நிறங்கள் மூன்று – அப்பாக்களின் பாசக் கதை!

ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜப்பானிய, கொரிய மொழி உட்பட உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து ரசித்தபிறகு, இதே போன்று தமிழில் ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடத்தில் தோன்றுவது இயல்பு. இயக்குனர் ஒருவர் அப்படிச் சிந்திக்கிறபோது, ரசிகர்களுக்குப் புதுமையான படைப்பொன்று காணக் கிடைக்கும். ஆனால், அந்த எண்ணத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற கதை, அதனைத் தமிழில் சொல்வதற்கு ஏற்ற காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் போன்றவை அதற்குத் தேவை.

அந்த வரிசையில், தான் பார்த்து வியந்த மேற்கத்திய படங்களுக்கு அர்ப்பணம் செய்யும்விதமாக ‘நான்லீனியர்’ திரைக்கதை உத்தியுடன் ‘துருவங்கள் பதினாறு’ இயக்குனர் கார்த்திக் நரேன் தந்திருக்கும் படமே ‘நிறங்கள் மூன்று’.

சரத்குமார், ரஹ்மான், அதர்வா, அம்மு அபிராமி, சின்னி ஜெயந்த், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார். தொண்ணூறுகளில் வெளியான இளையராஜாவின் சில பாடல்களும் இதில் பயன்படுத்தபட்டிருக்கின்றன.

மேற்சொன்ன விஷயங்களே ‘நிறங்கள் மூன்று’ குறித்து எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும். அதற்குத் தக்கவாறு படம் அமைந்திருக்கிறதா?

மூன்று தந்தைகள்!

’நிறம்’ ஒன்று, இரண்டு, மூன்று என்று இப்படத்தின் முன்பாதி மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

முதல் கதையானது, ஸ்ரீ (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) எனும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனைச் சுற்றி நடக்கிறது.

ஸ்ரீயின் தந்தை, தாய் இருவரும் வீட்டில் சண்டையிட்டவாறே இருக்கின்றனர். அதனால், அவர்கள் மீதான மரியாதை குறைவதோடு வீட்டில் இருப்பதே எரிச்சலாக உணர்கிறார். அது பள்ளியிலும் வெளிப்படுகிறது. அதனைக் கவனிக்கிறார் ஆசிரியர் வசந்த் (ரஹ்மான்).

வசந்தின் மகள் பார்வதி (அம்மு அபிராமி) மீது ஸ்ரீக்கு ‘ஈர்ப்பு’ அதிகம். ஆனால், தனது பெற்றோரை அழைத்துப் பேசி அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை வசந்த் சரி செய்ததும், அந்தப் பார்வை மாறுகிறது. அதனால், அந்த ஈர்ப்பை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் தடுமாறுகிறார்.

இந்த நிலையில், ஒருநாள் காலை வேளையில் சில நபர்கள் ஒரு இளம்பெண்ணைக் கடத்துவதைக் காண்கிறார் ஸ்ரீ. அன்றைய தினம் வகுப்பறையில் வசந்த் முகம் வெளிறிப் போயிருப்பதையும் உணர்கிறார். அதையடுத்து, பார்வதி காணாமல் போனதாகத் தகவல் தெரிய வருகிறது.

அதன்பிறகு, ஸ்ரீ என்ன செய்தார்?

இரண்டாவது கதை, திரைப்பட இயக்குனராகும் முயற்சிகளில் இருக்கும் வெற்றியைச் (அதர்வா) சுற்றி நிகழ்கிறது.

வெற்றியின் கதையை ஒரு பெரிய இயக்குனர் (ஜான் விஜய்) திருடிவிடுகிறார். அதனைக் கொண்டு, அவர் அடுத்த படத்தைத் தொடங்கவிருக்கிறார்.

அதனை அறிந்ததும், பதிவு செய்யப்பட்ட தனது ஸ்கிரிப்டை வீட்டில் தேடுகிறார் வெற்றி. ஆனால், அதனைக் காணவில்லை.

அது எப்படி திருடு போனது? அந்த கேள்விக்குப் பதில் தெரியாமல் பைத்தியம் பிடித்தவாறு உணர்கிறார் வெற்றி. தான் வழக்கமாக உபயோகிக்கும் போதைப்பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்கிறார்.

அதனை அறிந்து, அவரைத் தடுக்க முயல்கின்றனர் நண்பர்கள். அதன்பிறகு, வெற்றியின் நிலை என்னவானது?

