டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல!

பன்முக கலைஞரான நடிகர் டெல்லி கணேஷ், சென்னை ரமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 80.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வல்லநாடு கிராமம்தான் டெல்லி கணேஷின் சொந்த ஊர். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து மாணவராக விளங்கிய டெல்லி கணேஷ், படித்து முடித்ததும், 1964-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் வேலைக்குச் சேர்ந்தார். டிவி உள்ளிட்ட பொழுது போக்கு சாதனங்கள் அறிமுகமாகாத காலகட்டம், அது.

போரில் அடிபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவர்களை மகிழ்விக்க, முப்படைகளில் பணியாற்றுவோர், நாடகங்களை நடத்தினர். அதில் ஒரு நடிகராக நடித்தது, டெல்லி கணேஷின் கலை உலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது.

பின்னர் சென்னைக்கு வந்த டெல்லி கணேஷுக்கு நடிகர் காத்தாடி ராமமூர்த்தியுடன் நட்பு ஏற்பட்டது. அவரின் நாடகக் குழுவில் இணைந்தார்.

சென்னையில் டெல்லி கணேஷ், நடித்த முதல் நாடகம் ‘டவுரி கல்யாணம்’.

இதில் அவர் பிரமாதமாக நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, நாடகங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் இவரை தேடி வந்தன.

இதனால், 1974 – ஆம் ஆண்டு, விமானப் படை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நாடக நடிகராக மாறிப்போனார். வெறும் கணேஷ், டெல்லி கணேஷ் ஆனார்.

டெல்லி கணேஷின் நாடகங்களை ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர் ஒருமுறை பார்த்துள்ளார். டெல்லி கணேஷ் , வசனம் பேசும் பாணியும், உடல்மொழியும் பிடித்துப்போய், அவரை தனது ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார், பாலச்சந்தர்.

கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், அஜித், விஜய் என அனைத்து ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். அவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம்.

மறக்க முடியாத படங்கள்

கமல்ஹாசனின் படங்களில் டெல்லி கணேஷுக்கு ஏதேனும் ஒரு முக்கியமான கேரக்டர் நிச்சயம் உண்டு. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் டெல்லி கணேஷை வில்லனாக்கிய கமல், ‘அவ்வை சண்முகி’யிலும் முக்கிய பாத்திரம் அளித்திருந்தார்.

சின்ன பட்ஜெட்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய திரைப்படம் ‘ஆஹா’.

இந்த படத்தில் சமையல் கலைஞர் கேரக்டரில் டெல்லி கணேஷ், அதகளம் செய்திருப்பார். ‘நாயகன்’ படத்தில், வேலுநாயக்கருடன் ஐயராகவே வாழ்ந்து காட்டினார்.

டெல்லி கணேஷின், திரை உலக வாழ்க்கையில் முக்கியமான படம் பசி. 1979-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சென்னை பாஷை பேசி, அட்டகாசமான நடிப்பை வழங்கி இருப்பார். இந்தப் படத்துக்காக அவருக்கு மாநில அரசு விருது கிடைத்தது.

தூக்கத்தில் பிரிந்த உயிர்

டெல்லி கணேஷின் மனைவி பெயர் தங்கம். மகன் மகாதேவன், மகள்கள் பிச்சு, சாரதா. மகாதேவன், ‛என்னுள் ஆயிரம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

டெல்லி கணேஷ் மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாதேவன், ‘’அப்பாவுக்கு 80 வயதாகிறது –அண்மையில் தான் சதாபிஷேக விழா நடத்தினோம் – நன்றாகத்தான் இருந்தார் – வயது மூப்பு காரணமாக, உடல்நல பிரச்சினை இருந்தது.

சனிக்கிழமை நன்றாக பேசிக் கொண்டு தான் இருந்தார் – இரவில் மாத்திரை கொடுப்பதற்காக அப்பாவை எழுப்பச் சென்றோம் – அப்போது அசைவின்றி இருந்தார் – டாக்டர் வந்து பார்த்துவிட்டு, அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறினார்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ்தள பக்கத்தில், “டெல்லி கணேஷ் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது- நடிப்பில் ஆர்வமும், திறமையும் மிக்கவர் அவர்“ எனப் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், “நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை ஆழமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர் – அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமாவரம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள டெல்லி கணேஷ் உடலுக்கு, ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment