எமக்குத் தொழில் ரொமான்ஸ் – அதுல ‘கவனம்’ முக்கியம்!

சில நாயகர்களின் படங்கள் வருகிறது என்றால், கண்களை மூடிக்கொண்டு மனதில் எதிர்பார்ப்புகளை ஏற்றிக் கொள்ளலாம். சமீபகாலமாக அசோக்செல்வன் நடித்துவரும் படங்களின் திரைக்கதைகள் அதற்குத் தக்கவாறு அமைந்தன.

அதுவே, பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ மீதும் கவனிப்பு விழக் காரணமாக இருந்தது.

இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம்பெருமாள், பக்ஸ், படவா கோபி, சோனியா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப, இதில் திகட்டத் திகட்டக் காதல் காட்டப்படுகிறதா?

நாயகன் – நாயகி காதல்!

உமாசங்கர் (அசோக் செல்வன்) ஒரு உதவி இயக்குனர். அவரது இயக்குனரின் சமீபத்திய படம் தியேட்டரில் வெளியாகிறது.

அதனைக் காணத் தனது சகோதரி குழந்தைகள், சக உதவி இயக்குனர்கள் சகிதம் தியேட்டருக்கு செல்கிறார். தியேட்டர் வாசலில் கிடைக்கும் வரவேற்பு, அந்தப் படம் முடிவடையும்போது ‘கொல வெறி’யாக மாறுகிறது.

அந்த சோகத்தில், அன்றிரவே தனது சகோதரி கணவருடன் (படவா கோபி) இணைந்து அவரை மது அருந்த வைக்கிறது. வீடு திரும்பும் இருவரையும் சகோதரி (சோனியா) விரட்டியடிக்க, தெருவில் இறங்கி நடக்கிறார் உமாசங்கர். அப்போது, அவர் எதிரே ஒரு அழகான பெண் வந்து நிற்கிறார்.

அந்தப் பெண்ணின் பெயர் லியோனா (அவந்திகா மிஸ்ரா). அவரது தோழிகள் ‘லியோ’ என்றழைக்கின்றனர்.

லியோனாவைப் பார்த்த நொடியில் காதல் கொள்கிறார் உமாசங்கர். அடுத்த நாளும் தற்செயலாக அவரைப் பார்க்கிறார். அப்புறமென்ன, அவர் பின்னாலேயே செல்கிறார். அவரது பெயர், மொபைல் எண், வீடு இருக்கும் இடம் என்று எல்லா விவரங்களையும் அறிகிறார்.

மிகச்சில நாட்களிலேயே, தனது காதலையும் லியோனாவிடம் வெளிப்படுத்துகிறார் உமாசங்கர். ஆனால், அவரோ ‘நான் வேலைக்காக டெல்லி செல்கிறேன்’ என்கிறார்.

அவரிடத்தில், ‘சென்னையில் எத்தனை பேர் உங்களுக்காக வாழ்கின்றனர்’ என்று ‘பீலிங்க்ஸ்’ காட்டுகிறார் உமாசங்கர். ஆனாலும் லியோனா கேட்பதாக இல்லை.

அதனால் மனமுடைந்து விரக்தியில் திரிகிறார் உமாசங்கர். அடுத்த சில நாட்களிலேயே, லியோனா டெல்லி செல்லவில்லை என்று அவருக்குத் தெரிய வருகிறது. அதற்குக் காரணம் என்ன என்பது அவருக்குப் புரிகிறது.

பிறகு, லியோனாவும் உமாசங்கரும் உருகி உருகிக் காதலிக்கின்றனர்.

அந்த நேரத்தில், உமாசங்கரின் தோழி (மதுமிலா) கர்ப்பமுறுகிறார். அதனைக் கலைப்பதற்காக மருத்துவமனை செல்கிறார். அங்கு, மருத்துவரிடம் உமாசங்கரைத் தனது கணவர் என்று அறிமுகப்படுத்துகிறார். அதனை லியோனாவின் தோழி பார்த்துவிடுகிறார்.

அதன்பிறகு என்ன நடக்கும் என்பதைச் சிறு குழந்தைகளும் சொல்லிவிடுவார்கள். லியோனா தனது மனதில் இருந்து காதலைத் தூக்கியெறிய, அதனைச் சரி செய்ய உமாசங்கரின் நண்பர்கள் சில பொய்களை அவிழ்த்துவிட, தொடரும் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது படமும் ‘சுபம்’ என்று சொல்லி முடிவடைகிறது.

வழக்கமான ‘நாயகன் நாயகி காதல்’ கதை என்றபோதும் ஆள் மாறாட்டக் குழப்பம், பொய்களால் விளையும் பிரச்சனைகள் என்று நகைச்சுவையைத் தருவதற்கான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

ஆனால், அதனைத் தகுந்த வகையில் திரைக்கதையாக்கி ரசிகர்களுக்குத் தருவதில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர்.

காப்பாற்றும் நடிப்புக்கலைஞர்கள்!

எழுத்தாக்கம் செய்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் பாலாஜி கேசவன். படத்தின் இரண்டாம் பாதியில் சிரிக்க நிறையவே காட்சிகளைத் தந்திருக்கிறார். ஆனால், அதே கவனத்தை முன்பாதியில் காட்டத் தவறியிருக்கிறார்.

மோசமான படம் எடுக்கும் ஒரு இயக்குனரையும், அவரது கதை சொல்லலையும் கிண்டலடிக்கும்விதமாகச் சில காட்சிகளை அமைத்திருப்பது ‘கொஞ்சமாய்’ சிரிப்பை வரவழைக்கிறது.

ஆனால், அதே போன்று கிண்டலடிக்கும்விதமாகவே நாயகன் நாயகியை முதன்முறையாகச் சந்திப்பது தொடங்கி அவர்களுக்கு இடையே ஊடல் ஏற்படுவது வரை பல காட்சிகள் ‘க்ரிஞ்ச்’ ஆக இருக்கின்றன. அதுவே இப்படத்தின் பலவீனம்.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில், ‘ரொமான்ஸ் காமெடி’ வகைமைக்கு நியாயம் செய்யும்விதமாகக் காட்சியாக்கம் செய்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஜெரோம் ஆலன் காட்சிகளை ‘ஷார்ப்’ ஆக கத்தரித்திருக்கிறார். கலை இயக்குனர் எஸ்.ஜெயச்சந்திரன் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களுக்கான பணியை இயக்குனர் சொன்னவாறு செய்திருக்கின்றனர்.

ஆனாலும், உள்ளடக்கத்தில் இருக்கும் வெற்றிடம் காரணமாகச் சில காட்சிகள் முழுமையான ‘சினிமா’ அனுபவத்தைத் தருவதாக இல்லை.

அந்தக் குறையை மறக்கடிக்கும்விதமாக, இதில் பாடல்களைத் தந்திருக்கிறார் நிவாஸ் பிரசன்னா.

என்ன, பாடல் வரிகளைத் தேர்வு செய்வதில் இன்னும் சிரத்தை காட்டியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால், காலம் கடந்தும் கேட்க வசதியாக இருந்திருக்கும்.

பின்னணி இசையானது பல காட்சிகளில் அரைகுறையாக உள்ள நகைச்சுவைத் தன்மையை நிறைவாகக் காட்ட உதவியிருக்கிறது. மிகச்சில இடங்களில் நல்ல நகைச்சுவையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

’குஷி’ கிளைமேக்ஸ் உண்டாக்கிய பாதிப்பில், இதிலும் சில முத்தக்காட்சிகள் இருக்கின்றன. லேசுபாசாக இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கின்றன. அதனைத் தவிர்த்திருந்தால், படத்திற்கு வேறொரு ‘வண்ணம்’ கிடைத்திருக்கக் கூடும்.

நாயகன் அசோக் செல்வன், ஏற்கனவே நாம் பார்த்த படங்களில் வருவது போன்று ஒரு சாதாரண இளைஞராக இதில் தோன்றியிருக்கிறார். அந்த இயல்பான நடிப்புதான் தனது ‘ப்ளஸ்’ என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். ரொம்ப நல்ல விஷயம்.

நாயகி அவந்திகா மிஸ்ரா ஏற்கனவே நாம் பார்த்த காஷ்மீரா பர்தேஷி, ‘காசுமேல’ ஷர்மிலி உட்படச் சிலரை நினைவூட்டும் முகத்தைக் கொண்டிருக்கிறார். ‘ஒரு கமர்ஷியல் படத்தில் நாயகி இவ்வளவு நடித்தால் போதும்’ என்ற அளவுகோலோடு படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.

முன்பாதியில் அடர்த்தியான தலைமுடி, நீளமான கிருதா உடன் அடியாள் வேடங்களில் நடிப்பவராக வரும் பகவதி பெருமாள் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

பின்பாதியில் அந்த இடத்தை ஊர்வசி எடுத்துக் கொள்கிறார். ‘ஏங்க கொஞ்சம் காபி கொடுங்க’ என்று அவர் அழகம் பெருமாளிடத்தில் கேட்கிறபோது தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது.

அதே ரகத்தில் படம் முழுக்கச் சிரிப்பைத் தூவத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

இயக்குனராக நடித்திருக்கும் பரணிதரன், நாயகனின் நண்பனாக வரும் விஜய் வரதராஜ், தோழியாக வரும் மதுமிலா, தந்தையாக வரும் அழகம்பெருமாள், படவா கோபி, சோனியா, பக்ஸின் காதலி மற்றும் மச்சானாக வருபவர்கள், மருத்துவராக கிளைமேக்ஸில் தோன்றும் எம்.எஸ்.பாஸ்கர் என்று பலர் இதில் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.

உண்மையைச் சொன்னால், பலவீனமான காட்சியமைப்பைக் காப்பாற்றுவது இவர்களது நடிப்புத்திறமை தான்.

‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ என்று டைட்டில் வைத்தபோதும், இதில் நாயகனைப் பெண்கள் பின்னால் ஜொள்ளுவிடுபவராகக் காட்டவில்லை.

தாய் தந்தை மட்டும் ‘பத்தாவது படிக்கறப்பவே’ என்று ஒரு வசனத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.

நாயகன் நாயகி ரொமான்ஸ் காட்சிகளிலும் சிரிப்பை நிரப்பவில்லை. அதுவே, டைட்டிலுக்கு படக்குழு நியாயம் சேர்க்கவில்லை என்பதை உணர்த்துகிறது. ’ரொமான்ஸ் படம்னு வந்தபிறகு அதுல கவனம் வைக்க வேணாமா’ என்று ரசிகர்களைப் புலம்ப வைக்கிறது.

லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளினாலும் கூட, சில காட்சிகள் ’இப்படி பண்றீங்களேம்மா’ என்று அலுத்துக்கொள்ளும்விதமாகவே நகர்கின்றன.

நல்லதொரு ‘காம்பினேஷன்’ அமைந்தும், அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தபோதும், எங்கோ ஓரிடத்தில் ‘சிறப்பான வெற்றி’யைத் தவறவிட்டிருக்கிறது இப்படம்.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதையை வடித்திருந்தால், நல்லதொரு ‘பொழுதுபோக்கு’ படமாக மாறியிருக்கும் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’. இப்போது, அதனைச் சொல்லியாக வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது.

 – உதயசங்கரன் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment