தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர் சிவக்குமார் தலைமை தாங்கி முன்னிலை வகித்தனர். நடிகர் விக்ரம்பிரபு, இயக்குநர் பீம்சிங்கின் உருவப்படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உட்பட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.
விழாவில் பேசிய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “களத்தூர் கண்ணம்மா படத்தில் நான் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். எனக்கு பிடித்த இயக்குநர்களில் பீம்சிங்கும் ஒருவர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சரியாக பயன்படுத்தியவர். பல நூற்றாண்டு விழாக்களை கொண்டாடிய அவரது படங்களில் இருந்து அவர் கையாண்ட எடிட்டிங் முறைகளை புதிய இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சினிமாவில் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நஷ்டம் வராது” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிவகுமார், “பீம்சிங் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி அவரது குடும்பம். நான் எதிர்பார்க்கவில்லை பீம்சிங்குக்கு இவ்வுளவு சீடர்கள் இருப்பார்கள் என்று.
பாசமலர் படம் பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் பாதபூஜை படத்தில் பயணித்தேன். பொறுமையான மனிதர். இவரைப் போன்ற சிரஞ்சீவியான ஆட்கள் நாம் போனாலும் இன்னும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்” என்று கூறினார்.
#இயக்குநர்_ஏ_பீம்சிங் #s_p_muthuraman #சிவக்குமார் #எஸ்_பி_முத்துராமன் #director_bhimsingh #sivakumar #bhimsingh_100