இந்திய அரசியல் அமைப்பின் 370-வது சட்டப்பிரிவு, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்றார்.
6 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூடியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் கடந்த மூன்று நாட்களாக பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசினார்.
‘’நான் உயிரோடு இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு காஷ்மீரின் 370 வது சட்டப் பிரிவை மீட்டெடுக்க முடியாது’ என ஆவேசமாக தனது உரையை ஆரம்பித்த மோடி, ‘டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே ஜம்மு – காஷ்மீரில் பின்பற்றப்படும்’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி அங்குள்ள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாடு ஏற்காது – மோடி இருக்கும் வரை, காஷ்மீரில், காங்கிரசால் எதுவும் செய்ய முடியாது’ என்றும் அவர் கூறினார்.
துலே, நாசிக் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.
‘’370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது – கொண்டு வர விடமாட்டேன் – இதை நம் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – சாதிகளையும், சமூகங்களையும் பிளவுபடுத்தும் ஆபத்தான விளையாட்டை காங்கிரஸ் ஆடுகிறது” என மோடி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் ‘மகாயுதி‘ கூட்டணிக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
– மு.மாடக்கண்ணு.