தமிழாசிரியரும் மறக்கமுடியாத பச்சை நிறப் பேனாவும்!

உமா மகேஸ்வரி, கல்வியாளர்

அய்.கே.எஸ் எனப்படும் அய்.கே.சீனிவாசன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி (இப்போது மேல்நிலைப் பள்ளி ஆகிவிட்டது) ஜலகண்டபுரம், சேலம் மாவட்டம்.

1990 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகக் கற்றுத் தந்த ஆசிரியர் இவர். இவரின் வகுப்பு எப்போதும் ‘கலகல’ வென்று இருக்கும். சிரித்த முகத்துடனே உள்ளே வருவார்.

எல்லோரையும் அதே சிரிப்பு மனநிலையில் வைத்து தமிழ் வகுப்பையே முடித்து விடுவார். அவர் கற்றுக் கொடுத்த திருக்குறள் சீர் பிரிப்பது அலகீட்டு வாய்பாடு இன்றுவரை எனக்கு மறக்கவில்லை. நிறைய அனுபவங்களைச் சொல்லி அவற்றுக்கிடையே பாடங்களை எங்கள் மனதில் இருத்திவிடுவார்.

அவரது வகுப்பில் ஒரு உதாரணம்…

“நான் சிறுவனாக இருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் சுற்றுவேன். ஒருமுறை எனது வீட்டிற்கு வந்து, கசி-கனி-கமா-கக்-ககு-கபோ-கக-கலா-கமா என்று சொல்லி அழைத்தான். வீட்டில் இருப்பவர்களுக்கு இது புரியாது.

எங்கள் சங்கேத மொழி அது. இதில் இருக்கும் க-அனைத்தையும் அழித்து சொற்களை சேர்த்தால் சினிமாக்கு போலாமா? என்று வரும்” என்றார்.

இதை வகுப்பில் அய்யா கூறி கரும்பலகையில் எழுதி விளக்கி சூழலை உற்சாகமாக்கி வைத்தார். அது முதல் பல நாட்கள் வகுப்பில் எந்த சொல்லைப் பேசினாலும் தோழிகள் இப்படி க – வை சேர்த்தேப் பேசுவோம். இன்றும் அந்த வகுப்பறை மனதில் பசுமையாக இருக்கிறது.

இன்றெல்லாம் பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்கள் இலக்கிய மன்றங்களை நடத்துவது ஒரு சடங்கு போலவே இருக்கிறது. ஆனால் வாரா வாரம் வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு மொத்த மாணவிகளும் வெளியே வந்து இலக்கிய மன்றம் நடக்கும்.

அதில் பேச்சு, பட்டிமன்றம், சிரிப்பு ஜோக்குகள், கவிதை, பல குரல் எழுப்பும் திறன் என எல்லாத்தையும் பார்க்கலாம்.

நான் 9, 10-ம் வகுப்பு படிக்கும்போது பெரும்பாலான வாரங்களில் வெள்ளிக் கிழமை நடக்கும் நிகழ்வுகளின் தரை மேடைகள் என்னை அரவணைக்க இவரே காரணம். ஆமாம் முன்னறிவிப்பு இன்றி பெயர் சொல்லி எழுப்பி விடுவார்.

அப்படி நான் ஒரு நாள் யோசிக்காமல் நான் சொன்ன ஜோக் –

ஆசிரியர்: ஐரோப்பா எங்கேடா இருக்கு?
மாணவர்: அது யாரோட அப்பாங்க டீச்சர்?

இதற்குப் பரிசாக அங்கேயே ஒரு பச்சை நிறப் பேனாவை வழங்கினார். பேச்சுப் போட்டிகளில் பேசும் போது தைரியமாகப் பேச வேண்டும் என்று கூறும் இவர் தான் நான் அறிந்த வகையில், “நம் முன்னால் உட்கார்ந்து இருப்பவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று மனதில் எண்ணிக்கொண்டு தைரியமாப் பேசணும்” என்பார்.

அது தவறான வழிகாட்டல் என்றாலும் சிறு குழந்தைகளை தைரியமாக மேடைகளில் ஏற்ற அவர் கைக்கொண்ட வழி என நினைக்கிறேன்.

இப்படி பல நினைவுகளை எனது தமிழ் அய்யா குறித்து மனதில் சுமந்து கொண்டு இத்தனை ஆண்டுகளாக இருந்த நான், கடந்த செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தின வாழ்த்துகள் கூற அவரது எண்ணைக் கண்டுபிடித்து பேசினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார், நானும் மகிழ்ந்தேன்.

அதன் தொடர்ச்சியாக அவரை நேரில் சந்தித்து ஒன்றரை மணி நேரம் உரையாடி மகிழ்ந்தேன். எனது கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி புத்தகத்தை அவரிடம் வழங்கிய போது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறையாத சொத்து இது.

ஒவ்வொருவரும் நூல் எழுத வேண்டும் என்றார். அதோடு கையில் வாங்கி உடனே கட்டுரை தலைப்புகளை வாசித்து என்னிடம் சிரித்துக் கொண்டே, எத்தகைய அருமையான கேள்வி என்கிறார்.

அவர் அந்த நாட்களில் எனது வகுப்பறைகளுக்கு வரும் போது பாடப்புத்தகத்தோடு வேறு சில நூல்களையும் எடுத்து வருவதை வழக்கமாகக் கொள்வார். அது இப்போது நினைவுக்கு வருகிறது.

அவரது வீட்டில் அவரை சந்தித்த போது சித்தூர் கிராமத்தில் 1996-ல் படித்த முன்னாள் மாணவர்கள் விழா எடுத்து நினைவுப் பரிசு வழங்கியதை சிறு குழந்தை போல வேகமாகச் சென்று எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தார்.

அதைப் பார்க்கும் போது மாணவர்கள் மீது எத்தனை அன்பு வைத்துள்ளார் என உணர முடிந்தது.

அதே அன்புடன் என்னை வாழ்த்தியதோடு தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒருவர் எனது மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன் மா என்றார். அவரது இணையர், மகள்கள் என அனைவரிடமும் என்னை அறிமுகம் செய்து மகிழ்ந்தார்.

சரியாக 34 ஆண்டுகள் கழிந்து அவரை நான் சந்தித்தது எனது வாழ்க்கையின் மறக்க முடியாத நாள். அன்பான உபசரிப்பு, திரும்ப என்னை அனுப்பவே மாட்டேன்.. இன்னும் சற்று நேரம் இரு, சாப்பிட்டுட்டு போ என அன்பு காட்டினார்.

எதிர்பாராத சூழலில் திட்டமிடல் இன்றி தான் நான் சந்தித்தேன். ஆகவே மீண்டும் வருகிறேன் அய்யா எனக்கூறி படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

  • உமா மகேஸ்வரி, கல்வியாளர்.

#கரும்பலகை #blackboard #class #வகுப்பு #மாணவர்கள் #students #தமிழ்_ஆசிரியர் #பேராசிரியர் #பேனா #அன்பு #பள்ளிக்கூடம் #வாழ்க்கை #school #teachers #tamil #professor #pen  #கல்விச்_சிக்கல்கள்_தீர்வை_நோக்கி_புத்தகம்

Comments (0)
Add Comment