பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவை!

கர்நாடக இசைப் பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்படும் பாலமுரளிகிருஷ்ணா ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர்.

தன் பெற்றோர்களிடம் இசை பயின்ற முரளிகிருஷ்ணா, பின்னர் முறையாக சங்கீதம் பயின்று தனது எட்டாவது வயதிலேயே பொது மேடையொன்றில் தனது முதல் கச்சேரியை நடத்தினார்.

அந்த கச்சேரியில் அவரது பாடல் திறனை மெச்சி, அவருக்கு ‘பால’ என்ற அடைமொழி வழங்கப்பட்டது.

அகில இந்திய வானொலியுடன் இணைந்து 60களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா தனது பக்திப் பாடல்களுக்காக அப்போது பிரபலமாக அறியப்பட்டார்.

முதலில் விஜயவாடா, பின்னர் ஹைதராபாத் வானொலி நிலையங்களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா, பின்னர் சென்னை அகில இந்திய வானொலியிலும் பணியாற்றி, சென்னையிலேயே குடி பெயர்ந்தார்.

உலகெங்கும் பல ஆயிரக்கணக்கான கச்சேரிகளை பாலமுரளிகிருஷ்ணா நடத்தியிருக்கிறார். ஏராளமான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

1978ல் அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. பின்னர் 1991ல் இந்திய அரசின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் பட்டமும், பிரெஞ்சு அரசின் செவாலியர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

பக்தப் பிரகலாதா என்ற தெலுங்குப் படத்தில் பாலமுரளிகிருஷ்ணா முதலில் நடித்தார்.

தமிழ்த் திரைப்படங்களில் அவர் பல பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

திருவிளையாடல் படத்தில் அவர் பாடிய ‘ஒரு நாள் போதுமா’ பாடல் மிகப் புகழ் பெற்றது. கலைக்கோயில் படத்தில் சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய ‘தங்கரதம் வந்தது வீதியிலே’, நூல் வேலி படத்தில் அவரது ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’, கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் அவர் பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ போன்ற பாடல்கள் பெரிய அளவில் ‘ஹிட்’ ஆகின.

பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நல்ல குரல்வளம் மட்டுமன்றி, பலமொழிகளில் சிறந்த உச்சரிப்புடன் அழகாகப் பாடும் வல்லமைப் பெற்றவரும் கூட.

உண்மையான கர்நாடக சங்கீதத்தை மக்கள் ரசனைக்கு எடுத்துச் சென்ற முரளிகிருஷ்ணா அவர்கள், மற்றவர்கள் இதுவரை எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.

இந்திய இசையை இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் கொண்டு சென்ற சங்கீத மாமேதை பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவையே!

  • நன்றி : முகநூல் பதிவு
Comments (0)
Add Comment