3,259 நாள்கள் சிறை; தேள், குளவியின் அச்சுறுத்தலில் நேரு செய்த செயல்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர்.
பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிலிருந்தெல்லாம் நிறைய சம்பளம் தருவதாக அழைப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் மறுத்தார். தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை முறையாகச் செய்திருந்தால்கூட லட்ச லட்சமாக அவர் சம்பாதித்திருக்கலாம்.
அவரோ, `பொதுத் தொண்டு செய்வதை விட்டுவிட்டு, சொற்பப் பணம் சம்பாதிப்பதற்காக வாழ்க்கை முழுவதையும் செலவிடுவது வீண்’ என்று அழுத்தமாக நம்பினார். காந்தியத்தைக் கைக்கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தார். இவைகூடப் பெரிதல்ல… அவர் சிறையிலிருந்த நாள்கள் கொடுமையானவை. 
அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்தை எதிர்ப்பது சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு போராட்டத்துக்கும் சிறைத் தண்டனை உண்டு.
காந்தியின் ‘செய் அல்லது செத்து மடி’ வாக்கை அப்படியே அச்சுப் பிசகாமல் கடைப்பிடித்தவர் நேரு.
‘An Autobiography’ என்கிற அவருடைய நூலில் சிறை வாழ்க்கையை எதிர்கொண்ட அனுபவத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அதை `மாமனிதர் நேரு’ என்கிற நூலில் விவரிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எழுத்தாளருமான ஆ.கோபண்ணா. 
நேருவின் பதிவு இப்படி விரிகிறது… “டேராடூன் சிறையில் 14 மாதங்கள், 15 நாள்களைக் கழித்தேன். சிறை வாழ்க்கையோடு ஒன்றிவிட்டதாக அப்போது நான் நினைத்துக்கொண்டேன். அந்த அறையில் நான் மட்டும் தனியாக இல்லை. குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. மேற்கூரையில் ஏராளமான பல்லிகள் இருந்தன.
மாலையானதும் அவை இரைதேட ஆரம்பிக்கும். பல்லிகள் எழுப்பும் ஒலியிலேயே அவற்றின் எண்ணமும் உணர்ச்சியும் வெளிப்படும்.
காற்றோட்டம் இல்லாத அந்த அறை அவற்றுக்குப் பிடித்துப்போயிருக்கும் என நினைத்துக்கொள்வேன். அந்தச் சிறிய இடத்திலேயே அவை வாழப் பழகியிருந்தன. 
எனக்கும் மூட்டைப்பூச்சிகள், கொசுக்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துகொண்டேயிருக்கும். என் அறையிலிருந்த நூற்றுக்கணக்கான குளவிகளையும் வண்டுகளையும் நான் பொறுத்துக்கொண்டேன்.
`குளவிகள் கொட்டிவிடுமோ?’ என்ற பயமும் இருந்தது. கோபத்தில் அவற்றை விரட்ட முயல்வேன். ஆனால், தன்னுடைய இருப்பிடத்திலிருந்து வெளியேறாமல், என்னுடன் அது போராடும். அங்கேயே முட்டையிடும்.
அதன் பிறகு, `நம்மை அவை தொந்தரவு செய்யாதவரை, நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்’ என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.
இந்தக் குளவிகள், வண்டுகளோடு பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்திருக்கிறேன். அவை, என்னை ஒருபோதும் தாக்கியதில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் நட்பாய் இருந்துகொண்டோம். 
வௌவால்களை மட்டும் எனக்குப் பிடிக்காது. எனினும் நான் சகித்துக்கொள்வேன். மாலை நேரங்களில் சத்தமே இல்லாமல் அவை பறக்கும். அவற்றுக்கு இரவில் மட்டுமே கண் தெரியும்.
என் முகத்தில் மோதுவதுபோல அவை பறக்கும். அவை என்னைத் தாக்கிவிடுமோ என்று நான் அச்சப்பட்டிருக்கிறேன். தலைக்கு மேல் பறக்கும் வௌவால்களைப் பார்க்கும்போது நரிகள் பறப்பதுபோல இருக்கும். 
எறும்புகளையும் மற்ற பூச்சிகளையும் நீண்ட நேரம் கவனித்துக்கொண்டே இருப்பேன். மாலை நேரத்தில் வரும் பல்லிகளுக்கு அவை இரையாகிவிடும். பொதுவாக பல்லிகள், குளவிகளை நெருங்காது.
ஆனால், சில சமயம், குளவிகளின் முன்னே செல்லாமல், அதன் பின்னே சென்று தாக்கிக் கொல்வதைப் பார்த்திருக்கிறேன். குளவிகளின் கொடுக்குப் பகுதியைக் கவ்விப் பிடிக்காமல் அவற்றின் பின்பகுதியைப் பிடிப்பது, அவை கொட்டிவிடும் என்று தெரிந்தா அல்லது யதார்த்தமாகவா என்பது எனக்குத் தெரியவில்லை. 
என் அறையில் தேளை அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக, இடியுடன் மழை பெய்யும்போது தேள்கள் அதிகமாக நடமாடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்தத் தேள்கள் என்னை ஒரு முறைகூடக் கொட்டியதில்லை.
என் படுக்கையின் மேல் ஊர்ந்து செல்லும்; புத்தகத்தின் மீது அமர்ந்திருக்கும். கறுப்புத் தேளைப் பிடித்து, நான் சிறிது நேரம் ஒரு பாட்டிலில் அடைத்துவைப்பேன். அதற்கு ஈக்களை இரையாகக் கொடுப்பேன்.
பிறகு சுவரில் விட்டதும் அது தப்பியோடிவிடும். தேளை மீண்டும் சந்திக்க எனக்கு விருப்பமில்லை. அதனால், என் அறையைச் சுத்தம் செய்து தேள்களை வேட்டையாடினேன். அதன் பிறகு, என் அறைப்பக்கம் தேள்கள் வருவதே இல்லை.’’ 
ஜவஹர்லால் நேரு சிறையில் அனுபவித்த சித்ரவதை நாள்களின் சிறு துளி இந்தப் பதிவு. சுதந்திரப் போராட்டத்தில் ஒன்பது முறை சிறைக்குச் சென்ற அவர் சிறையில் இருந்த மொத்த நாள்கள் 3,259 நாள்கள். 
இந்த நிகழ்வு மட்டுமல்ல… நேருவின் பிறப்பு முதல் அவர் மறைந்த தினம் வரை 700-மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன், 600 பக்கங்களில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் ஆ.கோபண்ணா.
நவ இந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக, `மாமனிதர் நேரு – அரிய புகைப்பட வரலாறு’ என்கிற கோபண்ணாவின் நூல் மிக முக்கியமான ஆவணம். 
சுதந்திரத்துக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றது ஒன்றுபட்டிருக்காத ஓர் இந்தியா; ஒன்றுமே இல்லாத இந்தியா.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றபோது அவர் முன் கொட்டிக்கிடந்தவை சவால்கள் மட்டுமே.
சுதந்திர இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்தது தொடங்கி, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை அதிகரித்தது, பல தொழில்களுக்குக் கதவு திறந்துவிட்டது, ஒரு கனவு இந்தியாவை நனவாக்கியது எனத் தொடர்ந்த அவர் பணிகள் அபாரமானவை. அதனால்தான் அவர் `நவீன இந்தியாவின் சிற்பி’ என அழைக்கப்படுகிறார்.
– நன்றி: ஆனந்த விகடன்  
Comments (0)
Add Comment