மூன்றாவது கதை, பார்வதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியைச் சுற்றி நகர்கிறது.

ஒருநாள் காலையில் டியூஷன் செல்வதாகச் சென்ற பார்வதி வீடு திரும்பவில்லை. தூங்கி எழும் தந்தை வசந்த், ’பார்வதி எங்கே’ என்று மனைவியிடம் கேட்கிறார். அவர் பதில் ஏதும் சொல்வதில்லை. வீட்டில் இருந்து வேலைக்குச் செல்லும் வரை, மகள் வீடு திரும்பவில்லை.

தான் வேலை பார்க்கும் பள்ளிக்குச் சென்ற பிறகும், அந்த எண்ணம் அவரை வாட்டியெடுக்கிறது. உடன் படிக்கும் மாணவிகளின் தந்தைகளிடம் போன் செய்து விசாரிக்கிறார். ‘பார்வதி இங்கு வரவில்லை’ என்ற பதிலே கிடைக்கிறது. இந்த நிலையில், காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் செல்கிறார் வசந்த்.

அங்கு, இன்ஸ்பெக்டர் செல்வத்தை (சரத்குமார்) நோக்கி லாக்கப்பில் இருக்கும் ஒரு நபர் கத்திக் கொண்டிருக்கிறார். ‘என்னோட அப்பா யார் தெரியுமா, அமைச்சர்’ என்று சத்தமிடுகிறார்.

அதனைக் கண்டு திகைத்து நிற்கும் வசந்திடம், ‘ஸ்டேஷன் செலவுக்கு பணம் கொடுத்துட்டு போங்க, பொண்ணை கண்டுபிடிச்சிடலாம்’ என்று சொல்லிச் செல்கிறார் செல்வம்.

போலீசாரின் விசாரணையின்போது, தான் கொண்டு வந்த சைக்கிளை ஓரிடத்தில் விட்டுவிட்டு ஒரு காரில் பார்வதி ஏறிப்போனதாகத் தெரிய வருகிறது.

பார்வதி எங்கு, யாருடன் சென்றார்?

மேற்சொன்ன மூன்று கதைகளிலும் மூன்று தந்தைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். ஆம், இந்தக் கதைகளில் வெற்றியின் தந்தையாக செல்வம் இடம்பெற்றிருக்கிறார். இதர பாத்திரங்களும் ஒன்றையொன்று அறியாமல் ஒரு தொடர்பிழையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

மூன்று அப்பாக்களும் எப்படிப்பட்டவர்கள்? அவர்களது உண்மையான சுயரூபம் என்ன என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. கூடவே, அவர்களது பிள்ளைகளின் பிரச்சனைகள் சரியாகினவா என்றும் சொல்கிறது.

அயர்ச்சி தரும் அனுபவம்!

ஜென்ஸீ தலைமுறையும் ‘கூஸ்பம்ஸ்’ ஆகிற வகையிலமைந்த காட்சியமைப்பு, அதன் பின்னணியில் தொண்ணூறுகளை தெறிக்க விட்ட இளையராஜாவின் பாடல்கள் என்று ஒரு ‘கிளாசிக்’ படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது ‘நிறங்கள் மூன்று’ திரைக்கதையின் தொடக்கம்.

மூன்று வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியை நோக்கிச் செல்வதாகக் காட்டி, அந்த சுவாரஸ்யம் மேலும் அதிகமாகிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் அந்த எதிர்பார்ப்பு எல்லாம் அப்படியே நீர் வற்றிய மணல் பரப்பாகிப் போகிறது. காரணம், அதற்கேற்ற காட்சி சித்தரிப்பு இல்லாமல் போனது தான். அந்த வகையில், இயக்குனர் கார்த்திக் நரேன் ஏமாற்றம் அளிக்கிறார்.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப, படத்தின் காட்சியமைப்பை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி.

படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங், எந்தக் காட்சி எங்கு தொடங்கி எங்கு முடிவடைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியிருக்கிறார். கூடவே, படத்தில் நாம் பார்வையாளர்கள் என்னென்ன வண்ணங்களைக் காண வேண்டுமென்று தீர்மானிக்கும் வேலையையும் செய்திருக்கிறார்.

சிவசங்கரின் தயாரிப்பு வடிவமைப்பில், இயக்குனர் காட்ட விரும்பிய உலகத்திற்கு திரையில் உயிரூட்டப்பட்டிருக்கிறது. ஓரளவு வசதியான மனிதர்களின் வீடுகள் முதல் காவல் நிலையம், படப்பிடிப்புத்தளம் என்று பலவற்றைத் திரையில் ‘யதார்த்தம்’ என்று உணர வழி வகுத்திருக்கிறது.

இன்னும் ஒலி வடிவமைப்பு, சண்டைக்காட்சிகள், ஆடை வடிவமைப்பு என்று பல அம்சங்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

வெற்றி பாத்திரம் போதையில் உழல்வதைக் காட்சிரீதியாகச் சொல்ல, ஆங்காங்கே விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை, சில இடங்களில் அபாரமானதாக அமைந்து காட்சியின் தன்மையை மேலும் உயர்த்திப் பிடிக்கிறது.

துஷ்யந்த் ஜெயபிரகாஷ், அவரது நண்பர்களாக வரும் இரண்டு இளைஞர்கள் தொடங்கி சரத்குமார், ரஹ்மான், அதர்வா, அம்மு அபிராமி, ரித்திகா, உமா பத்மநாபன், ஜான் விஜய், சந்தானபாரதி என்று பலர் இதில் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

அதர்வாவின் நண்பர்களாக வருபவர்கள், துஷ்யந்தின் பெற்றோராக நடித்தவர்கள், காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்கள், அமைச்சரின் ஆட்கள் என்று பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

சிறப்பான நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தபோதும், இப்படம் தியேட்டரில் அயர்ச்சியான அனுபவத்தையே தருகிறது. காரணம், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுப் பிணைப்பு சரிவரத் திரையில் வெளிப்படாதது தான்.

கூடவே, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகப் பாத்திரங்களே பிரதானமாகக் காட்டப்பட்டிருப்பதும், சாதாரண மக்களின் வாழ்வுக்குப் பொருந்தாததாகக் கதை நகர்வு அமைந்திருப்பதும் திரை உடனான இடைவெளியை அதிகப்படுத்துகின்றன.

இது தேவையா?

‘அலைகள் ஓய்வதில்லை’ காலம் தொட்டே பதின்ம வயதினரின் காதலைச் சொல்கிற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் துஷ்யந்த், அம்மு அபிராமி பாத்திரங்கள் இதில் காட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால், படம் பார்க்கும் பருவ வயதினரிடத்தில் ‘காதலில் நிதானம் தேவை’ என்று ‘கிளாஸ்’ எடுக்க வாய்ப்பே இல்லை என்பதாகவே  அந்த சித்தரிப்பு அமைந்திருக்கிறது.

அது பரவாயில்லை என்பது போல, அதர்வாவின் பாத்திரம் விதவிதமான போதைப்பொருட்களில் உழல்வதாகக் காட்சிகள் உள்ளன.

‘ஓ, இப்படியெல்லாம் போதைப்பொருள் இருக்கா’ என்று இளைய தலைமுறை தேடித் திரியும் வகையிலேயே அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பது, ‘இது தேவையா’ என்று புலம்பலை நிச்சயம் பெற்றோர்களிடத்தில் எழுப்பும். ‘போதைப்பொருட்கள் தீங்கு விளைவிக்கும்’ என்று சொல்லிவிட்டு இந்த அருஞ்சொற் பொருள் விளக்கம் தேவையா?

ரஹ்மான், சரத்குமார், துஷ்யந்தின் தந்தையாக வருபவர், சந்தானபாரதி என்று நான்கு தந்தைகள் இக்கதையில் உண்டு. அவர்களில் சந்தானபாரதி பாத்திரச் சித்தரிப்பில் இருக்கும் முழுமை மற்ற மூன்றிலும் இல்லை என்பது இப்படத்தின் பெருங்குறை.

‘இந்த உலகில் நல்லவர், தீயவர், நல்லவராகவும் தீயவராகவும் நடிப்பவர் என மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றனர்’ என்று சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

அவரது எண்ணத்திலோ, அதனைச் செயல்படுத்தும் முயற்சியிலோ தவறில்லை. ஆனால், திரைக்கதையில் எதனை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டுமென்பதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் குழப்பத்தால் மொத்தப்படமும் விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது.

மேற்கத்திய பாணியில் ‘நான்லீனியர்’ பாணி கதை சொல்லலைக் கொண்டது என்ற வகையில் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் சிலரை ஈர்க்கலாம். ’அது மட்டுமே போதுமா’ என்பவர்கள், ஏமாற்றத்தோடு தியேட்டரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment