நூல் அறிமுகம்: தெய்வம் என்பதோர்!
இதுவே வரலாறு என்று கருதப்பட்ட நிகழ்வுகளெல்லாம் இப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தாய்தெய்வ வழிபாடு எப்படியெல்லாம் திரிந்துள்ளது, அவை மருவி கடந்து வந்த பாதையை விளக்குகிறது முதற்கட்டுரை.
நீலிக்கண்ணீர் என்ற வார்த்தையின் பின்னணியில் உள்ள கதை வேளாளர்களின் தீரத்தை விளக்குவதோடு, திருஞானசம்பந்தரால் தேவாரத்தில் பதிவு செய்யப்பட்டு காலத்தை வென்று நிலைத்துள்ளது.
அன்றாடம் நம் வழக்கில் பயன்படுத்தும் வார்த்தையின் பின் ஒளிந்துள்ள செய்தி சுவாரஸ்யம்.
அரசர்களின் நிலவுடைமைக்கு சான்றாய் அமைந்த உலகம்மை வழிபாடு. வள்ளிக்கும் முருகனுக்கும் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தகவல்கள் ஆச்சர்யம்.
சித்ரகுப்த வழிபாடு மூலம் பரம்பரை பரம்பரையாய் கணக்குபிள்ளை பதவி வந்ததை விளக்குகிறது.
சமண சமயத்தின் தாக்கம் இன்றளவும் தொடர்வதை கள ஆய்வுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
சமயச் செயல்பாடுகள் மடங்கள் என்னும் அதிகார மையங்களான நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட காலச்சூழலில் வாழ்ந்தவர், வள்ளலார்.
சைவ சமய ஆன்மீக வரலாற்றில் எழுந்து வெற்றி பெற்ற ஒரு முரண்பாடு என வள்ளலாரை மதிப்பிடுகிறார்.
வைணவத்தில் கிருஷ்ண வழிபாடு நிலைபெற்ற விதத்தை விளக்குகிறது அடுத்த கட்டுரை.
கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வமாகவும் மட்டுமே ஆழ்வார்கள் பார்க்க பாரதியோ தாயாகவும் தோழனாகவும் சற்குருவாகவும், ஆண்டானாகவும் அடிமையாகவும் நாயகியாகவும் பார்ப்பது வியப்பளிக்கிறது.
அதன்பின் உள்ள விளக்கம் பாரதி மதம் மீது கொண்ட பார்வையை இயல்பாக உணர்த்துகிறது.
திருப்பாவையில் வரும் ஒரு சொல்லின் பின்புலத்தில் ஆசிரியர் ஆண்டாளின் கல்வியறிவை எடைபோடுவது வியப்பு.
தேவைக்கேற்ப பாசுரங்களையும் அதன் விளக்கமும் வைணவத்தின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கிறது.
கடந்த நூற்றாண்டின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த பல்வேறு கோவில் நுழைவு போராட்டங்களை விளக்கும் கட்டுரை ‘மரபு மீறலும் மோதலும்’.
அதற்குமுன் இருந்த நடைமுறை பார்பனர்கள் அதிகாரம் பெற்றபின் எவ்வாறு திரிந்தது, இழந்த அதிகாரத்தை பெற அந்தந்த சமூக மக்கள் போராடினாலும் இன்றளவில் கூட அது முழுமையடையவில்லை என்பதே நிதர்சனம்.
காலனிய மரபின் எதிர்வினையாகப் பாரதியார் உருவானார், என்றால், இந்து தேசியத்தின் எதிர்வினையாகப் பெரியார் உருவானார்.
மத நம்பிக்கையை எதிர்த்த பெரியார் நாட்டார் தெய்வங்களையும் நாட்டார் வழக்கங்களையும் எதிர்க்கவில்லை, அது ஏன்? என்ற வினாவின் விடையே அடுத்த கட்டுரை. பெரியாரியம் என்று நாம் வகைப்படுத்தும் சிந்தனை மரபு பெரியாருக்கு முன்பே தொடங்கியதாகும்.
கடைசிக் கட்டுரைகள் இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்பணர்களின் பங்கு, பக்தி இலக்கியங்களுக்கு பின் தமிழ் இலக்கியத்தின் ஆரம்பகால வளர்ச்சி, விடுதலைக்குப்பின் நிலவிய சமூக நல்லிணக்கம், ‘இந்து’ என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்ட விதத்தையும் விவரிக்கிறது.
வேத, ஆகம, மத கோட்பாட்டிற்கு அப்பால் தமிழ்நாடு மகத்தான வரலாற்றையும், எண்ணற்ற சிறுதெய்வ நம்பிக்கையையும் கொண்டுள்ளது.
அதன் கள ஆய்வு அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாகவே இப்புத்தகம் அமைகிறது.
வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை, சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது, ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச் செய்தது, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டவாறே சிதம்பரம் கோயிலை அணுக வேண்டும்.
தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் சிதம்பரம் கோயிலின் அர்த்தமண்டபத்தில் தமிழ்பாட ஒரு இயக்கம் நடத்தியதும் அவர் தோற்றுப்போனார் என்பதும் குறிப்பிடத் தகுந்தவை.
வ.சுப.மா தோற்றுப்போன பின்னர் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியார் மேடையில் தமிழில் பாடி வழிபட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார்.
உயர் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசும் அதனை ஏற்று ஆணை வெளியிட்டது. அவர் கோயிலுக்குள் சென்று தமிழில் பாடி வழிபாடு செய்தார்.
கோயிலுக்கு பொன் வேய்ந்த மாமன்னர்களும் பெற முடியாத உரிமையினை சிவனடியார்கள் பெற்றனர். வள்ளலாரின் கனவு நனவாயிற்று.
நூல் : தெய்வம் என்பதோர்
ஆசிரியர்: தொ. பரமசிவன்
கலப்பை பதிப்பகம்
பக்கம்: 125