நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா…!

- மணா

“அய்யா.. நீங்க எப்போ இருந்து எழுத ஆரம்பிச்சீங்கய்யா?”

“ தம்பீ.. என்ன கேட்டீங்க?”

அதே கேள்வியை மறுபடியும் அதே தொனியில் கேட்டிருக்கிறார் கி.ரா.வுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பத்திரிகையாளர்.

பதிலுக்கு பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார் கி.ரா.

“தம்பீ.. நான் உங்க கேள்விக்குப் பதில் சொல்றது இருக்கட்டும். முதல்லே நீங்க நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க…”

“சரிங்கய்யா”

“நான் எழுதினதிலே எதை நீ படிச்சிருக்க.. அதைச் சொல்லு பார்ப்போம்”

“நான் ஒண்ணும் படிச்சதில்லீங்கய்யா.. ஆபிசில் கேள்விகளை எழுதிக் கொடுத்து உங்களைப் பேட்டி கண்டுட்டு வரச் சொன்னாங்க.. அதனாலே வந்தேன்” – மென்று முழுங்கிச் சொல்லியிருக்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.

“அப்ப நீ ஒண்ணும் படிக்கலை.. ஆனா கேள்வி மட்டும் கேப்பே.. அதுக்கு நான் பதில் சொல்லணும்.. அப்படித் தானே?”

தலையாட்டவும் முடியாமல் தவித்திருக்கிறார் அந்தப் பத்திரிகையாளர்.

“சரி.. காப்பியைக் குடிச்சிட்டு நீ கிளம்புப்பா.. இப்போ பதில் சொல்ல தோதுப்படாது.. நீ போய்ப் படிச்சுட்டு வா.. அப்புறம் இந்தப் பேட்டி கீட்டியெல்லாம் வைச்சுக்கலாம்.. சரி தானா?”

இந்த ரசமான அனுபவத்தை கி.ரா.வே முதலில் விலாவாரியாக முகவுரை மாதிரிச் சொல்லிவிட்ட பிறகு முதன் முறையாகப் பேட்டி காணப் போன என் முகம் எப்படியிருந்திருக்கும்?

பிரபல வார இதழில் அப்போது நான் எழுதி வந்த ‘நதிமூலம்’ தொடருக்காக கி.ரா.வின் சொந்த ஊரான இடைசெவலுக்குப் போய் அங்கு அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என்று பலரையும் சந்தித்து புதுவையில் உள்ள கி.ரா.வின் வீட்டுக்குப் போயிருந்த போது தான் இந்தக் கதை.

“தம்பீ.. கோவிச்சுக்கப் படாது.. உங்க கிட்டேயும் கேக்கணும்.. ஆரம்பிச்சிறலாமா? – மிகவும் இங்கிதமாகப் பக்கத்தில் காப்பி சூடாக இருக்கும் போது கேட்டது தான் தாமதம்.

கதவு, கன்னிமை, கோபல்ல கிராமம், பிஞ்சுகள் துவங்கி அவருடைய கட்டுரைகள், கடிதங்கள் என்று ஒரே சூட்டாய் விவரித்து “மழைக்குத் தான் நான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன்.

ஒதுங்கியவன் பள்ளியைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்” என்கிற முந்திரிப்பருப்பு மாதிரியான பிடித்தமான வரி வரை கடகடவென்று சொல்லி விட்டு, லா.சரா, சு.ரா., தருமு சிவராமு வரை நீண்டிருந்த தொடர்பைப் பற்றிச் சுதாரிப்பாகச் சொல்லி முடித்ததும் மலர்ந்த பூவைப் போல ஆகிவிட்டது ‘நைனா’வின் முகம்.

“போதும்பா.. போதும்.. இனி நாம சளைக்காமப் பேசலாம்” – புன்சிரிப்புடன் கண் சிமிட்டினார் கி.ரா.

இடைசெவலுக்குப் போய்விட்டு வந்ததைப் பற்றிச் சொன்னதும், வாஞ்சையாய் “யார் யாரைப் பார்த்தீக?” – விசாரிக்க ஆரம்பித்து,

“சூடு ஆறிப்போயிருக்கும்.. வேற காபியைக் கொடுக்கச் சொல்லவா?” என்று பிரியம் சொற்களில் பொங்க ஆரம்பித்து விட்டது. கணவதி அம்மாளிடம் எனக்கும் சேர்த்து மதியச் சாப்பாட்டுக்கும் சொல்லிவிட்டார்.

அப்புறம் பேச்சைக் கேட்பானேன். இளம் தூறலாய் ஆரம்பித்து ஒரே அடை மழை தான்!

ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவரைச் சந்தித்த அனுபவத்தைச் சொல்லப் பேச்சில் ருசி கூடிவிட்டது.

இதற்கு முன்பே கி.ரா. சில நாட்டுப்புறக் கதைகளை எப்படி ரசனையாகச் சொல்வார் என்று நண்பர் மு.ராமசாமி போன்றவர்கள் மூலம் கேட்ட அனுபவம் இருந்தது.

மதுரைப் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் ஒரே கூட்டம். கி.ரா. பேசிக் கொண்டிருந்தார். பேச்சு மெதுவாகச் சொலவடைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

சில ‘கவிச்சியான’ சொலவடைகளைப் பட்டும் படாமலுமாக கி.ரா. சொல்லி, சில பாலியல் கதைகளையும் கூடவே இணைப்பாகச் சொல்ல ஆரம்பித்ததும் எதிரே கூட்டத்தில் இருந்த ஆய்வு மாணவர்கள் சிரிப்பாய்ச் சிரிக்க, மாணவிகள் நெளிய ஆரம்பித்து விட்டார்கள்.

சிலர் வெளியேற ஆரம்பித்துவிட்டார்கள். எதற்கும் சளைக்கவில்லை கி.ரா. மேடையில் இருந்த பேராசிரியர்கள் சற்றே செருமி ‘சிக்னல்’ காட்டினாலும், தான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டுத் தான் உட்கார்ந்தார்.

“சின்னப் பிள்ளைகளா இங்கே இருக்கு.. சமைஞ்ச குமரிங்க தானே! கொழுக்கட்டை சாப்பிட்டு எத்தனை கதைகளை சாடை மாடையாய் அனுபவப் பட்டவங்க கிட்டே கேட்டிருப்பாங்க.. அதை விட நான் புதுசா என்னத்த சொல்லிறப் போறேன்?”

– மேடையை விட்டுக் கீழே இறங்கியதும், பேராசிரியர்களிடம் ‘தன்னிலை விளக்கம்’ கொடுத்துக் கொண்டிருந்தார் கி.ரா.

அதை நினைவுபடுத்தியதுமே ரசனையான சிரிப்புடன் சொன்னார் கி.ரா.

“அப்போ நமக்குப் பேராசிரியப் பெருமக்கள் ‘தண்ணி’ தெளிக்காத காலம். நாட்டுப்புறவியல் பத்தி எல்லாம் பேசிக்கிட்டிருந்தாங்களே ஒழிய, நாட்டுப்புறப் பேச்சு வழக்கில் யாரையும் மேடையில் பேசவிடலை.

நாட்டுப்புறப் பாடல் பத்தி ஒரு மணி நேரம் பேசுறதைவிட, அஞ்சு நிமிச நாட்டுப்புறப் பாட்டு ஒண்ணு பாடினா போதுமே! அவங்களோட கருத்தரங்கில் ஒரு தடவை பேசக் கூப்பிட்டிருந்தாங்க.

யார் யாரோ பேசுறாங்க.. எனக்கு அடக்கமுடியலை.. பக்கத்திலே தியானம் பண்றவர் மாதிரி உக்கார்ந்திருந்தாரு.. அவர் கிட்டே “ஒண்ணுக்குக் கடுக்குது.. நான் கழிப்பறைக்குப் போகணும்னு தான் சொன்னேன்..

