“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பயணிகள் கேட்டார்கள்.
கல்கத்தா மெயில் வண்டி பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த மெயில் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து எங்கள் ஸ்பெஷலுக்கு முன்பு புறப்படும் என்றும், அது புறப்பட்டு போன பின்பு அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் ஸ்பெஷல் வண்டி புறப்படும் என்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார்.
இதைக் கேட்டதும் ஸ்பெஷல் வண்டியிலே உள்ள தேசபக்தர்களுக்கு கோபம் வந்து விட்டது.
“என்ன அந்த மெயில் வண்டிக்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னால் புறப்பட்ட எங்களை அனாவசியமாக இங்கே மூன்று மணிக்கு மேல் காக்கப்போட்டு, எங்கள் வண்டிக்கு முன்னால் மெயிலைப் போகவிடுவது என்றால், இதைவிட எங்களுக்கு அவமதிப்பு இன்னும் என்ன இருக்கிறது?” என்று அந்த ஸ்டேஷன் மாஸ்டரோடு ஒரே போராட்டம் ஏற்பட்டு விட்டது.
இந்தக் கூச்சல், குழப்பம் கப்பலோட்டிய தமிழன் காதில் விழுந்தது. வண்டியை விட்டு அவர் இறங்கி வந்தார்.
வெகு வேகமாக ஓடி ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று விசாரித்தார். விவரம் விளங்கியவுடன் போராட்டப் பிரிவுக்கு அவரே தளபதியானார்.
இரயிலில் இருந்தவர்களை எல்லாம் கையமர்த்திவிட்டு சிதம்பரம் பிள்ளையே அந்த வழக்கை வாதித்து, “எங்கள் வண்டிக்கு முன்னால் மெயில் வண்டியைப் போகவிடமாட்டோம். எங்கள் வண்டிக்கு அரைமணி நேரத்துக்குப் பின்னால்தான் மெயிலை விடவேண்டும்.
எங்கே, அந்த மெயில் வண்டி எங்களுக்கு முன்னால் எப்படிப் போய்விடும் என்பதைப் பார்த்துவிடுகிறோம்” என்று சிதம்பரனார் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சவால்விட்டார்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் என்ன செய்வேன். எனக்குக் கிடைத்துள்ள உத்தரவுப்படிதான் நான் என் கடமைகளைச் செய்ய வேண்டும். மெயில் வண்டி முன்னால் போக வேண்டும் என்று உத்தரவு செய்தது நானல்ல” என்று ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார்.
“மெயில் வண்டி முன்னாலே போகட்டும், பின்னாலே போகட்டும். அதைப் பற்றி அக்கறையில்லை. எங்களை எதற்காக இங்கே அனாவசியமாக மூன்று மணிநேரம் காக்கப் போட்டீர்கள்?
இந்த மூன்று மணி நேரமும் வண்டி ஓடியிருந்தால் இன்னேரம் நாங்கள் கல்கத்தா சென்று சேர்ந்திருப்போம் அல்லவா?” என்று சிதம்பரனார் ஸ்டேஷன் மாஸ்டரைத் திரும்பக் கேட்டார்.
“உண்மைதான்; இது சரியான கேள்விதான். ஆனால், உங்கள் வண்டியை இங்கே மூன்று மணி நேரம் காக்கப்போட வேண்டுமென்பது ஏற்பாடல்ல. அது எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டது.
இந்த ஸ்டேஷனில்தான் மெயில் வண்டி உங்கள் வண்டியைத் தாண்டி முன்னால் போக வேண்டும் என்பது டிராபிக் மானேஜருடைய உத்தரவு. மெயில் வண்டி இன்றைக்கு சுமார் மூன்று மணி நேரம் லேட். அதனால், இந்த சங்கடம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்யலாம்?” என்றார்.
“என்ன செய்யலாம்? என்றா கேட்கிறீர்கள். எங்கள் வண்டியை உடனே விடலாம் என்கிறேன்! மூன்று மணி நேரம் லேட் ஆன மெயில் வண்டி இன்னும் கொஞ்சம் லேட் ஆகிவிட்டால் என்ன முழுகிப் போகும்? எங்கள் வண்டியை விடச் சொல்லுங்கள்” என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.
அப்படிச் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்றார் ரயில் நிலைய அதிகாரி. அப்படிச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், எப்படிச் செய்வது சரியென்று எங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டே சிதம்பரனார் வண்டியை நோக்கி வந்தார்.
