உண்மையான அன்பைப் பெறுவது கடினமா?

நான் எனது கல்லூரிப் பாட நேரம் முடிந்து, வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோது பெற்ற அழகிய அனுபவம் இது.

கண்ணுக்கு மருந்து வாங்க வேண்டும் என்று எண்ணி மருந்துக் கடைக்கு உள்ளே சென்றேன்.

அங்கு இருவர் நின்று கொண்டிருந்தார்கள்.

என்னிடம், “என்னமா வேண்டும்?” என்று கேட்டபோது, “கண்ணுக்கு மருந்து வேண்டும்” என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தேன்.

அந்தத் தொழிலாளி என் கழுத்தில் இருந்த என் கல்லூரி அடையாள அட்டைப் பட்டியில் எழுதி இருந்த பெயரை வாசித்துப் பார்த்து மெதுவாகச் சிரித்தார். நான் அமைதியாக இருந்தேன்.

பின்னர் அருகில் இருக்கும் நபரைப் பார்த்து, “பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள், அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை, நிறைவாக நேரம் கழிந்துவிடும்.

எந்த ஒரு கவலையும் இல்லை, அவர்களுக்கு என்ன கஷ்டம்? இருக்கப்போகிறது” என்று நபரைப் பார்த்து சிறு புன்னகையோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் மௌனமாக இருந்தேன். ஆனால், மனதில் பல பதில்கள் ஒடிக்கொண்டிருந்தன.

அப்போதுதான் அருகில் இருந்த அந்த நபரின் உண்மையான மனநிலை தெரியவந்தது.

உடனே அவர் முகத்தில் ஒரு சிறு கோபம், இனம் புரியாத ஏக்கம், கவலை எல்லாம் தோன்றி மறைந்தது.

இப்போது உள்ள பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் போன், கம்ப்யூட்டர், டிவி, ஒரு மெத்தை, பசித்தால் சாப்பிட நொறுக்குத்தீனி அருகில் வைத்துக்கொண்டால் போதும். அவர்களுக்கு வேறு ஏதும் தேவையில்லை.

அவர்களுக்கு அம்மா, அப்பா, உறவுகள் எல்லாம் தேவையில்லை. அன்பு, பாசம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு நவீன நாகரீகம் வளர்ந்துவிட்டது.

அன்பு, பாசம் எல்லாம் நாங்கள் வாழ்ந்த காலத்தோடு மறைந்துவிட்டது. இப்போது இருக்கும் சில பிள்ளைகளிடம் ஒற்றுமை என்பதே இருப்பதில்லை. அவர்களுடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகள் சுயநலமாகவே இருக்கிறது.

அவர்கள் பெற்றோரை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதேயில்லை. பிள்ளைகளின் அன்பு, பாசத்திற்காக நாம் எப்போதும் ஏங்கக்கூடிய நிலைமையில்தான் இருக்க வேண்டி இருக்கிறது” என்று சொல்லி கவலைப்பட்டார். அவர் கண்களில் கண்ணீர் ஒன்று மட்டும் தான் வரவில்லை.

பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து இருந்து நல்ல உணவுகளைச் சமைத்து மகிழ்ச்சியாக சாப்பிட்டு, வெளியே எல்லோரும் சேர்ந்து சென்று சந்தோசமாக இருந்து விட்டு, வந்த காலம் எல்லாம் மாறிவிட்டது.

“பிள்ளைகள் அவர்களின் நண்பர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களைப் பெற்ற தாய், தந்தைக்குக் கொடுப்பதில்லை” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, இன்றும் சமூகத்தில் ஒற்றுமையாய், அன்பாக, கனிவாக, பணிவாக தாய், தந்தையின் சொல் கேட்டு வளரக்கூடிய பிள்ளைகளும் இந்தச் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

எது எவ்வாறு இருப்பினும், வாழ்க்கையில் எப்போதும் இரண்டுப் பக்கங்கள் உள்ளன. நன்மை, தீமை என்பது எல்லா மனித வாழ்விலும் கலந்து காணப்படுகிறது. அதனை நாம் தான் புரிந்து செயல்பட வேண்டும்.

நவீன வாழ்க்கை முறைமை என்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமான வாழ்வியலாகவே கணப்படுகிறது.  எல்லாம் மனித வாழ்வின் அனுபவங்களே.

உலகம் விண்ணைத்தொடும் அளவுக்கு நவீன மயமாக்கப்பட்டாலும் ஏனோ மனித மனமானது அன்பைத் தான் தேடித் திரிகிறது.

இந்த உலகில் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் ஒரு மனிதனிடமிருந்து உண்மையான அன்பைப் பெறுவது என்பது கடினமான காரியம்.

என்ன செய்யலாம்?

தீவிரமாக அலைந்து வாழும் நவீன மானிட சமுதாயமே அன்பிற்காக ஏங்கும் உன் உறவிற்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கிடு!

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!”

– தனுஷா

Comments (0)
Add Comment