வித்யாசாகர் இசையில் உயிர் பெற்ற ‘உயிரோடு உயிராக’!

’அமராவதி’ படத்தில் அறிமுகமான நடிகர் அஜித்குமாரின் வெற்றிப்பட வரிசை ’ஆசை’யில் தொடங்கியது. அதற்குப் பின்னர் வந்த படங்களில் ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ போன்றவை அவரைத் தனியாக அடையாளம் காட்டின. அப்படங்களுக்குப் பிறகு ’உன்னைத் தேடி’, ‘வாலி’, ‘ஆனந்தப்பூங்காற்றே’, ‘அமர்க்களம்’, ‘நீ வருவாய் என’ என்று ‘ஏறுமுகம்’ கண்டார் அஜித்.

ஆனால், மேற்சொன்ன படங்களுக்கு நடுவே அவர் நடித்த பல படங்கள் சுமார் வெற்றிகளையும் சூப்பரான தோல்விகளையும் கண்டிருக்கின்றன. அவற்றில் பல படங்கள் இன்றும் அவரது தீவிர ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன. அப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும், அதில் அவரது நடனமும் நடிப்பும் சிலாகிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றாகத் திகழ்கிறது ‘உயிரோடு உயிராக’. இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகின்றன.

’மென்மையான காதல்’ படம்!

எந்த மொழிப் படமானாலும், காதல் வகைமையை ரசிக்கப் பெருங்கூட்டம் எப்போதும் உண்டு. ரொமான்ஸ் உடன் இணைந்த ஆக்‌ஷன், காமெடி, ட்ராமா என்று பல்வேறு வகைமைகளுடன் பிணைந்த கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்தப் படங்களில் எல்லாம் நாயகன், நாயகியின் காதலைப் பிரிப்பதற்கென்றே ஒரு வில்லனோ அல்லது கூட்டமோ இடம்பெற்றிருக்கும். அந்த எதிர்ப்புகளைப் புறந்தள்ளிவிட்டு காதலர்கள் ஓடும்போது, அப்படத்திற்கு ‘எண்ட் கார்டு’ வந்து நிற்கும்.

அப்படிப்பட்ட திரைப்படமாக அமையாமல், ஒரு மனிதனின் காதலை மிக மென்மையாகத் திரையில் சொன்னது ‘உயிரோடு உயிராக’.

மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக, எப்போது வேண்டுமானாலும் மரணத்தைத் தழுவலாம் என்ற சூழலில் இருக்கும் நாயகன். அவரை ஒரு இளம்பெண் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். அவர்தான் நாயகி.

ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். அந்தப் பெண் கர்ப்பமுறுகிறார். அதற்குப் பின் என்னவானது என்பதைச் சொன்னது ‘உயிரோடு உயிராக’.

சுஷ்மா அகுஜா இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கினார். இவரது மகளான ரிச்சா தான் இதில் நாயகியாக நடித்தார். இப்படத்திற்குப் பிறகு, அவர் ‘டும் டும் டும்’ படத்தில் விவேக்கின் ஜோடியாக இடம்பெற்றார்.

வித்தியாசமான கூட்டணி!

பாலு மகேந்திரா, டி.ராமாராவ், யாஷ் சோப்ராவின் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சுஷ்மா. சிங்கிதம் சீனிவாச ராவ், எல்.வி.பிரசாத் போன்ற ஜாம்பவான்களோடு நட்பு கொண்டவர். சுருக்கமாகச் சொன்னால், மேற்சொன்ன இயக்குனர்கள் தமிழ், தெலுங்கில் இருந்து இந்தியில் படங்களை ‘ரீமேக்’ செய்தபோது, அவற்றின் மொழியாக்கத்தில் பங்கேற்றிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், 1977-ம் ஆண்டில் இருந்து தனது கணவர் சுதீர் அகுஜாவின் பணி காரணமாக மும்பையில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார் சுஷ்மா. அதனால், தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்கும் எண்ணம் ஒரு கனவாகவே அவரைத் தொடர்ந்து வந்தது. 1998 நவம்பர் 21-ம் தேதியன்று அது திரையில் மலர்ந்தது.

இந்தியத் திரையுலகின் சிறந்த படத்தொகுப்பாளர்களில் ஒருவராகக் கோலோச்சி வரும் ஸ்ரீகர் பிரசாத் இதில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் தமிழில் பிரதாப் போத்தன் இயக்கிய ‘லக்கிமேன்’, ‘சீவலப்பேரி பாண்டி’ போன்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்படத்திற்குப் பின்னர் அஜித்தின் ‘தீனா’, ‘ராஜா’ படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரது மனைவி வைஷ்ணவி, தொண்ணூறுகளில் வெளியான ‘நெத்தியடி’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகியாகவும் குணசித்திர நடிகையாகவும் இடம்பெற்றவர்.

எண்பது, தொண்ணூறுகளில் பல தமிழ் படங்களில் பணியாற்றிய வி.கலை இதில் கலை இயக்குனராகப் பணியாற்றினார்.

இப்படிப் பழமையும் புதுமையும் இணைந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு ‘உயிரோடு உயிராக’வில் கலந்திருந்தது. குறிப்பாக, இதில் வித்யாசாகரின் இசை இடம்பெற்றிருந்தது.

மெலடி மெட்டுகள்!

அன்பே அன்பே நீ என் பிள்ளை, பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது என்று வைரமுத்துவின் வரிகளில் அமைந்த இரண்டு பாடல்கள் இன்றும் இப்படத்தின் முகவரியாகத் திகழ்கின்றன.

அந்த இரண்டு மெலடி மெட்டுகள் தவிர்த்து ‘வண்ணக்கிளி சூல் கொண்ட சின்னக்கிளி வருக’, ‘நதி எங்கே வளையும்’ என்று மேலும் இரண்டு மெல்லிசைப் பாடல்களும் இதிலுண்டு.

‘ஐ லவ் யூ’, ’நத்திங் நத்திங்’ பாடல்கள் துள்ளல் ரகத்தில் அமைந்தாலும், அவற்றினூடே மெலடி இழையோடும்.

அந்த வகையில், வித்யாசாகர் – வைரமுத்து கூட்டணியில் அமைந்த ‘உயிரோடு உயிராக’ மெல்லிசை தாங்கிய ‘இசை ஆல்பமாக’ இருந்தது. அப்படத்திற்கு உயிரூட்டியது வித்யாசாகர் இசை என்றால் அது மிகையல்ல.

ஆனாலும், அக்காலகட்டத்தில் இப்படமும் சரி, இதில் இடம்பெற்ற பாடல்களும் சரி, பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. பின்னாட்களில் வித்யாசாகரின் தீவிர ரசிகர்களால் நினைவுகூரப்படும் ஆல்பங்களில் ஒன்றாக மாறிப்போனது ‘உயிரோடு உயிராக’.

’அமர்க்களம்’ படம் வழியே ஆக்‌ஷன் ஹீரோவாக உருமாறினார் அஜித்குமார். அதன்பிறகு, அவர் நடித்த படங்களில் ரொமான்ஸ் எபிசோடு இடம்பெறுவதே அரிதாகிப் போனது.

அந்த வகையில், அவரது நீண்டகால ரசிகர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ‘உயிரோடு உயிராக’!

  • உதய் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment