மக்கள் திலகம் சம்பாதித்த சொத்து: கா.காளிமுத்து!

ஒருமுறை எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும்போது வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள் ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார் எம்.ஜி.ஆர்.

“எல்லாரும் நல்லா இருக்கீங்களா…” என்று எம்.ஜி.ஆர். விசாரித்த போது அவர்கள், “மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்…” என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் கைகளைப் பற்றி நெகிழ்ந்து போனார் எம்.ஜி.ஆர்.

அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்தபோது நெகிழ்ந்த குரலில், “நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேன்…” என்றார்.

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, அவரும் மக்கள் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் அன்று நேரில் பார்த்தேன்.

அவரது ஆட்சியின் போது, ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை; குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும் சென்றேன்.

சேறும், சகதியுமான வீதிகளில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே, காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். சிறிதும் யோசிக்காமல் வேட்டியை மடித்துக் கட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க ஆரம்பித்தார்.

பதறிப் போன மக்கள், “அய்யா… எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல; உங்கள பார்த்ததே போதும்; சகதியில் நடக்காதீங்க…” என்று தடுத்தும் கேளாமல் அவர்கள் அருகில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து மின்னல் வேகத்தில் நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார்.

மக்களின் குறைகளைக் கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல; தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமரராகும் வரையிலான 11 ஆண்டுகளில் ஒரு சென்ட் நிலமோ, வீடோ அவர் வாங்கியது கிடையாது.

அதேசமயம், திரையுலகில் தான் சம்பாதித்த சொத்துகளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கும் கட்சிக்கும் என, தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்தார்.

அவர் போல் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், வேறு யாரும் இல்லை. ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து, மக்களின் செல்வாக்கு என நினைத்தார்; அதை மதித்ததுடன் கடைசி வரை கட்டிக்காக்கவும் செய்தார்.

இதற்கு உதாரணமாக இன்னொரு சம்பவத்தையும் கூறலாம்…

ஒருமுறை எம்.ஜி.ஆருடன் காரில் சென்றேன். அவரது காரைப் பார்த்ததும் சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள், “தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க…” என்று கோஷமிட்டனர்.

இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம், “இவங்க எல்லாருமே எம்.ஜி.ஆர். வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட முதலமைச்சர் வாழ்கன்னு ஏன் சொல்லலன்னு தெரியுமா?” என்று கேட்டார்.

“உங்க மூன்றெழுத்து பெயர்; அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்…” என்றேன்.

“அதுமட்டுமல்ல; முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா, அது பதவியை வாழ்த்துற மாதிரி. எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னா தான் என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதை நான் பத்திரமா காப்பாத்தியாகணும்…” என்றார்.

இறுதி வரை அவர் சொன்னது போலவே நின்றார்….

– தமிழக முன்னாள் அமைச்சர் காளிமுத்து எழுதிய, ‘வாழும் தெய்வம்’ என்ற நூலிலிருந்து.

Comments (0)
Add Comment