‘புரட்சித் தலைவர்’ என்று லட்சோப லட்சம் மக்களால் இன்றும் அழைக்கப்படும் திரு.எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி என்னுள் எழுந்த சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்களிடம் அவருக்கு இருந்தது அன்பு, பரிவு, பாசம், மதிப்பு, ஆன்மீகவாதிகள் மொழியில் சொல்வதென்றால் ‘பக்தி’.
அண்ணா அவர்களின் கொள்கைகளை திரைப்படம் மூலம் மக்களிடம் கொண்டு செல்லும் பணியைத் தொடர்ந்து செய்தவர். அண்ணா அவர்கள் மறைந்த பிறகு அவருடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் அண்ணாவின் படத்தினை, கொள்கைகளைக் காண்பித்தார், எடுத்துரைத்தார்.
ஒரு திரைப்படத்தில் அண்ணாவைப் பற்றிய பாடல் ஒன்றில் “தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு மட்டும் வறுமையைத் தந்தார்” என்று பாடி, இன்றைக்கு அதைக் கேட்டால் கூட எல்லோருடைய கண்களும் கசியும்படி செய்தார்.
அண்ணா அவர்கள் உடல்நலம் கெட்டு அமெரிக்க மண்ணில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பரிவோடு விசாரிப்பார்.
அண்ணா அவர்களின் உடல்நலம் மிகவும் கெட்டு சென்னை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எங்கள் குடும்பம் தங்குவதற்காக அடையாறு பகுதியில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்துத் தந்திருந்தார்கள்.
அண்ணா அவர்கள் மறைந்தபோது நான் அழுது துடித்துக் கொண்டிருந்தபோது, அவரும் அழுதுகொண்டே என்னை தேற்றி, “பரிமளம் அழாதீர்கள். அப்பா போய்விட்டார், இதோ உங்கள் சித்தப்பா நான் இருக்கிறேன்” என்று தேற்றினார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி.
என் அப்பா மருத்துவமனையில் இருந்தபோதும், அவர் மறைந்த பிறகும் எங்கள் குடும்பத்தினர், உறவினர் என்று பலருக்கு உணவும், மற்ற செலவுகளும் சற்று ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு செய்தவர் அவர்.
அதை நன்றியுடன் இன்றைக்கும் நான் நினைக்கிறேன். அப்பா அவர்கள் மறைந்தபிறகு என் அன்னையார் ராணி அம்மையார் அவர்களுக்கு, சுமார் ஒரு வருடத்திற்கு, ஒரு காரை ஏற்பாடு செய்து அதற்கு ஓட்டுநர், ஓர் உதவியாளர் ஆகியோரை ஏற்பாடு செய்தார்.
அவர் கழகம் தொடங்கி முதல் இடைத்தேர்தல் வந்தது, திண்டுக்கல் தொகுதிக்கு. “அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துகிறேன். அண்ணாவின் மகனான நீங்கள்தான் நிற்க வேண்டும்” என்று வற்புறுத்தினார். நான்தான் தயங்கினேன்.
அவர் உடல் நலம் கெடுவதற்கு 15 நாட்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்து என் அன்னையைச் சந்தித்து உரையாடினார். என் துணைவி சரோசா, என் மகன் மலர்வண்ணன், சௌமியன், என் மகள் இளவரசி ஆகியோருடன் அன்பாக மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார்.
என்னை அழைத்துக்கொண்டு வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தார். என் தந்தையின் அறையையும் ஆவல் தீர பார்த்தார். பிறகு என்னிடம் வந்து அமர்ந்துகொண்டு, “டாக்டர் – நீங்கள் என்னிடம் எதுவும் கேட்பதில்லை. இப்போது கேளுங்கள்… என்ன வேண்டும் உங்களுக்கு?” என்றார்.
நான் “எனக்கு எதுவும் வேண்டாம். அப்பாவின் எழுத்துக்கள், பேச்சுக்கள், ஒளி-ஒலி நாடாக்கள் இவைகளை தொகுத்து வெளியிடுங்கள். அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுங்கள். எனக்கு அதுபோதும்” என்றேன். அவர் மகிழ்ச்சியோடு “இதுவரை என்னிடம் எவரும் இதுபற்றி பேசியதில்லை, கேட்டதில்லை. நான் அவசியம் செய்கிறேன்” என்றார்.
மறுநாள் இதழ்களில், “அண்ணாவின் குடும்பத்திற்கு நிதி அளிக்கப் போகிறேன்” என்று அறிக்கை வெளியிட்டார். “என் அன்னையாருக்கும், என் மூத்த மகனுக்கும் தனித்தனியாக ஒரு அம்பாசிடர் கார், ஒரு மாருதி கார் வாங்கித் தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார். அது இயலாமல் போனது. அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலம் தேறி சென்னை வந்தபிறகு அவரை இருமுறை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். நாகரிகம் கருதி நான் எதையும் அவரிடம் நினைவூட்டவில்லை.
ஆனால் 1995 முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் நான் வலியுறுத்திய கோரிக்கைகளை, மனதில் கொண்டு அண்ணாவின் எழுத்துக்களை, பேச்சுக்களை நாட்டுடைமையாக்கி எங்கள் குடும்பத்திற்கு 75 லட்சம் ரூபாய் அளித்தார்.
இன்றைக்கு தமிழரசி பதிப்பகம் அண்ணாவின் பேச்சுகளைத் தொகுத்து வெளியிட்டு இருக்கிறது. பூம்புகார் பதிப்பகம் அண்ணாவின் நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் இவைகளை வெளியிட்டிருக்கிறது.
– அறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம்
தலைவர்,
அண்ணா இலக்கிய பேரவை