ஜீப்ரா – வங்கிப் பின்னணியில் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர்!

ஏதேனும் ஒரு துறை அல்லது அலுவலகத்தை மையப்படுத்திய கமர்ஷியல் திரைக்கதைகள் உடனடியாக ரசிகர்களின் கவனத்தைப் பெறும். நேர்த்தியான காட்சியாக்கம் அமையும் பட்சத்தில், அப்படம் பெரிய வரவேற்பை ஈட்டும்.

காவல், நிர்வாகம், வருவாய் என்று மக்களுக்கு நன்கு தெரிந்த மாநில அரசுத் துறைகள் முதல் சில மத்திய அரசுப் பணிகள் வரை நாம் சினிமாவில் கண்டிருக்கிறோம்.

அந்த வரிசையில், வங்கியை அடிப்படையாகக் கொண்ட கதைகளை மிக அரிதாகவே பார்த்திருக்கிறோம்.

அந்த இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறது ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், சத்யா, சுரேஷ் மேனன், சுனில், ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஜீப்ரா’ தெலுங்கு திரைப்படம்.

தீபாவளிக்கு வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் தற்போது தமிழ், இந்தி மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ‘பான் இந்தியா’ படமாக வந்திருக்கிறது.

வங்கிப் பெட்டகத்திலுள்ள பணம் கொள்ளையடிக்கப்படுவதை மையப்படுத்திய இக்கதையானது ஒரு ‘ஆக்‌ஷன் த்ரில்லர்’ வகைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அது எந்த வகையில் நமக்கு சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறது?

பணத்தின் பின்னே..!

பேங்க் ஆஃப் ட்ரஸ்ட் எனும் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணியாற்றுகிறார் சூர்யா (சத்யதேவ்).

சர்க்கரை நோய் குறைபாடுடைய தாய் உடன் சிறிய வீட்டில் வசிக்கும் இவருக்குச் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது ஒரு கனவு.

சூர்யாவின் நீண்ட நாள் காதலி சுவாதி (பிரியா பவானிசங்கர்) இன்னொரு வங்கியில் பணியாற்றுகிறார்.

இரண்டு நாட்கள் கழித்து, அவரும் சூர்யாவின் வங்கிக்கு மாறவிருக்கிறார்.

இந்த நிலையில், கடைசி நாள் அன்று தான் பணியாற்றும் வங்கியில் ஒரு தவறுக்குத் துணை போய்விடுகிறார் சுவாதி.

ஒருவரது வங்கிக்கணக்கில் இட வேண்டிய காசோலைத் தொகையை, பென்னி எனும் நபருக்கு அனுப்பி விடுகிறார்.

நான்கு லட்ச ரூபாய் தொகையை அந்த நபர் உடனே வங்கியில் இருந்து எடுத்துவிடுவதோடு, ‘உங்க தவறுக்கு நான் பொறுப்பாக முடியாது’ என்று சுவாதியிடம் பதில் சொல்கிறார்.

சுவாதியின் நிலைமை அறிந்ததும், தனது இன்னொரு முகத்தைக் காட்டுகிறார் சூர்யா. அதாகப்பட்டது, வங்கியின் விதிமுறைகளில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி முறைகேடாக அந்தப் பணத்தைப் பென்னியிடம் இருந்து பெற முயற்சிக்கிறார்.

சூர்யா நினைத்தவாறே, பென்னியை ஏமாற்றி அவரது இன்னொரு கணக்கில் இருந்து நான்கு லட்ச ரூபாயை லவட்டுகிறார். அதே நேரத்தில், அந்த கணக்குக்கு வந்த 5 கோடி ரூபாய் பணம் ‘மிஸ்’ ஆகிறது.

அது, சூர்யாவின் வங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த வங்கிக்கணக்கு போலியானது.

இது பற்றி பேங்க் ஆஃப் ட்ரஸ்டுக்கு புகார் வர, சூர்யாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, அந்த வங்கிக்கணக்கு தன்னுடையது இல்லை என்று அதிகாரிகளிடம் நிரூபிக்கிறார் சூர்யா. ஆனால், வேறொரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.

விசாரணை நிகழும்போது, சூர்யாவுக்கு ஒரு போன் வருகிறது. அதனை அவர் நிராகரிக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் சூர்யாவின் தாய் அவருக்குத் தெரியாமலேயே கடத்தப்படுகிறார். அதன் பின்னணியில் இருப்பவர் ஆதி (டாலி தனஞ்ஜெயா).

ஆதிக்கும் சூர்யாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

சீனாவில் இருக்கும் நிறுவனத்தில் இருந்து பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியவில்லை என்பதால், ஒரு விமானத்தை விலைக்கு வாங்க முடியாமல் தவிக்கிறார் ஒரு தொழிலதிபர் (சுனில்). ஆதியைத் தேடி அவர் வருகிறார்.

அந்த ‘டீலை’ முடித்து தர ஒப்புக்கொள்ளும் ஆதி, ‘பினாமியான உனக்குப் பின்னால் இருக்கும் ஒரிஜினல் முதலாளியை பார்க்க விரும்புகிறேன்’ என்கிறார். அதற்கு அந்த தொழிலதிபரும் ஒப்புக்கொள்கிறார்.

அந்த வேலையை முடிக்கும் முன்னர் அனுப்பப்படும் கமிஷன் தொகை 5 கோடியை பென்னியின் பெயருக்கு மாற்றச் சொல்கிறார் ஆதி.

அந்தத் தொகை தான் சத்யாவின் பெயரில் இருந்த போலி கணக்குக்கு மாற்றப்பட்டு திருடப்படுகிறது. அதனை அறிந்ததும், அந்த தொழிலதிபர் ஆதியை அவமானப்படுத்துகிறார்.

‘எனக்கு என்னோட 5 கோடி தான் திரும்ப வேணும்’ என்கிறார்.

அதனால், ஆதி அதனைச் சூர்யாவிடம் அத்தொகையைத் திருப்பித் தருமாறு கேட்கிறார்.

காதலிக்கு உதவப்போய் சிக்கலில் மாட்டிக்கொண்ட சூர்யா, அந்த 5 கோடியை ஆதியிடம் திருப்பித் தந்தாரா? அதற்காக, அவர் தான் பணியாற்றும் வங்கியில் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்தார் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

மேலோட்டமாகப் பார்க்கையில், இது ஒரு வங்கியின் பணப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பரீதியிலான கதையாகத் தெரியலாம்.

ஆனால், அதன் மீது காதல், அன்பு, நட்பு, நன்றி என்று பல உணர்வுகளைப் பூசி ஒரு அக்மார்க் ‘தெலுங்கு படமாக’ தந்திருக்கிறார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்.

பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பம் வந்துவிடுவதால், இத்திரைக்கதையில் லாஜிக் குறைபாடுகளை யோசிக்க நேரமில்லாமல் போகிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

பரபரக்கும் இசை!

சூர்யாவாக வரும் சத்யதேவ், வங்கியில் பணியாற்றும் டிப்டாப் இளைஞர் என்பதை நம்பும் வகையில் தோன்றியிருக்கிறார்.

ரொம்பவும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அடக்கி வாசித்திருக்கிறார். மற்றபடி, ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான அம்சங்களை திரையில் பிரதிபலித்திருப்பது அருமை.

பிரியா பவானிசங்கர் இதில் நாயகி. ஹீரோவுடன் கொஞ்சி, கெஞ்சி, ஒட்டி உறவாடித் தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

டாலி தனஞ்ஜெயா இதில் ஆதியாக வருகிறார். நாயகனுக்கு இணையான பாத்திரம். அவருக்கு ஜோடியாகச் சில காட்சிகளில் அம்ருதா ஐயங்கார் வருகிறார்.

தனஞ்ஜெயாவின் பாத்திரம் வில்லத்தனமானதா, நாயகத்தனமானதா என்பதில் ஒரு குழப்பம் நிலவுகிறது. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

சுனில் இதில் ஆங்காங்கே ஆபாசமான வார்த்தைகளை ‘ம்யூட்’டில் உச்சரித்து ‘காமெடி’ செய்கிறார். கொஞ்சமாய் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

சத்யராஜ் இதில் ‘பாபா’ எனும் பாத்திரத்தில் நான்கைந்து காட்சிகளுக்கு வந்து போகிறார். கேஜிஎஃப் வில்லன் ராமச்சந்திர ராஜுவும் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுக்கான காட்சிகள் சில ‘கட்’ செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் பேசும் சில வசனங்கள் அந்தரத்தில் தொங்குகின்றன.

நாயகனின் நண்பனாக வரும் சத்யா, ரொம்பவும் ‘டெக்னிகலாக’ திரைக்கதையில் சில தகவல்கள் சொல்லப்படும்போது ஏற்படும் அயர்வை தனது இருப்பால் குறைத்திருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து சுரேஷ் மேனன், ஜெனிஃபர், கல்யாணி நடராஜன், மகாதேவன் என்று பலர் இதில் வந்து போயிருக்கின்றனர்.

சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு பெரும்பாலான பிரேம்களை திரையில் பளிச்சென்று காட்டியிருக்கிறது. ஒரு கமர்ஷியல் திரைக்கதையோடு சேர்ந்து ஓடுவது போன்று இதன் ஒளிப்பதிவு அமைக்கப்பட்டிருக்கிறது.

வங்கி அலுவலகம், நட்சத்திர ஹோட்டல் உட்புறம், பாபாவின் ரகசியச் செயல்பாடுகளுக்கான பஜார் கடைகள் போன்றவை ‘செட்களாக’ அமைய துணை நின்றிருக்கிறது சின்னாவின் தயாரிப்பு வடிவமைப்பு.

அனில் கிரிஷின் படத்தொகுப்பு, ஒவ்வொரு காட்சியையும் மிகச்செறிவாக ‘கட்’ செய்திருக்கிறது. அதனால், பரபரவென்று திரைக்கதை நகர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

யுவாவின் கூடுதல் திரைக்கதையோடு இணைந்து இப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்.

லாஜிக் மீறல்கள் என்று யோசித்தால் வண்டி வண்டியாகத் தேறுகிற ஒரு திரைக்கதையைக் கொண்டிருந்தாலும், பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்துக்கொண்டு காதில் திறமையாகப் பூ சுற்றி அதனை மறக்கடித்திருக்கிறார்.

பல காட்சிகளைத் தனது பின்னணி இசையால் தாங்கிப் பிடித்திருக்கிறார் ரவி பஸ்ரூர். பரபரவென்று காட்சிகள் நகர வைத்திருப்பது அதன் பலத்தைக் காட்டுகிறது.

குறிப்பாக, ஒரேநேரத்தில் சத்யராஜ், சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா ஆக்‌ஷனில் ஈடுபடுவதாக வரும் கிளைமேக்ஸ் காட்சியில் அவரது இசை ‘அதகளம்’.

பாடல்கள் வழக்கமான தெலுங்கு படங்களைப் பிரதியெடுத்திருக்கின்றன.

இவை தவிர்த்து சண்டைப்பயிற்சி வடிவமைப்பு, நடன வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ் என்று பல தொழில்நுட்பங்கள் இத்திரைக்கதைக்குத் தகுந்த உழைப்பைக் கொட்டியிருக்கின்றன.

சில பலவீனங்கள்!

ஒரு சிறிய தவறு பெரிய சிக்கலில் மாட்டிவிடுவதாகக் காட்டுகிறது ‘ஜீப்ரா’ திரைக்கதை.

அதற்கேற்ப, இடைவேளை காட்சியும் கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இடைவேளையின் விஸ்வரூபமாக வெளிப்படும் கேள்விக்குறி அதன் பின்வரும் காட்சிகளில் சட்டென்று நீர்த்துபோய்விடுகிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம்.

போலவே, இக்கதையில் வில்லன் யார் என்று முடிவு செய்வதில் இருக்கும் சிக்கலையும் களைந்திருக்கலாம். அதுவே, டாலி தனஞ்ஜெயா சம்பந்தப்பட்ட கிளைக்கதையை ஆறாவது விரல் ஆக்கியிருக்கிறது.

சத்யராஜ், ராமச்சந்திர ராஜு சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ‘கத்திரி’ போட வைத்திருக்கிறது.

இப்படத்தில் சத்யாவின் பாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் பிரியா பவானிசங்கருக்குத் தரப்படவில்லை.

அதேபோல, வங்கியில் பணப் பரிமாற்றத்தில் நிகழும் தகிடுதத்தங்கள் நிதானமாகத் திரைக்கதையில் விளக்கப்படவில்லை.

அது போன்ற பலவீனங்களைப் புறந்தள்ளிவிட்டால், பரபரவென்று நகரும் ஒரு கமர்ஷியல் திரைப்படம் கண்ட அனுபவத்தை ‘ஜீப்ரா’ நிச்சயம் தரும்.

படக்குழுவும் அதனை மட்டுமே தங்களது பலமாக நம்பி களம் கண்டிருக்கிறது. நிச்சயம் அதற்கேற்ற வெற்றி வாய்க்கும்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment