரத்னகிரிக்குத் திரும்பிச் செல்கிறார் பார்வதி. அவருடன் துணைக்குப் பிரபாவும் அனுவும் செல்கின்றனர்.

மலைகள் மற்றும் கடல் சூழ்ந்த அந்த ஊருக்குச் சென்றபிறகே, அனுவைப் பின்தொடர்ந்து சியாஸ் வந்திருப்பதை அறிகிறார் பிரபா. பல நாட்களாகக் கணவனின் பிரிவை அனுபவித்து வரும் அவருக்கு அது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது.

அதன்பிறகு நடக்கும் சில நிகழ்வுகள், அந்த மூன்று பெண்மணிகளின் மனதில் ஒளிந்திருக்கும் போராட்டத்திற்கு முடிவு கட்டுகிறது. அதோடு படமும் நிறைவடைகிறது.

சாதாரணமாக வாழ்வில் நாம் பார்க்கும் மனிதர்கள், இடங்கள் போன்று காட்சியாக்கம் யதார்த்தம் தோய அமைக்கப்பட்ட விதம் தான், இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.

கடத்தப்படும் உணர்வுகள்!

கனி குஸ்ருதி இதில் பிரபாவாக வருகிறார். கணவனைப் பிரிந்து தனிமையில் தவிக்கும் பெண்ணின் பரிதவிப்பு, சக மனிதர்களிடத்தில் அன்பாக, கோபமாக, சாந்தமாக வெளிப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை நடிப்பின் வழியே உணர்த்தியிருக்கிறார்.

திவ்யபிரபா இதில் அனுவாக நடித்திருக்கிறார். காதலனுடன் சேர்ந்திருக்கும் தருணங்கள் எதிர்காலத்திலும் வாய்க்குமா என்கிற கேள்வி அப்பாத்திரத்திற்குள் அலைபாய்வதை உணர்த்துகின்றன பின்பாதியில் வரும் காட்சிகள்.

‘லாப்தா லேடீஸ்’ படத்தில் டீக்கடைக்கார பெண்மணியாக வந்த சாயா கடம், இதில் பார்வதியாக வருகிறார். பூர்விகக் கிராமத்திற்குச் சென்றபின்னர் மது அருந்திவிட்டு ஆட்டம் போடும் காட்சியில் அசரடிக்கிறது அவரது நடிப்பு.

ஷியாஸ் பாத்திரத்தில் நடித்த ஹ்ருது ஹாரூண் கொஞ்ச நேரமே திரையில் தோன்றினாலும், தற்கால இளைஞர்களின் ஓருருவமாகத் திகழ்கிறார்.

இவர்கள் தவிர்த்து அஸீஸ் நெடுமங்காடு, ஆனந்த் சாமி போன்றோரும் இப்படத்தில் வந்து போயிருக்கின்றனர்.

ரன்பீர் தாஸ் ஒளிப்பதிவு ஒரு ஆவணப்படம் பார்க்கிற, நேரடியாக ஓரிடத்திற்குச் சென்று வருகிற அனுபவத்தைத் திரையில் தருகிறது.

க்ளெமெண்டின் படத்தொகுப்பு, ஒவ்வொரு காட்சியிலும் பாத்திரங்கள் பகிரும் உணர்வெழுச்சியை நமக்குக் கடத்துகிற வகையில் ஷாட்களை கோர்த்திருக்கிறது.

படத்தில் நாம் காணும் சூழல் யதார்த்தமாகத் தென்படுவதற்குத் தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் பியூஷா சால்கே, ஷமீம் கான், யஜஸ்வி சபர்வாலின் கூட்டுழைப்பே காரணம்.

டோப்சேவின் இசையானது ஓரிரு வாத்தியங்களின் இசைவைக் கொண்டு சில காட்சிகளில் எளிமையான, இனிமையான உணர்வை உருவாக்கியிருக்கிறது. அது, காட்சிகளின் அடிநாதத்தையும் நமக்குள் செலுத்துகிறது.

அரை டஜன் பாத்திரங்களை மட்டுமே திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் பாயல் கபாடியா. ஆனால், பார்வையாளர்களுக்குப் பெருநகரத்தின் மக்கள் தொகையில் அவர்கள் ஒரு துளி என்பதைப் புரிய வைக்கும் வகையில் டைட்டில் காட்சியை அமைத்திருக்கிறார்.

இதர காட்சிகளில் அந்த சூழலமைப்பை, அதில் நிறைந்திருக்கும் ஒலிகளைக் கொண்டு அப்படியொரு உணர்வை நோக்கி நம்மைத் தள்ளியிருக்கிறார்.

இப்படத்தில் சில அரை நிர்வாணக் காட்சிகள் உண்டு என்பதால், இதனைக் குழந்தைகளோடு சேர்ந்தமர்ந்து பார்க்க முடியாது. அதனாலேயே ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டிருக்கிறது.

லாஜிக் சார்ந்து கேள்விகளை எழுப்ப முடியாவகையில், ஒவ்வொரு காட்சிக்கும் கதாபாத்திரத்திற்குமான நியாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உணர்த்திவிடுகிறார் இயக்குனர்.

அதனால், திரையில் ஓடும் காட்சிகள் நமக்கு பிடித்திருக்கிறதா, இல்லையா என்ற கேள்வியே பிரதான இடத்தைப் பிடிக்கிறது.

இந்தப் படம் உணர்த்துவது என்ன என்று கேட்டால் பதில் சொல்வது கடினம்.

பெருநகரமொன்றில் எந்திரங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடி மனிதர்கள், தம்முள் ஏதோ ஒரு ஏமாற்றத்தை, வலியை, வேதனையை, சொல்லவியலா உணர்வை மறைத்து வைத்திருக்கின்றனர்.

வாழ்வின் ஓட்டத்தில் ஏதோ ஒரு கணத்தில் அது வெளிப்படுகையில் மட்டுமே, அவர்கள் ஆசுவாசம் கொள்கின்றனர்.

அது என்ன என்பது அவரவரைப் பொறுத்தது என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு ரசிகரும் தனது மனநிலைக்கு ஏற்ப ஏதோ ஒன்றைப் புரிந்துகொள்ளும் வகையில், ‘All We Imagine As Light’ ஏதோ ஒரு தகவலைக் கடத்துகிறது. அதுவே இதன் வெற்றி!

-உதயசங்கரன் பாடகலிங்கம்.

#இயக்குநர்_பாயல்_கபாடியா #Payal_Kapadia #ஆல்_வி_இமேஜின்_அஸ்_லைட் #All_we_imagine_as_light #விமர்சனம் #review #கனி_குஸ்ருதி #Kani_Kusruti #திவ்ய_பிரபா #Divya_Prabha #ஹிருது_ஹாரூன் #Hirudu_Haroon #சாயா_கதம் #Saya_Katham #அஜீஸ் #Azeez

ஆல் வி இமேஜின் அஸ் லைட் விமர்சனம்
Comments (0)
Add Comment