ஒரு குற்றம் குறித்த விசாரணையைத் திரையில் காட்டும் படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன.
அதுவும், கொலை வழக்கு தொடர்பான திரைக்கதைகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களும் திருப்பங்களும் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை தருகின்றன. அந்த வரிசையில் ஒரு திரைப்படமாக மாற முயற்சித்திருக்கிறது ‘ஆனந்த் ஸ்ரீபாலா’ எனும் மலையாளத் திரைப்படம்.
அபிலாஷ் பிள்ளை எழுத்தாக்கத்தில் விஷ்ணு வினயன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அர்ஜுன் அசோகன், அபர்ணா தாஸ், சைஜு குரூப், சித்திக், தியான் சீனிவாசன், அஜு வர்கீஸ், ஷிவதா உடன் ‘பூவே உனக்காக’ சங்கீதாவும் நடித்துள்ளார். ரஞ்ஜின் ராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.
‘ஆனந்த் ஸ்ரீபாலா’ தரும் காட்சியனுபவம் எத்தகையதாக உள்ளது?
ஒரு விசாரணை!
போலீஸ் அதிகாரியாக முயற்சித்துவரும் ஆனந்த் ஸ்ரீபாலா (அர்ஜுன் அசோகன்), சில வழக்குகளில் போலீசாருக்கு உதவும் விதமாகப் பழைய வழக்குகள் தொடர்பான குறிப்புகளைச் சேகரித்துக் கொடுத்து வருகிறார்.
அவரது தாய் ஸ்ரீபாலா (சங்கீதா) ஹெட் கான்ஸ்டபிளாக இருந்தவர். ஒரு வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சிலர் அவரைக் கொன்றுவிடுகின்றனர். பதின்ம வயதில் அதனை நேரில் பார்த்த காரணத்தால், அந்த சம்பவம் ஆனந்தை மனதளவில் பாதிக்கிறது.
அவரை ‘ஹாலுசினேஷனுக்கு’ உள்ளாக்குகிறது. அதன் காரணமாக, தாய் ஸ்ரீபாலா தன்னுடன் இருப்பதாகவும், உரையாடுவதாகவும் அவர் உணர்கிறார்.
தொலைக்காட்சியில் குற்றப் பின்னணி தொடர்பான நிகழ்ச்சியொன்றில் பணியாற்றும் ஸ்ரீபாலா, ஒரு வழக்கில் புலனாய்வுக் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக ஆனந்தை அழைத்துச் செல்கிறார்.
சட்டக்கல்லூரி மாணவியான மெரின் ஜாய் (மாளவிகா மனோஜ்) எனும் இளம்பெண், கொச்சி ஆற்றுப்பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் வழக்கு அது. அம்மாணவியின் பெற்றோர் அதனைக் கொலை என்று சொல்கின்றனர். அந்தக் கோணத்தில் போலீசார் விசாரிக்கவில்லை என்கின்றனர்.
அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையையும் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் சோதித்துப் பார்க்கும் ஆனந்த், அது ஒரு கொலை என்று மனதுக்குள் உணர்கிறார். அவரது தாய் ஸ்ரீபாலாவும் அப்படியொரு புலனாய்வு அறிவைக் கொண்டிருந்தவர் தான்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் உணர்ந்ததை ஆனந்த் சொல்ல, அது அவரது போலீஸ் கனவுக்கு வேட்டாக மாறுகிறது.
மெரின் ஜாய் மரண வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவ்வழக்கை மறுவிசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி சங்கர் தாஸுக்கு (சைஜு குரூப்) ஆனந்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி எரிச்சலூட்டுகிறது. மக்களைத் திசை திருப்பும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாகக் கருதுகிறார்.
அதோடு நின்றுவிடாமல், போலீஸ் அதிகாரி தேர்வில் ஆனந்த் தேர்ச்சி அடைவதையும் தடுத்து நிறுத்துகிறார். மனநலக் கோளாறால் அவர் அவதிப்பட்டு வருவதைக் காவல் துறைக்குத் தெரிவிக்கிறார்.
இந்தச் சூழலில், மெரின் ஜாய் மரணம் ஒரு கொலை என்று தான் நிரூபிக்கப் போவதாகச் சங்கர் தாஸிடம் சவால் விடுகிறார் ஆனந்த்.
தாய் ஸ்ரீபாலா தனது கண்களுக்குத் தெரிவதையே ஒரு குறைபாடாகச் சொன்ன காரணத்தால், அதே தாயின் வழிகாட்டுதலோடு அந்த வழக்கைப் புலனாய்வு செய்கிறார்.
ஆனந்துக்கு வெற்றி கிடைத்ததா? மெரின் ஜாய் உண்மையில் கொலை செய்யப்பட்டாரா? அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
சில மாத இடைவெளிக்குப் பின், காவல் துறையினரால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோருவதில் இருந்து தொடங்குகிறது ‘ஆனந்த் ஸ்ரீபாலா’ திரைக்கதை.
அது ஒருபுறமிருக்க, தாய் தனது கண்களுக்குத் தெரிவதாக நாயகன் எதிர்கொள்ளும் மனப்பிரமையை அவ்வழக்கு விசாரணைக்கான ஒரு கருவியாகக் காட்டுகிறது.
ஆங்கில சீரிஸான ‘டெக்ஸ்டர்’ரில் இதே போன்றதொரு கரு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தழுவி அமைக்கப்பட்டிருந்தாலும், சாதாரண ரசிகனை நாயகனோடு பிணைக்கும் வகையில் அமைந்திருக்கிறது இதன் கதை. அதுவே இதன் யுஎஸ்பி.
இன்னும் ஈர்க்கச் செய்திருக்கலாம்!
ஒரு மரணம், அது தொடர்பான நாயகனின் விசாரணை என்று இரு வேறு கதைகள் இதில் அமைந்திருந்தாலும், இரண்டாவதற்கே முக்கியத்துவம் தந்துள்ளது அபிலாஷ் பிள்ளையின் திரைக்கதை.
அதனால், நாயக பாத்திரமும் அதன் தாய் பாசமும் பிரதான இடத்தைப் பெற்றிருக்கின்றன.
அதன் மூலமாக ஒரு புலனாய்வு நிகழ்வதாகக் காட்டியிருப்பதால், இந்த ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ எளிதாக ஒருவரை ஈர்க்கும்.
ஆனால், அதனை இன்னும் ஈர்க்கச் செய்வதற்கான திருப்பங்கள், சுண்டியிழுக்கிற காட்சிகள் திரைக்கதையில் இல்லை. அதுவே இப்படத்தின் குறை. போலவே, அந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான டீட்டெய்லிங் எளிதில் புரியும்படியாக இல்லை.
முன்பாதி முழுக்க நாயகனோடு காவல் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கொள்ளும் ஈகோ மோதலே காட்டப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், இடைவேளை காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்வதாக உள்ளது.
இரண்டாம் பாதியில் மட்டுமே கதை அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது. ஆதலால், இது முழுக்க முழுக்க நாயகனை மையப்படுத்திய படமாகவே இருக்கிறது. அது சிலரை அதிருப்திக்கு உள்ளாக்கலாம்.
விஷ்ணு நாராயணனின் ஒளிப்பதிவு, ஓரளவு நடுத்தர பட்ஜெட்டில் தயாரான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை உண்டாக்குகிறது.
கிரண் தாஸின் படத்தொகுப்பு, அதற்கேற்றாற் போன்று திரையில் கதை சீராக விரிய உதவியிருக்கிறது.
சாபு ராமின் கலை வடிவமைப்பு, காட்சிகளுக்கேற்ற பின்னணியை அமைத்து தந்திருக்கிறது. ரஞ்ஜின் ராஜின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையானது பின்பாதியில் காட்சிகளோடு நம்மை ஒன்றை வைப்பதாக உள்ளது.
நடிப்பைப் பொறுத்தவரை, நாயகன் அர்ஜுன் அசோகன் இருப்பு திருப்திகரமாக அமைந்துள்ளது. காவல் துறையில் சேர்வதற்கான வேட்கை, கம்பீரம், விவேகம் போன்றவை அவரது உடல்மொழியில் அறவே தென்படவில்லை.
மாறாக, மனநலப் பிரச்சனையால் அவர் அவதிப்படுவதைக் காட்டும்விதமாகவே அப்பாத்திரம் அமைக்கப்பட்டிருப்பது திரைக்கதை ட்ரீட்மெண்டையே மாற்றியமைத்திருக்கிறது.
அபர்ணா தாஸுக்கு இதில் அதிக முக்கியத்துவம் இல்லை. ஆனால், முன்பாதியில் வரும் சில காட்சிகளில் அவர் ஸ்கோர் செய்திருக்கிறார்.
அதற்குப் பதிலாக, நாயகனின் ‘ஹாலுசினேஷனில்’ தென்படும் அவரது தாயாக வரும் சங்கீதா ‘சிக்சர்’ அடித்திருக்கிறார். கம்பீரமானதாக அப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் ரசிகர்களை எளிதில் ஈர்க்கும்.
பெரும்பாலான காட்சிகளில் ஒரே புடவையில் தோற்றமளித்துள்ளார் சங்கீதா. பிளாஷ்பேக் காட்சி அதற்கான நியாயத்தைச் சொல்கிறது.
ஆனால், பின்பாதியில் சில காட்சிகளில் வேறு புடவையில் அவர் காட்சி தந்திருப்பது இயக்குனர் குழுவின் கவனக் குறைபாடா? தெரியவில்லை.
சித்திக், சைஜு குரூப், தியான் சீனிவாசன், சிவதா, இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், அஜீஸ் நெடுமங்காடு, நந்து, முத்துமணி, வினீத் தட்டில் டேவிட் உட்படப் பலர் இந்தப் படத்தில் உண்டு.
அவரவர்க்கான முக்கியத்துவத்தோடு இரண்டொரு காட்சிகள் படத்தில் இருக்கின்றன. மற்றபடி எவருக்கும் பெரிதாக முக்கியத்துவம் இல்லை.
உண்மையைச் சொன்னால், ‘ஆனந்த் ஸ்ரீபாலா’ தரும் காட்சியனுபவம் சராசரிக்கும் மேலானது.
ஆனால், ‘இன்னும் செறிவாக இதன் உள்ளடக்கத்தை அமைத்து ஈர்க்கச் செய்திருக்கலாம்’ என்று ஆதங்கப்படும்படியானது.
ஸ்ரீபாலா யார் என்று பார்வையாளர்களை உணரச் செய்வது, தாயின் பெயர் கொண்டதாலேயே ஒரு பெண்ணை நாயகன் ஆனந்த் காதலிப்பதாகச் சொல்லப்படுவது, கண் முன்னே தாயின் உருவம் எரியும் தனது மனக்கோளாறை எண்ணி அவர் வருத்தமுறுவது, அதன் பின் வருகிற இடைவேளை சவால் காட்சி என்று இப்படத்தில் சுண்டியிழுக்கிற காட்சிகள் இருக்கின்றன. ஆனால், அவை போதவில்லை என்பதுதான் இதன் பலவீனம்.
அதனைப் பொருட்படுத்தத் தயாராக இல்லாத பட்சத்தில், ஒரு நேர்த்தியான ‘இன்ஸ்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ பார்த்த அனுபவத்தை இப்படம் நிச்சயம் தரும்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்