அமெரிக்க பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று மஸ்கோகி. இந்த மஸ்கோகி இனத்துத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைத் தொட்டில் போன்ற ஒரு படுக்கைக் கூடையில் இட்டு பிர்ச் மரங்களின் உயர்ந்த கிளைகளில் அதைத் தொங்க விட்டுவிடுவார்கள்.
பிறகு அவர்கள் சமைப்பது, துவைப்பது போன்ற மற்ற பணிகளில் இறங்கிவிடுவார்கள். உயரமான மரக்கிளையில் தூய்மையான தென்றல் காற்றை உள்ளிழுத்தபடி குழந்தை தூங்கும்.
உயரத்தில் இருப்பதால் தரையில் ஊரும் பூச்சிகள், காட்டு விலங்குகளின் தொல்லை இருக்காது. இலைபடர்ந்த கிளையில் தொங்குவதால் சூரிய ஒளி சுள்ளென படாது.
குழந்தை விழித்திருந்தால் காற்றடித்து கிளை ஆடும்போதெல்லாம் அதை ரசிக்கும். பறவைகளின் இனிய பாடல்களைக் கேட்கும்.
கடந்து செல்லும் பல நிற வண்டுகளைக் கவனிக்கும். பறந்து செல்லும் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து சிரிக்கும். மொத்தத்தில் இயற்கையோடு இயைந்து அந்த குழந்தை வாழும்.
இப்படி உயர்ந்த கிளையில் ஊஞ்சலாடும் குழந்தையை நோக்கி கண்களில் கண்ணீர் மல்க மஸ்கோகி இன தாய்மார்கள் தாலாட்டுப் பாடுவார்கள்.
‘கிளை ஒருநாள் முறியும். தொட்டிலும், குழந்தையும் தட்டென கீழே விழும்’ என்பது அந்த தாலாட்டில் உள்ள வரிகள்.
குழந்தை வளர வளர ஒருநாள் கனமாகி அதன் பாரம் தாங்காமல் கிளை ஒடியும். ஆகவே தொட்டிலும் குழந்தை தரையில் விழுவது குழந்தை வளர்ந்து விட்டது என்பதற்கான அறிகுறி.
‘இனியும் நீ குழந்தை இல்லை. வளர்ந்துவிட்டாய். தூசியைத் தட்டிக்கொண்டு எழுந்திரு. இனி தாயின் அரவணைப்பு உனக்குத் தேவையில்லை’ என்று அந்த தாலாட்டுப் பாடல் நீளும்.
தமிழில், தொட்டிலுக்கு தூளி, ஏணை என்ற பெயர்கள் உள்ளன. ஏண் என்றால் உயரம். இந்த ஏணில் இருந்து வந்ததுதானாம் ஏணை, ஏணி எல்லாம்.
‘பூமரத்து நிழலுமுண்டு, பொன்னிநதி காற்றுமுண்டு, காவலுக்கு அன்னை உண்டு, ஆராரோ, ஆராரோ, நாம் கடவுளுக்கு நன்றி சொல்வோம், ஆராரோ’ என்று தமிழில் ஒரு திரைப்பட தாலாட்டுப் பாடல் கூட உள்ளது. (படம்: குழந்தை உள்ளம். 1969)
இப்படி மரக்கிளையில் தூளி கட்டி தொங்கி ஊஞ்சலாடியபடி இயற்கை அழகை துய்த்தப்படி தூங்கும் வாய்ப்பு நம்மில் எத்தனைப் பேருக்குக் கிடைத்திருக்கும்? அப்படிக் கிடைத்தவர்கள் நல்வாய்ப்பாளர்கள், கொடுத்து வைத்தவர்கள் இல்லையா?
– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.