உடைந்து கிடக்கும் உங்களை என்ன செய்ய?

– அப்துல் ரகுமான்
சிதறு தேங்காய் உடைக்க ஓங்கியவனின்
கையைப் பித்தன் பிடித்து நிறுத்தினான்.
“நீயே உடைந்து சிதறிக் கிடக்கிறாயே
தேங்காயை வேறு உடைக்க வேண்டுமா?” என்றான்.
தேங்காய் பொறுக்கக் கூடி இருந்தவர்களைப்
பார்த்துப் பித்தன் சொன்னான்-
“தேங்காய்ப் பொறுக்கிகளே! உங்களை எப்போது
பொறுக்கப் போகிறீர்கள்?
அப்படிப் பொறுக்கினாலும் சிந்திப் போன
உங்கள் நீரை எப்படிச் சேகரிப்பீர்கள்?
நீங்கள் உடைந்து துண்டு துண்டாகிப் போனதை
உணரவில்லையா?
வீட்டிலும், வெளியிலும் நீங்கள் சிதறிக் கிடப்பதை
அறியவில்லையா?
மகன் என்றும், தந்தை என்றும், அண்ணன் என்றும்
தம்பி என்றும், எசமான் என்றும்
சேவகன் என்றும் நீங்கள் ஒருவரே எத்தனை
துண்டுகளாகி விட்டீர்கள்.
நீங்கள் ஒருவரல்லர். பலர். இந்தப் பலரில்
நீங்கள் யார்?
உங்கள் துண்டுகளின் ஓயாத போருக்கு நீங்கள்
போர்க்களம் ஆனீர்கள்.
வெல்லும் தூண்டில் நீங்கள்,
தோற்கும் தூண்டிலும் நீங்கள்.
இரத்தத் துளிகளால் வகுபட்டுப்
பின்னங்களாகிப் போனீர்கள்.
உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளால்
உங்கள் பிம்பங்களும் உடைந்து போகின்றன.
உங்களை உடைக்கும் கைகளையே தேடிச்
சென்று சிக்குகிறீர்கள்.
ஒற்றுமை என்றும், ஒருமைப்பாடு என்றும்
முழங்குகிறவர்களே! உடைந்து கிடக்கும் உங்களை
என்ன செய்யப் போகிறீர்கள்?
ஆமாம்… எங்கே அந்தப் பசை?
****
– பித்தன் என்ற தலைப்பில் 1990-ல் வார இதழ் ஒன்றில் அப்துல் ரகுமான் எழுதிய கவிதை.
#அப்துல்_ரகுமான் #ஒற்றுமை #ஒருமைப்பாடு #abdul_rahman_kavithai #abdul_rahman
Comments (0)
Add Comment