உடனே அவர் மூஞ்சி போன போக்கைப் பார்க்கணுமே.. அப்படியொரு பார்வை பார்த்துட்டு ஒருத்தரைக் கூப்பிட்டு என்னைப் பாத்ரூமுக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார்.

அதுக்கப்புறம் என் கிட்டே அந்த மனுசர் வாயைத் திறந்து பேசலை..” – கி.ரா இதையெல்லாம் சொல்கிறபோது அவருடைய முகத்தில் மாறும் முகபாவத்தைப் பார்க்கும்போது, புராண நாடகங்களில் திரைப்படுதா மாறி மாறிக் கீழிறங்குகிற மாதிரி இருக்கும்.

நதிமூலம் என்றால் லேசில் நிற்குமா? அவருடைய குறும்பும், சேட்டைகளும் நிரம்பிய பால்ய காலம் துவங்கி, உடம்பு நோய்வாய்ப்பட்டது, நோய் வாய்ப்பட்ட வேளையில் மணம் முடிக்க முன் வந்த கணவதி அம்மா, அரசியலும், போரட்டமுமான வாழ்க்கை,

இலக்கியமும், இசை ரசனையும் வாழ்வில் ஊடுருவிய விதம், சொந்த ஊரை விட்டுப் புதுவைக்கு இடம் பெயர்ந்த போது படபடத்த மனது, பல்கலைக்கழக நுழைவு என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்து நிதானமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.

மாலையில் இருட்டுவதற்குள் லேசாக மழை துவங்கிவிட்டது. குடையை எடுத்துக் கொண்டு “வாங்க.. பஸ் ஸ்டாப் வரை வந்துட்டு வர்றேன்” என்று கரிசனத்துடன் அவர் விதம் எல்லாமே அடுத்து அவரை மனதுக்கு நெருக்கமாக்கிவிட்டது.

எனக்குத் திருமணமான புதிதில் நண்பர் அ.ராமசாமி புதுவை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

கூடவே ராமசாமியின் அனுமதியின் பேரில் கடலூரில் அப்போது வேளாண்துறை உயர் அதிகாரியாக இருந்த என்னுடைய மாமனாரையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். எதார்த்தமாக கி.ரா.வும் ராமசாமி வீட்டுக்கு வந்திருந்தார்.

மதியம் அசைவ விருந்து. ராமசாமியின் மனைவியின் சமையல் அற்புதம். வீட்டுக்கு நுழைந்தபோது பேச ஆரம்பித்தவர்கள் கி.ரா.வும், என்னுடைய மாமனாரும். எல்லாம் விவசாயம் பற்றித் தான் பேச்சு.

நாங்கள் சாப்பிட்ட கிறக்கத்தில் அங்கேயே உறக்கம் போட்டு, எழுந்திருக்கும் போதும் பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும். ஆச்சர்யப்பட்டுக் கேட்டபோது கி.ரா சொன்னார்.

“விவசாயம் பத்தியும், விவசாயிகள் படுற பாட்டைப் பத்தியும் ஒரு நாள் என்ன? நேரம், காலம் பார்க்காமல் பேசிக்கிட்டிருக்கலாம்யா”

‘புதிய பார்வை’ இதழில் அப்போது இணை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். அதில் “பள்ளிப்பிராயம்” என்ற தொடரைத் துவக்கினோம். பல எழுத்தாளர்களின் பள்ளிப்பிராய அனுபவங்களை வாங்கி வெளிவந்தது அந்தத் தொடர்.

அதில் நானும் என்னுடைய பள்ளிப்பிராயத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதில் ஆசிரியர் ஒருவரின் வக்கிரத்தைப் பற்றியும், வகுப்பில் எங்களுக்கு முன்னால் அந்த ஆசிரியரிடம் அடிவாங்கிய நிலையில் உயிரிழந்து போன சக மாணவனைப் பற்றியும் எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரை வெளிவந்த ‘புதிய பார்வை’ இதழ் தபாலில் கிடைத்ததும் கி.ரா.விடமிருந்து தொலைபேசி அழைப்பு.

“என்னய்யா.. இப்படி எழுதியிருக்கீங்க.. வகுப்புக்குப் படிக்க வர்ற மாணவரை அடிச்சுக் கொன்னா அந்த ஆளுக்குப் பேரு ஆசிரியரா? சொல்லுங்க.. இப்படி எல்லாம் மனசிலே குரூரம் இருக்கக் கூடாது. இது நடந்து எத்தனை வருஷமாச்சு?”
சொன்னேன்.

“ஆனாலும் பரவாயில்லை.. இப்பவாவது அந்த ஆளைப் பிடிச்சு உள்ளே போடுங்கய்யா.. என்ன அக்கிரமமா இருக்கு”- ஆக்ரோஷத்துடன் உரத்த குரலில் கி.ரா கத்திவிட்டு “என்னமோ.. சொல்லத்தோணுச்சு.. சொல்லிப்புட்டேன்யா” – குரல் தணிந்த போது அவரது அறச்சீற்றம் தெரிந்தது.

பேசிய இரண்டாவது நாளில் அதே கோபத்தை ஒரு தபால்கார்டில் எழுதியிருந்தார் கி.ரா. வெளியிட்டிருந்தோம்.

சில ஆண்டுகளுக்கு முன் புதுவையில் நடந்த கி.ரா.வின் பிறந்த நாளுக்கு நடிகர் சிவகுமார், அவரது மனைவி லெட்சுமி அவர்களுடன் சென்றிருந்தேன்.

கேக் வெட்டுவதற்கு கிரா கூச்சப்பட்டபோது “இன்னைக்கு நீங்க குழந்தை. மறுக்கக் கூடாது” என்று சொன்னதும், கொஞ்சம் வெட்கம் குழைந்த முகத்துடன் வெட்டிவிட்டு, மைக்கில் தன்னுடைய இயல்புப் படி கி.ரா பேசிக் கொண்டு போனபோது, மேடையில் வழக்கமான பூரிப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் கணவதி அம்மாள்.

அவருடைய மறைவின் போது, கி.ரா எழுதிய கட்டுரை பிரியமும், உருக்கமும் கூடியது.

எத்தனையோ ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும், வாழ்வு மீதான சலிப்பு அவரிடம் இல்லை. அந்தந்த கணங்களுக்கான மனிதராகவே பெரும்பாலும் வாழ்ந்திருக்கிறார், அவருக்கே உரித்தான ரசனை, கோபம், கொஞ்சல், கொச்சை அனைத்துடனும்.

ஒரு சமயம் மனுசர்களுக்கு விதவிதமான பட்டப்பெயர்களை வைப்பது பற்றிப் பேச்சு நகர்ந்தது. குஷியான மனோபாவத்துடன் பல வினோதமான பட்டப் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் கி.ரா.

சிலவற்றிற்கு அர்த்தமே தெரியாமல் வெறும் சொல்லாகவே சில பட்டப் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதையும் சொன்னார்.

“ஊர்லே ஒருத்தன் எப்பவும் மத்தவங்களைப் பார்த்தா வஞ்சகமே இல்லாம முறைச்சுக்கிட்டே இருப்பான். வீட்டிலேயும் பாகுபாடில்லை. எப்பவும் முறைப்பு தான். அவனுக்குச் சரியா ‘முறைச்சான்’ன்னு பெயர் வைச்சுட்டாங்க.. எப்படிக் காரணப் பெயரா இருக்கா?” என்று கேட்டதும் அவரிடம் கேட்டேன்.

“இந்த “முறைச்சான்” பத்தியும் நீங்க எழுதியிருக்கலாமே! ஏதோ “மச்சான்” மாதிரி நல்லா இருக்கே?” கேட்டதும் முகத்தில் இறுக்கத்தைக் கூட்டிப் பார்வையைக் கூராக்கி ஒரு ‘முறை’ முறைத்துவிட்டு மெதுவாகப் புன்சிரிப்புக்கு கி.ரா.வின் முகம் நிதானமாக மாறிய தருணம் அழகாக இருந்தது.

  • மணாவின் ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’ நூலிலிருந்து.
Comments (0)
Add Comment