சாட்ஜிபிடியை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி?

நூல் அறிமுகம்:  சாட்ஜிபிடி சரிதம்

நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (Christina Drake) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக எழுதுபவர் என தன்னை வர்ணித்துக்கொள்ளும் டிரேக், சாட்ஜிபிடியை பயன்படுத்த மாட்டேன் என சொல்வது இந்த காலத்தில் அத்தனை புத்திசாலித்தனமானது அல்ல எனும் குறிப்பிடனே தனது பதிவை துவக்குகிறார்.

சாட்ஜிபிடி செயல்திறம் மிக்கது, நேரத்தை மிச்சமாக்கக் கூடியது, எதிர்கால வழி என சொல்லப்படுவது எல்லாம் சரி, ஆனால் நான் சாட்ஜிபிடிக்கு மாற மாட்டேன் என குறிப்பிடுகிறார்.

என் கைத்திறனை ஒரு அல்கோரிதம் வசம் ஒப்படைக்க மாட்டேன் என்பதோடு, பின்னர் நாம் சரி பார்த்து அடித்து திருத்தி எழுத வேண்டிய அரை வேக்காடு பிரதியை ஏஐ அல்கோரிதமிடம் இருந்து பெற சம்மதிக்க மாட்டேன் என்கிறார்.

இப்படி ஏஐ எழுதுவதை திருத்தி எழுதுவதை விட நாமே எழுதுவது மேலானது. ஏஐ எழுத்து ஆன்மாவை கொல்வது, தண்ணிரை கலக்கு கலங்கலாக்குவது என்கிறார்.

அதோடு, என் சிந்தனையையும், புரிதலையும், வெளியே வேறொருவரிடம் ஒப்படைக்க மாட்டேன் என்று தெளிவாக சொல்கிறார்.

தொடர்ந்து ஆக்கத்திறன் ஏஐ சேவைகளை எழுதுவதற்காக பயன்படுத்துவது ஏன் தகுதியற்றது என அழகாக விளக்கிச்செல்கிறார்.

அப்படியே பதிவை முடிக்கும் போது, மனிதர்களுக்காக எழுதுவதை சுட்டிக்காட்டிவிட்டு ஆர்வம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என தொழில்முறை கோரிக்கையையும் வெகு இயல்பாக வைக்கிறார்.

இந்த பதிவே கூட, ஏஐ சேவைகளுக்கு மத்தியில் தன்னை ஏன் உள்ளடக்கத்திற்கு நாட வேண்டும் என விளக்கும் நோக்கத்துடனும் எழுதப்பட்டிருக்கலாம்.

ஆனால், அதை அவர் செய்துள்ள விதம் அருமையாக உள்ளது. தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமலே அவர் அதை அழகாக செய்திருக்கிறார்.

ஏஐ சேவை கொண்டு இப்படி ஒரு போதும் எழுத முடியாது என நம்புகிறேன். இது தான் சுயமாக எழுதுவதன் தனிச்சிறப்பு. இதை வெளியே ஒப்படைக்க முடியாது.

எளிய வாசகங்களுடன் சாட்ஜிபிடிக்கு எதிரான வலுவான வாதங்களோடு அமைந்துள்ள இந்த பதிவுக்கு சீசர் ரெயனோ என்பவர் நான்கைந்து விரிவான பின்னூட்டங்களை எழுதியிருக்கிறார்.

அவற்றில் அவர், உங்களைப்போல ஏஐ நுட்பத்தை நிராகரிக்கும் பலரை தெரியும். ஆனால் ஏஐ சேவையை பயன்படுத்தும் விதத்தில் அணுகினால் சிறப்பாக இருக்கும் என குறிப்பிட்டு, ஏஐ சேவையை நிராகரித்து வந்த உள்ளடக்க எழுத்தாளர் ஒருவர் மிகவும் சவாலான எழுத்துப்பணிக்கு எப்படி சாட்ஜிபிடி மூலம் தீர்வு கண்டார் என்றும் விவரிக்கிறார்.

ஆம், சாட்ஜிபிடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொள்வது முக்கியம். அதைவிட எப்போது பயன்படுத்த வேண்டும் என அறிந்திருப்பது முக்கியம். சாட்ஜிபிடி பல நேரங்களில் பயனுள்ளதாக இருக்கலாம். எப்போது எல்லாம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

என்னைப் பொருத்தவரை, சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஏஐ சேவையையும் பயன்படுத்துவதில்லை. சாட்ஜிபிடி பற்றி எழுதுவதே எனக்கு பிடித்திருக்கிறது. ஏற்றதாகவும் இருக்கிறது. சாட்ஜிபிடி சரிதம் படித்துப்பார்க்கவும்!

நூல்: சாட்ஜிபிடி சரிதம்
ஆசிரியர்: சைபர் சிம்மன்
ஸீரோடிகிரி பதிப்பகம்
விலை: ரூ. 350/-

Comments (0)
Add Comment