விரக்தியால் ஏற்படும் விபரீத விளைவுகள்!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு நிபுணராக உள்ள டாக்டர் பாலாஜி, சில நாட்களுக்கு முன் மருத்துவமனையிலேயே கத்தியால் குத்தப்பட்டார்.

தனது தாயாருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கருதிய அவரது மகன் விக்னேஷ் என்ற இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பின் பாலாஜி உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பதற்றமும், பீதியும் பொதுமக்கள் மத்தியில் இருந்து விலகாத நிலையில், தஞ்சை அருகே அரசு பள்ளிக் கூடத்தில் ஆசிரியை ஒருவர், கோரமான முறையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் பெயர் ரமணி. 24 வயதான இவர் எம்.ஏ., பி.எட்., பட்டதாரி. சின்னைமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 4 மாதங்களாக தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவரும் சின்னைமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

தான், ரமணியை காதலிக்கும் விஷயத்தை மதன்குமார், பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மதன்குமார் குடும்பத்தினர், ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

ரமணியின் உறவினர் ஒருவர், ”மதனின் பழக்க வழக்கம் சரி இல்லை” என ரமணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மனம் மாறிவிட்டார். பெண் கேட்டுச் சென்ற இடத்தில் ”மதனைப் பிடிக்கவில்லை” என ரமணி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், ரமணியை தீர்த்துக்கட்டும் விபரீத முடிவை எடுத்தார். நேற்று காலை ரமணி பணியாற்றி வந்த பள்ளிக்குச் சென்றார்.

ரமணிக்கு வகுப்பு இல்லை என்பதால் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் அமர்ந்து இருந்தார். அங்கு சென்ற மதனுக்கும் ரமணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், மதன்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரமணியின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

அலறியபடி நிலைகுலைந்து சரிந்த அவரது வயிற்றிலும் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த ரமணியை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, மதன்குமாரை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரமணி குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

– மு.மாடக்கண்ணு.

Comments (0)
Add Comment