கங்குவா – ’பான் இந்தியா’ எனும் அவஸ்தை!

ஒரு திரைப்படம் வெளியான மிகச்சில நிமிடங்களில் ‘மீம்ஸ் ரிவ்யூ’ வெளிவரும் காலமிது. அதுவும் ஒரு நட்சத்திர நடிகரின் படம் வெளியாகிறது என்றால், முதல் காட்சி முடிந்த மிகச்சில நிமிடங்களில் விமர்சனமும் சுடச்சுடத் தயாராகிவிடும்.

‘இது நல்லாயிருக்கு’, ‘கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க..’, ‘அவ்வ்..’ என்று விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிற வசனங்களும் கூட, அதனூடே கலந்து நிற்கும்.

மிகச்சில நேரங்களில், அதுபோன்ற கமெண்ட்கள் படம் பார்க்கும்போதே மனதுக்குள் வந்து சம்மணம் இட்டுக்கொள்ளும்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் நிறைந்துள்ள கடின உழைப்பைப் புறந்தள்ளும் அளவுக்கு அந்தச் சூழல் அமைந்திருப்பதே இதன் முக்கியப் பலவீனம்.

நூலளவு கதை!

மலையேறும் பயணத்தில் வடத்தைச் சுமந்து செல்வது இயல்பு. ‘கங்குவா’ படத்திலோ கதை என்ற வஸ்து நூலளவு தான் இருக்கிறது. கால வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு இடையேயான பிணைப்பாகவும் அது அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவாவில் காவல் துறைக்கு உதவும் விதமாக ‘பவுண்டி ஹண்டர்’ ஆகச் செயல்படுபவர் பிரான்சிஸ் (சூர்யா).

அவருக்கு ஒரு நண்பன் (யோகி பாபு). போலீஸ் அதிகாரி (கே.எஸ்.ரவிக்குமார்) சொல்லும் தகவல்களைக் கொண்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளியைப் பிடிப்பது இவர்களது வழக்கம்.

எல்லா வேலைகளும் முடிந்தபிறகு, பிரான்சிஸ் அழைத்து வரும் நபரை லவட்டிச் செல்வது ஏஞ்சலினாவின் (திஷா பதானி) வழக்கம். அவருக்கும் ஒரு பெஸ்டி (ரெடின் கிங்ஸ்லி) உண்டு.

பிரான்சிஸ் – ஏஞ்சலினா இருவரும் ஒருகாலத்தில் காதலர்கள் என்பதுதான், இப்போது இருவரும் எதிரும்புதிருமாக இருப்பதற்குக் காரணம்.

ஒருநாள், பிரான்சிஸும் அவரது நண்பரும் ஒரு குற்றவாளியைப் பிடிக்கச் செல்கின்றனர். அங்கு, அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அந்த நபர் கொல்லப்படுகிறார். அதனை அங்கிருக்கும் ஒரு சிறுவன் பார்த்துவிடுகிறான்.

அந்தச் சிறுவனைப் பார்த்ததுமே, பல நூறு ஆண்டுகளாகப் பழகியது போன்ற உணர்வு பிரான்சிஸுக்கு ஏற்படுகிறது. அதனை முழுமையாக உணர்வதற்குள், ஒரு வெளிநாட்டுக் கும்பல் அந்தச் சிறுவனைக் கடத்திச் செல்கிறது.

அவர்களது பிடியில் இருந்து பிரான்சிஸ் அந்தச் சிறுவனை மீட்டாரா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நெடுந்தீவு பகுதியில் வாழ்ந்த கங்குவா (சூர்யா) பற்றிய கதை திரையில் விரிகிறது.

ரோமானியப் படை ஒன்று இந்தியாவை நோக்கி வருகிறது. இங்கிருக்கும் சிறு சாம்ராஜ்யங்களை வெற்றி கொள்ளும் வகையில், ஓரிடத்தில் போர் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுகிறது.

அதற்காக, நெடுந்தீவுகளில் ஒன்றான பெருமாச்சிக்குள் தந்திரமாக நுழைய கொடுவனைப் (நட்டி) பயன்படுத்துகிறது. மியாசன் (போஸ் வெங்கட்) அதற்குத் துணை நிற்கிறார்.

கப்பல் கட்டும் பணிக்கு ஆள் தேவை என்று பெருமாச்சியில் இருக்கும் ஆயிரம் வீரர்களை அழைத்துச் சென்று கொல்வதுதான் கொடுவனின் திட்டம். ஆனால், முதல் நூறு பேரைக் கொல்லும்போதே அந்த உண்மை உடைபட்டு விடுகிறது.

அதற்குப் பழி வாங்கும்விதமாக, கொடுவனைக் கொல்கிறார் பெருமாச்சி அரசரின் மகன் கங்குவா. அதனால், கொடுவனின் மகன் அவரைக் கொலை செய்யத் துடிக்கிறான்.

அந்த நேரத்தில், ரோமானியப் படை இன்னொரு தீவின் தலைவனான உதிரனைச் (பாபி தியோல்) சந்தித்து உதவி கேட்கிறது. உதிரனின் ஆட்கள் பெருமாச்சி மீது படையெடுக்கத் துணிகின்றனர்.

அந்த நேரத்தில் தான், கொடுவனின் மகன் கங்குவாவைக் கொல்ல முயற்சிக்கிறான். ஆனால், அச்சிறுவனின் தாய்க்குச் செய்துகொடுத்த சத்தியத்திற்காக, அவனது உயிரைக் காக்க முடிவெடுக்கிறார் கங்குவா.

அந்தச் சிறுவன் தான், சமகாலத்தில் பிரான்சிஸ் காக்கத் துடிக்கும் சிறுவனாக விளங்குகிறார்.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் மறுபிறவி எடுத்திருக்கிறார்களா? இரண்டு பிறவியிலும் நாயகனால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்ததா? இந்தக் கேள்விக்கான பதிலாக அமைகிறது ‘கங்குவா’ முடிவு.

அதோடு நின்றுவிடாமல், அடுத்த பாகமும் உண்டு என்பதற்கான தொடக்கத்தைத் தருகிறது.

ஒரு கமர்ஷியல் படத்தை எடுக்க நூலளவு கதை இருந்தாலோ போதும் என்பது உண்மைதான்.

ஆனால், அதனைப் பற்றிக்கொண்டு செல்லும் ரசிகர்களின் பயணம் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும்.

ஆங்காங்கே சில முடிச்சுகளை இட்டு, சில நிமிடங்கள் கழித்து அவற்றை அவிழ்க்கும் வித்தைகளைத் திரைக்கதையில் நிறைக்க வேண்டும்.

அதற்குத் தோதாக, நாயகனுக்கு இணையாகப் பல பாத்திரங்கள் தனித்தன்மையுடன் திரையில் மிளிர்ந்தாக வேண்டும். ‘கங்குவா’ அந்த விஷயத்தில் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறது.

படம் முழுக்க ’சூர்யா’!

ஒரு படத்தின் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட காட்சிகளில் நாயகன் இடம்பெறுவதென்பது தெலுங்கு திரையுலகில் பின்பற்றப்படும் பாணி. அங்கும் கூட, ‘இது வேலைக்கு ஆகாது’ என்று வேறு திசைக்கு நகரும் முயற்சிகள் நடந்தேறி வருகின்றன.

நிலைமை இப்படியிருக்க, ‘கங்குவா’வில் முக்கால்வாசி காட்சிகளுக்கும் மேலாகச் சூர்யாவே நிறைந்திருக்கிறார்.

அது போததென்று, விஎஃப்எக்ஸ் பளிச்சென்று தெரியும் வகையில் காதில் பூ சுற்றும் ரகத்தில் அமைந்த சண்டைக்காட்சிகள் வேறு.

சமகாலத்தில் நிகழும் கதையை வலுவாக அமைத்து, அதன் முடிவு என்னவானது என்ற கேள்வியுடன் ‘பிளாஷ்பேக்’கை சொல்லும் உத்தியில் தவறில்லை. அதன் வழியே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையைச் சொல்லலாம்.

அதற்காக, பழங்குடியின மக்களை மாந்தர்களாகக் காட்டி கதை அமைத்திருப்பதும் கூடத் தவறில்லை.

ஆனால், அருகருகே இருக்கும் ஐந்து தீவுகளும் வெவ்வேறுபட்ட நிலங்களாகக் காட்டியதும், அவர்களை ‘அபோகலிப்டோ’ காலத்தவர்களாகக் காட்டியதும் தான் இயக்குனர் செய்திருக்கும் மிகப்பெரிய தவறு.

இந்தக் கதையில் வில்லன்களாகச் சில பாத்திரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை விட, ரோமானியப் படையைச் சேர்ந்த தலைவனைத்தான் முதன்மைப்படுத்தியிருக்க வேண்டும். அந்த விஷயத்தை ‘கங்குவா’ குழு கணக்கில் கொள்ளவே இல்லை. அதுவே இப்படத்தின் பெரும் பலவீனம்.

போலவே, கங்குவாவைத் தவிர அந்த இனக்குழுவில் வேறு வீரர்களே இல்லை என்பது போலவும் காட்சிகள் இருக்கின்றன. அந்த சித்தரிப்பை மட்டுப்படுத்தியிருந்தால், நல்லதொரு கற்பனைக் கதையைக் கண்ட திருப்தியாவது கிடைத்திருக்கும். அதுவும் இல்லை.

இப்படியொரு கதையில் பெண் பாத்திரங்களை வலுவாகக் கையாண்டிருக்க வேண்டும். அது மருந்துக்குக் கூட இடம்பெறவில்லை.

இப்படிப் பல ‘இல்லை’கள் இருப்பதால், பெருமாச்சி மக்களின் போர்க்குணத்தைக் காட்டும் காட்சிகளும், அவற்றின் பின்னிருக்கும் கடும் உழைப்பும் நம் மனதைத் தொடாமல் நின்றுவிடுகின்றன.

இந்தப் படத்தில் சூர்யா உடன் திஷா பதானி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முதல் இருபது நிமிடக் காட்சிகளில் தோன்றியிருக்கின்றனர்.

இவர்களோடு கோவை சரளாவும் ரவி ராகவேந்திராவும் வேறு உண்டு. கூடவே, ஒரே ஒரு ஷாட்டில் மன்சூர் அலிகானும் வந்து போயிருக்கிறார்.

அந்தக் காட்சிகள் அனைத்தையும் ரத்தினச் சுருக்கமாகத் திரையில் சொல்ல ‘அனிமேஷன்’ உத்தியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

நெடுந்தீவுக்கு ரோமானியர்கள் வந்த கதையைச் சொல்கிற காட்சிகளில் நட்டி, போஸ் வெங்கட், பாபி தியோல், ’கேஜிஎஃப்’ பி.எஸ்.அவினாஷ், கருணாஸ், கலைராணி ஆகியோர் நமக்கு அடையாளம் தெரிகின்றனர்.

இவர்கள் தவிர்த்து ஹரிஷ் உத்தமன், வட்சன் சக்கரவர்த்தி உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். அவர்களின் அடையாளத்தை, பழங்குடியின பாணியிலமைந்த ஒப்பனை விழுங்கியிருக்கிறது.

வனப்பகுதிகளில் பெரும்பாலான காட்சிகளைப் படம் பிடித்திருக்கும் வெற்றியின் ஒளிப்பதிவு இப்படத்தைப் பிரமிப்பாக நோக்க வைத்திருக்கிறது.

அதேநேரத்தில், எந்தவொரு ஷாட்டும் ‘3டி’யை மனதில் கொண்டு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த விஷயத்தில் கவனம் செலுத்தாதது ஏன் எனத் தெரியவில்லை.

நிஷாத் யூசுஃப்பின் படத்தொகுப்பில், முடிந்தவரை பிளாஷ்பேக் காட்சிகள் சீராக நகர்கின்றன. அவற்றைச் சமகாலத்தோடு ‘இண்டர்கட்’டில் இணைக்கும் உத்தியும் கூட அபத்தமாகத் தெரியவில்லை.

அதேநேரத்தில், சண்டைக்காட்சிகளில் யார் யாரை கொலைவெறியோடு தாக்குகிறார் என்ற ‘டீட்டெய்லிங்’ நமக்குப் பிடிபடவே இல்லை. அதனைச் சரிப்படுத்தியிருக்கலாம்.

நெடுந்தீவுகளில் அமைந்த தீவுக்கூட்டங்களை வடிவமைத்தததிலும் சரி, அங்கிருக்கும் மக்களின் வாழ்வுமுறையைக் காட்டியதிலும் சரி, மறைந்த கலை இயக்குனர் மிலனின் கற்பனைத் திறம் பளிச்சிடுகிறது.

திரைக்கதை நிகழும் காலகட்டத்தை மட்டும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் காட்டியிருந்தால், இப்போதிருக்கும் சர்ச்சைகள் காணாமல் போயிருக்கும்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் ’யோலோ’, ‘மன்னிப்பு’, ‘தலைவனே’ பாடல்கள் சட்டென்று நம் மனதைத் தொடுகின்றன.

பின்னணி இசையும் கூடப் படத்தின் காட்சிகளில் இல்லாத அழுத்தத்தை உருவாக்க முனைவதாகவே இருக்கிறது.

இந்தப் படத்தின் கதையை ஆதியோடு இணைந்து அமைத்திருக்கிறார் இயக்குனர் சிவா. மதன் கார்கி வசனங்களை எழுதியிருக்கிறார்.

‘ஃபேஸ்மெண்டு வீக்கு’ என்ற வடிவேலு வசனத்தைப் போல ‘கங்குவா’ கதைக்கரு அமைந்துள்ளதால், இதர அம்சங்கள் எல்லாம் ஆறாம் விரலாகவே தெரிகின்றன.

தேவையா ‘பான் இந்தியா’?!

ஒரு வெற்றிப்படத்தைப் பெருமைப்படுத்தும்விதமாக, ‘இதன் கதையை ஒரு பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதிவிடலாம்’ என்று பலமுறை திரையுலகில் சொல்லப்பட்டதுண்டு.

அப்படி எழுதும் அளவுக்கு, அந்த ஒற்றைவரி இருக்க வேண்டும். ‘கங்குவா’வில் அப்படிச் சொல்லும் அளவுக்கு ஒற்றை வரிக் கதை வலுவானதாக இல்லை.

அதனைச் செய்யாமல் விட்டதால், ‘கங்குவா’ புரோமோஷனுக்காக அதில் பணியாற்றியவர்கள் பேசிய பேச்சுகள் கேள்விக்குறிகளாக மாறியிருக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் இப்படம் ஓடும் தியேட்டர்களில் அவை நிச்சயம் எதிரொலிக்கும்.

ஒருவேளை குறைந்தபட்ச நேர்த்தியோடு, ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிற உள்ளடக்கத்தோடு ‘கங்குவா’ இருந்திருந்தால், இதில் இடம்பெற்றுள்ள கோரமான வன்முறைச் சித்தரிப்பைக் கூட ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அது நிகழாமல் போனதால், இன்னொரு பாதி மட்டுமே நமக்குக் காணக் கிடைத்திருக்கிறது.

ஒருவேளை இந்த ‘பான் இந்தியா’ சாபம் மட்டும் ‘கங்குவா’வைத் தழுவாமல் இருந்திருந்தால், மேற்சொன்ன குறைகளில் பல நிகழாமல் போயிருக்கலாம்.

தமிழ் அல்லது தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற குறைந்தபட்சமான கமர்ஷியல் படமொன்றைக் காணும் வாய்ப்பு கிட்டியிருக்கலாம்.

கன்னடப் படமான ‘காந்தாரா’ ‘பான் இந்தியா’ அந்தஸ்துக்காகத் தயாரிக்கப்படவில்லை.

படம் வெளியானபிறகு, அந்த அந்தஸ்து தானாக வந்தடைந்தது.

அப்படியொரு இலக்கோடு தயாரிக்கப்படுகிற ‘காந்தாரா தொடக்கம்: அத்தியாயம் 1’, ஒருவேளை இப்படியொரு சாபக்கேட்டுக்கு ஆட்படலாம் அல்லது அதிலிருந்து விடுபடுகிற அளவுக்குக் குறைந்தபட்ச உத்தரவாதத்திற்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கலாம். அது அப்படக்குழுவின் சாமர்த்தியம் சம்பந்தப்பட்டது.

இந்த அளவுகோல், அந்த இலக்கோடு உருவாக்கப்படுகிற அனைத்து படங்களுக்கும் பொருந்தும்.

பான் இந்தியா படம் என்ற நிலையை ஒரு படம் எய்துவதென்பதைத் தீர்மானிப்பது ரசிகர்களே. சர்வநிச்சயமாக சம்பந்தப்பட்ட படக்குழுவால் அதனை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது.

அதனை மனதார ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ‘கங்குவா’வில் இருந்து தமிழ் திரையுலகம் பாடம் கற்றுக்கொள்ள முடியும்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment