திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்தாலும் சிறுவயதிலேயே குடும்பத்துடன் திருவனந்தபுரம் போக வேண்டிய நிலை ஸ்ரீநிவாஸுக்கு. அப்பாவுக்கு ஏ.ஜி.எஸ் அலுவலகத்தில் வேலை.
பெரிய கூட்டுக் குடும்பம் இயல்பாகவே சங்கீதத்தில் ஒரு பிடிப்பு.
அத்தை பத்மா நாராயணன் ஸ்ரீநிவாஸைக் கூப்பிட்டுச் சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்தார். கற்பதே இன்னொரு விளையாட்டு போல இருந்தது. படிப்பையும் மீறிப் பாடுவதில் ஆர்வம்.
சுற்றிலும் மலையாளம், வீட்டில் தமிழ்.
பள்ளியில் பாடும்போது குரல் மற்றவர்களை ஏதோ ஒரு விதத்தில் வசீகரித்தது.
ஆனால், வீட்டில் யாருக்கும் இசையில் ஈடுபடுவதில் விருப்பமில்லை. திருட்டுத்தனமாகப் போய்க் கச்சேரியில் பாடிவிட்டு வந்திருக்கிறார். ‘ஸ்டூடண்ட்ஸ் ஆர்க்கெஸ்ட்ரா’ என்ற நண்பர்களாகச் சேர்ந்து வைத்திருந்த இசைக்குழுவில் இவருடன் வந்து பாடினவர் பின்னாளில் பாடகியான சித்ரா.
“பெரிய பாடகரா வர வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அப்போதில்லை. ஆனால் இசையில் அவ்வளவு ஈடுபாடு. அது என்னை ‘ஏதோ’ பண்ணும். வேறு எந்த விஷயமும் என்னைப் பாதிக்கவில்லை. இசை… இசை… இசைதான்.
படிப்பிலும் நான் சராசரி மாணவன் தான். இசையில் அவ்வளவு தூரம் பைத்தியமாக இருந்தும் கல்வியில் நல்ல மார்க்குகளுடன் நான் தேற முடிந்தது என்றால் அதற்கு நமது கல்வி முறையில் உள்ள கோளாறு காரணம் என்று நினைக்கிறேன்.
தேர்வுக்குப் பத்து நாட்களுக்கு முன்பு கூடப் படித்து இங்கு தேறிவிட முடியும்.
கல்வியிலும் நான் தேறி மும்பையில் பி.டெக் படிக்கப் போனேன். கெமிக்கல் டெக்னாலஜியில் முக்கியமான கோர்ஸ். தகுதியில் கிடைத்தது.
மும்பைக்கு ரயிலில் போகும்போது அங்கு இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனைப் பார்க்க முடியுமே என்று ஒரு யோசனை.
வீட்டிலோ நான் முழுக்க இசைத் துறையில் இறங்கிவிடுவேனோ என்று ஒரே பயம். சராசரியான மத்தியதர வர்க்கக் குடும்பச் சிந்தனைப்படி மாதா மாதம் குறிப்பிடத்தக்க சம்பளம் இருந்தால் மட்டும் போதும் என்கிற எதிர்ப்பார்ப்புதானிருந்தது.
நான் பாடுவதை ரசித்தாலும், இசையில் எனக்கிருந்த வெறியான ஈடுபாடு அவர்களிடம் பயத்தை உருவாக்கிவிட்டது. அந்த அளவுக்கு ஈர்த்திருக்கிறது இசை.
மும்பையில் – டெக்ஸ்டைல் சாயத்தில் ஸ்பெஷல் கோர்ஸ். மூன்று வருடங்கள். அங்கும் என்னுடைய பாட்டு பிரபலம். அங்கு போனதும் எனக்குப் பிடித்த விஷயம் ‘கஜல்’.
பல பேருடைய கஜல்களைக் கேட்க கேட்க ஒரே பரவசமாக இருக்கும். நாமும் பாட வேண்டும். என்று மெல்லிய கனவும் இருந்தது. கஜல்களைப் பாடுவேன். கர்நாடக சங்கீதம் பாடுவேன்.
செம்மங்குடி சீனிவாசய்யர், பாலக்காட்டு நாராயணசாமி இருவர் பாடுவதும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் என்னைச்சுற்றி பாட்டு கேட்டுக் கொண்டேயிருக்கும்.
‘கோர்ஸ்’ முடித்ததும் மும்பையிலேயே வேலை. அகமதாபாத், ஹைதராபாத்திற்கு மாற்றலாகிப் பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டேன்.
மார்க்கெட்டிங் வேலை. டெக்னிக்கல் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் நான். அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த போதும் இளைராஜாவின் இசையின் மீது அபாரமான ஈடுபாடு.
வேணுகோபால் என்கிற நண்பர் மலையாளத்தில் பாடிக் கொண்டிருந்தார். சென்னைக்கு வந்தால் என்னைத் தொடர்பு கொள்வார். அவருடன் ரிக்கார்டிங் தியேட்டருக்குப் போய் வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தச் சாதனங்கள் என்னை ஈர்த்தன.
இளையராஜாவின், ரிக்கார்டிங் தியேட்டருக்கு ஒருமுறை கூட்டிக் கொண்டு போனார். கம்போஸிங் பண்ணிக் கொண்டிருந்தார்.
வெவ்வேறு இசைக் கருவிகள் எல்லாம் வாசிக்கப்பட்டுக் கோர்வையாகக் தொகுத்த முறையை மயங்கிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனதில் தேடிக் கொண்டிருந்தது கிடைத்த மாதிரியான சந்தோஷம். அப்படியொரு பிரமிப்பு. ரொம்பவும் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இது தான் நான் செயல்பட வேண்டிய துறை என்கிற எண்ணம் தொடர்ந்து மூட்டியது.
பேசாமல் இதே ரிக்கார்டிங் தியேட்டருக்கு காபி கொண்டு வருகிற பையனாக்கூட நான் இருந்திருக்கக் கூடாதா என்கிற அளவுக்கு ஏங்க ஆரம்பித்துவிட்டது மனது. அபூர்வமானதொரு தருணத்தை அனுபவித்தேன்.
மறுநாள் காலை ஆறரை மணி. இளையராஜா சார் வீட்டில் இருந்தேன். வெளியே வருகிற நேரம் பார்த்து என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு “பாட்டு என்றால் எனக்கு உயிர்” என்று சொன்னேன்.
“உன் பாட்டை டேப் பண்ணிக் கொடு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இளையராஜா. சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது மனது.
கர்நாடக கீர்த்தனம், ஒரு கஜல் இரண்டையும் பாடி ஒரு டேப்பில் பதிவு பண்ணிக்கொண்டு ஸ்கூட்டரில் அலைந்து பதினைந்து நாட்கள் கழித்தே கொடுக்க முடிந்தது.
தொடர்ந்து ஸ்டூடியோவுக்கும் அவரது வீட்டிற்கும் அலைந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு முறை அவர் வெளிவருகிற நேரத்துக்காகக் காத்து நின்று கொண்டிருந்தேன்.
வந்தவர் என்னிடம் “பாட்டைக் கேட்டேன். நல்லாயிருக்கு. பிறகு தகவல் சொல்றேன்” என்று மெதுவாகக் சொல்லிவிட்டுப் போனபோது உடம்பெல்லாம் சிலிர்த்து ஒரே சந்தோஷம்.
கொஞ்சகாலம் கழித்து வீட்டில் ஒரு விசேஷம். என் தொண்டை சரியில்லை.
அந்த நேரத்தில் சுப்பையா என்கிறவர் “இளையராஜா நாளை காலை ஏழு மணிக்கு ‘வாய்ஸ் மிக்ஸிங்’கிற்கு வரச் சொன்னார்” என்றார்.
“எனக்குத் தொண்டை சரியில்லையே” என்றேன்.
”அதெல்லாம் தெரியாது. நாளைக்குக் காலையில் வா” சொல்லிவிட்டுப் போனார். மறுநாள் காலை போனேன். என் குரல் சரியில்லாததைச் சொன்னேன். என் வேலையைப் பற்றியும் சொன்னேன்.
”சரி இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றார் இளையராஜா.
குரல் சரியாகி அவரைத் திரும்பவும் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தேன். முடியவில்லை. மனதுக்குள் ஒரே அவஸ்தை. ஒன்றரை வருஷமாகிவிட்டது.
எனக்குத் திருமணமாகிவிட்டது. என்னுடைய வேலையில் கவனம் செலுத்தினேன். வித்யாசாகரை இடைவெளியில் போய் பார்த்தேன். என் குரல் அவருக்குப் பிடித்திருந்தது.
பி. சுசீலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்குப் பாட்டு பாடினேன். அவ்வளவுதான். மறுபடியும் வேலையில் கவனம். ஊர் ஊராக அலைந்து கொண்டிருத்ததேன். இளையராஜாவே என் குரலைப் பாராட்டிச் சொல்லியிருந்தும் வாய்ப்பு வராமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
எம்.எஸ். விஸ்வநாதனைப் போய்ப் பார்த்தேன். கஜல் பாடிக் காண்பித்தேன். அவரே வந்து ஆர்மோனியம் வாசித்து மேலும் பாடச் சொன்னார். “தம்பி வாய்ப்பு வந்தால் கண்டிப்பா பயன்படுத்துறேன்” என்றார் நம்பிக்கையுடன்.
அதற்குள் எனக்கு வேலை அகமதாபாத்துக்கு மாற்றலாகி விட்டது. ஆறு மாதங்கள் அங்கிருந்தேன். முழுக்கப் பிசினஸ் மயம். ஒட்டுதல் இல்லை எனக்கு.
எப்படியாவது தமிழகத்திற்கு வரவேண்டும் என்று கோயம்புத்தூருக்கு வந்தேன். அப்போது ஜெர்மன் கம்பெனியிலிருந்து விலகி மும்பையைச் சேர்ந்த ஒரு கம்பெனியின் ரிஜினல் மேனேஜர் ஆனேன்.
கோயம்புத்தூருக்கு வந்து இரண்டு வருஷங்கள் கம்பெனிக்காக உழைத்தேன். திருப்பூரில் கிளையை உருவாக்கினேன். லாபத்தைப் பல மடங்கு உயர்த்தினேன். மனதுக்குள் ஓரமாக இருந்தது இசை.
‘ரோஜா’ படம் அப்போது வந்திருந்தது. போய்ப் பார்த்தேன். இசை புதிதாக இருந்தது. புதுப் பாடகர்கள் எல்லாம் அறிமுகமாயிருந்தார்கள். ஹரிஹரன் குரல் எல்லாம் தமிழக்குப் புதிதாக இருந்தது.
ஏ.ஆர். ரஹ்மானை ஏதோ நெருக்கமாக உணரமுடிந்தது.
எனக்கு நன்றாகத் தெரிந்த சித்ரா பின்னணி இசையில் பிரபலமாக இருந்தாலும் யாரிடமும் சிபாரிசு கேட்கப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. எதிலும் நேரடி அறிமுகம்தான்.
கோவையிலிருந்து சென்னைக்கு வந்து ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்தேன். அப்போது அவர் மிகவும் பிரபலமாகவில்லை. ஜீன்ஸுடன் ரொம்பவும் கேஷுவலாக இருந்தார். வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார்.
கஜலும், தமிழ்ப் பாட்டும் பாடினேன், கஜல் அவருக்குப் பிடித்திருந்தது. ‘ஹிந்துஸ்தானியெல்லாம் தெரியுமா?’ என்று விசாரித்தார்.
சென்னைக்கு வந்தால் வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொன்னதும் மறுபடியும் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது எனது கனவு. எனக்கான இடத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற வேட்கை கணகணக்கத் துவங்கியது.
நல்ல வேலை, நல்ல சம்பளம். தென்னிந்தியாவுக்கு மட்டுமில்லாமல் இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸுக்கும் நான் ரீஜினல் மேனேஜர்.
கம்பெனியை லண்டனுக்கு மாற்றி விடலாமா என்கிற யோசனையும் இருந்த நேரம். இசை மீது இருந்த வேகத்தில் சென்னைக்கு ‘டிரான்ஸ்பர்’ கேட்டேன். விருப்பமேயில்லாமல் என்னை அனுப்பினார்கள். ரிஸ்க் ஆன காரியம்தான். இருந்தும் துணிந்து முடிவெடுத்தேன்.
சென்னைக்கு மாற்றலாகி நான் வருவதற்குள் புகழின் உச்சிக்குப் போய்விட்டார் ரஹ்மான். அவரைச் சுலபமாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் போய் அவரது வீட்டில் ரொம்ப நேரம் காத்திருந்தேன். பார்த்தேன். நம்பிக்கை உருவானது. எனது திறமைக்கான ஏதோ கதவு திறந்த உணர்வு.
தமிழில் எனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் மகேஷ். நம்மவர் படத்தில் ‘ட்ராக்’ பாடினேன். மலையாளத்திலும் ‘ட்ராக்’ பாட ஆரம்பித்தேன். ‘ட்ராக்’ பாடுவது என்றால் பின்னணி இசையுடன் பிரபலமான பாடகர்களுக்கு முன்மாதிரியாகப் பாடுவது.