இதற்குள் வண்டியில் இருந்த எல்லா இளைஞர்களும் இறங்கிவந்து சிதம்பரம் பிள்ளையைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அவர்களைப் பார்த்து சிதம்பரம் பிள்ளை, “ஒரு சொற்பொழிவு செய்து அந்த மெயில் வண்டி நம்முடைய வண்டிக்கு முன்னால் போகக் கூடாதென்று நாமெல்லாரும் மெயிலுக்கு முன்னால் தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு சத்தியாகிரகம் செய்வோம். மெயில் எப்படி முன்னால் போய்விடும் பார்ப்போம்” என்றார்.
உடனே சிதம்பரம் பிள்ளையினுடைய கட்சிக்கு ஏராளமான ஆட்கள் சேர்ந்து விட்டார்கள்.
எனக்குத் தெரிந்த யாரார் அதில் சேர்ந்தார்கள், யாரார் சேரவில்லை என்பது இப்போது நினைவில் இல்லை. ஆனால், ராஜாஜியும் வேறு சிலரும் சேர்ந்து மெயிலை அப்படிச் செய்வது சரியல்ல என்றார்கள்.
ஆனால், சிதம்பரம் பிள்ளையுடன் காந்தியடிகளுக்காக வாதாடி ஆதரவு தந்து கொண்டிருந்த வரதராஜ முதலியாரும் அவரது நண்பர்களும் சிதம்பரனாருடன் தண்டவாளத்தில் படுத்துக் கொள்ளத் தயாராகி விட்டார்கள்.
காந்தியடிகளுக்கு ஆதரவாக ‘ஓட்டு’ போடுவதற்கென்றே வந்த வேறு சிலரும் சிதம்பரம் தலைமையில் சேர்ந்து கொண்டார்கள்.
எங்கள் ரயில் வண்டி, மெயில் வண்டிக்கு முன்னால் போக வேண்டும் என்பதற்காக, அப்போது சிதம்பரனார் அணி எழுப்பிய கோஷங்களையும், கோபதாபப் பேச்சுக்களையும் இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. அவ்வளவு வீராவேசமாகச் செயல்பட்டார் அன்று சிதம்பரம் பிள்ளை.
வெள்ளைக்காரனுடைய அதிகாரக் கோட்டையைத் தகர்த்தெறியும் படைக்குரிய தளபதி போல அன்று கப்பலோட்டிய தமிழன் வெகு களிப்புடன் போராடினார்.
சிதம்பரம் படை தயார்! மெயில் வண்டிக்கான கைகாட்டி இறங்கிவிட்டது. வேகத்தில் மெயில் வந்துகொண்டிருக்கிறது. சிதம்பரம் பிள்ளையும் அவருடன் சேர்ந்த வீரர்களும் இஞ்சினுக்கு முன் தண்டவாளத்தில் குதித்துவிட துடித்துக்கொண்டிருந்தார்கள்.
எங்கள் வண்டியைச் சேர்ந்த சிலர், சிதம்பரம் பிள்ளையிடம் சென்று இந்த முரட்டு முயற்சியை விட்டுவிடுமாறு கெஞ்சிக் கேட்டார்கள். பலிக்கவில்லை.
சேலம் விசயராகவாச்சாரி திலகரைப் பின்பற்றும் ஒரு தீவிரவாத தேசபக்தர். சிதம்பரமும் திலகர் பக்தர், அதனால் விஜயராகவாச்சாரி சொன்னால் அவர் கேட்பார், போராட்டத்தைக் கைவிடுவார் என்று ராஜாஜி, நாகராஜ ஐயரிடம் கூறியதைக் கேட்ட சிலர், வ.உ.சி.யை விஜயராகவாச்சாரியார் அழைப்பதாகக் கூறி அவரை அழைத்து வந்தோம்.
உடனே ராஜாஜி வலிய விசயராகவாச்சாரியாரிடம் மிகவும் விநயமாகப் பேசியதன் விளைவாக, சிதம்பரம் பிள்ளையிடம் விஜயராகவாச்சாரியார் சாதுர்யமாகப் பேசினார். பிள்ளையும் மதித்தார். அதனால், மெயில் முன்னால் போயிற்று. நாங்கள் பின்னால் போனோம்.
இந்தச் சம்பவத்தில் சிதம்பரம் பிள்ளையினுடைய ஆண்மையையும், வெகுவிரைவில் கட்சி சேர்த்துவிடக்கூடிய ஆற்றலையும், எதிர்ப்புகளுக்கு அஞ்சாத அவரது துணிச்சலையும், தலைவனுக்கு உடனே தலைவணங்கும் தளபதியின் தன்மையையும் நான் கண்ணாரக் கண்டேன்.”
‘தேசபக்தர் மூவர்’ என்ற நூலில் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை.
– நன்றி: ரெங்கையா முருகன்