அதை மற்றவர்கள் கேட்க முடியாது. அது ஒரு டம்மி. அதைக் கேட்டுவிட்டு மற்ற பாடகர்கள் பாடுவார்கள்.
நேரடியாகப் பாடும் வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை. நான் ‘ட்ராக்’ பாடுவதற்கும், அதே பாடலை எஸ்.பி.பி. போன்றவர்கள் எந்த மாதிரி லாவகத்துடன் பாடுகிறார்கள் என்பதை உணர்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எந்த விதத்திலும் அதைக் கீழானதாக நினைக்கவில்லை.
அதற்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ட்ராக் பாட ஆரம்பித்தேன். ‘டூயட்’ படத்தில் நான் – ட்ராக் பாடியது அவருக்குப் பிடித்திருந்தது. ‘இந்தியன்’ படத்தில் ஹரிஹரனுக்கு முன்னால் ‘டெலிபோன் மணிபோல்’ பாடலை ட்ராக்கில் நான்தான் பாடினேன்.
அது நன்றாக இருக்கிறது என்று ஏறத்தாழ ஓ.கே. ஆகி விட்டது. கடைசியில் ஹரிஹரனைக் கூப்பிட்டுப் பாடவைத்தார்கள்.
ஏதோ ஒரு விதத்தில் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்விருந்தது. என் மீது ஒரு நம்பிக்கை. பி.சி. ஸ்ரீராம் போன்றவர்களின் விளம்பரப் படங்களுக்குப் பாடினேன்.
ஒரு சமயம் ரஹ்மான் பாடக் கூப்பிட்டிருக்கிறார் என்று சொன்னார்கள். போனேன். என்னுடன் இன்னும் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். கோரஸ் பாடக் கூப்பிட்டார்கள். அவர்கள் போனார்கள். நான் மட்டும் உட்கார்ந்திருந்தேன்.
“உங்களையும் தான் கூப்பிட்டிருக்கிறாங்க” சொன்னதும்தான் என்னையும் கோரஸ் பாடத்தான் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதே தெரிந்தது. ஒரு மாதிரியான உறுத்தல். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. ஒரு கம்பெனியின் ரிஜினல் மேனேஜர்.
சுமார் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம். இதையும் மீறி கோரஸ் பாட வேண்டுமா? என்கிற கேள்வி உள்ளுக்குள் ஓடியது. என்னதான் இருந்தாலும், இசை உலகிற்கு நான் புதியவன். இப்போது தான் நுழைகிறேன்.
இந்தக் கூச்சத்தையெல்லாம் உதறினால்தான் முன்னேற முடியும். இந்த உணர்வுடன் போய்க் கோரஸ் பாடினேன். இப்படி அடுத்தடுத்துப் பல பாடல்களுக்குக் கோரஸ் பாடினேன். அப்போதெல்லாம் ஆதங்கம் இருந்ததில்லை.
‘பவித்ரா’ படத்தில் “செவ்வானம் சின்னப்பெண் சூடும்” என்கிற பாட்டு.
ரஹ்மானுக்கு எனக்கு ஒரு பாட்டு கொடுக்க வேண்டும் என்கிற ஐடியா இருந்தது.
நானும் எஸ்.பி.பி. பல்லவியும் பாடினோம். டைரக்டரும் ஒப்புக் கொண்டார். இரவு வரை இருந்து பாடினோம். முடித்ததும் எனக்கு மிகுந்த சந்தோஷம். பிறகு மிக்ஸிங்கின்போது சில திருத்தங்களுக்காக என்னை ரஹ்மான் தேடினபோது ஆபிஸ் வேலையாக நான் கோவையில் இருந்தேன்.
வருவதற்குள் அவசரம் காரணமாக மனோவைப் பாட வைத்திருந்தார்கள். ஸ்டுடியோவுக்கு என்னைக் கூப்பிட்டு என்னைத் தேற்றினார் ரஹ்மான். இருந்தும் எனக்குள் ஏதோ இழந்தது மாதிரியான உணர்வு.
மறுபடியும் ‘டிராக்’ பாட ஆரம்பித்து விட்டேன். எத்தனையோ தடைகள். இருந்தும் மீறி நம்மை நிரூபிக்கக் காலம் வரும் என்ற தன்னம்பிக்கை குறையவில்லை.
அடுத்து ‘மின்சாரக் கனவு’ படம். “ஊ.. லலல்லா” பாட்டு. கர்னாடிக், வெஸ்டர்ன் எல்லாம் சேர்ந்த பிரமாதமான ட்யூன். கவிஞர் வைரமுத்துவுக்காக என்னை அந்த ட்யூனைப் பாடிக் கொடுக்கச் சொன்னார்.
வைரமுத்து எழுதினபிறகு நான்தான் ட்ராக் பாடினேன். பிறகு உன்னிமேனனைப் பாட வைத்தார்கள். அதன் டைரக்டர் ராஜீவ்மேனனுக்கு நான் பாடின – டிராக் பிடித்திருந்தது.
அதில் ஒரு சரணத்தையாவது நான் பாடவேண்டும் என்று சொன்னப் பிறகு, கடைசி சரணத்தை நான் பாடினேன். அந்தப் பாடல் என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. எனக்கான ஒரு வழியை ராஜீவ் மேனனும், ரஹ்மானும் திறந்து விட்டார்கள்.
‘ரட்சகன்’, ‘உயிரே’ படத்தில் “என்னுயிரே…”, தெலுங்கு ஜீன்ஸ் என்று பல பாடல்கள் பாட அடுத்தடுத்து வாய்ப்புகள். சட்டென்று அந்தச் சமயத்தில் முடிவு பண்ணி என்னுடைய வேலையை விட்டுவிட்டேன்.
தேவா, இளையராஜா போன்றவர்களின் இசையில் பாட ஆரம்பித்தேன். எனக்கென்று பாட்டில் தனித்தன்மை உருவாக வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இருந்தும் ‘ட்ராக்’ பாடுவதை நான் நிறுத்தவில்லை.
‘படையப்பா’ படம். “மின்சாரப்பூவே…” பாட்டு. அதில் ஹரிஹரனுக்காக நான் ‘ட்ராக்’ பாடியிருந்தேன். நித்யஸ்ரீ கூடவே பாடினார்கள். பிறகு ஹரிஹரன் வந்து பாடினார். அது ரஜினி சாருக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு நான் பாடியது பிடித்திருந்தது.
ஹரிஹரனுடைய விசிறி நான். இருந்தும் நான் பாடின விதம் எதனாலோ அவருக்குப் பிடித்து, படத்திலும் இடம்பெற்று – மாநில அளவில் சிறந்த பாடருக்கான விருது கிடைத்தது.
என்னை வெளியே முழுமையான பாடகனாக அறிமுகப்படுத்தியது அந்தப் பாடல்தான். இரண்டு வருஷங்களுக்கு மேல் ட்ராக் பாடி, கோரஸ் பாடி நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு நெருங்கி வந்ததை உணர முடிந்தது.
அதற்குப் பிறகு இதுவரை வெவ்வேறு இசையமைப்பில் இருநூறு பாடல்களுக்கு மேல் பாடிவிட்டேன்.
‘லகான்’ ஹிந்திப் படத்தில் நான் பாடினதைத் தொடர்ந்து பல ஹிந்திப் பட வாய்ப்புகள். தற்போது வசந்த் இயக்கும் படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களில் நானும் ஒருவன்.
இருந்தாலும் இந்த வாய்ப்புகளைப் பெற எவ்வளவு காலம் பொறுமையுடன் பல தடைகளைக் கடந்து வந்திருக்கிறேன் என்பது முக்கியம். எதையும் ‘பாஸிட்டிவ்’வாக நினைக்க வேண்டும்.
கோரஸோ, ட்ராக்கோ எதைச் செய்யும்போதும் அந்தந்த வேலையை அதற்கான முழு ஈடுபாட்டுடனும், மனநிறைவுடனும் செய்திருக்கிறேன். எடுத்ததுமே அதற்கான எல்லையைப் பற்றி யோசிக்கக்கூடாது.
எந்தச் சந்தர்ப்பத்திலும் நம்மைப் பரிசீலனை பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நமது தவறுகள் நமக்குத் தெரியும். பிரபலமானாலும் இந்தப் பரிசீலனை தொடர வேண்டும்.
சென்னை அண்ணாநகரில் சந்தடியான சாலையோரத்தில் வீடு. உள்ளே தனியறையில் நவீன இசைக் கருவி. பக்கத்தில் ரிலாக்ஸாகத் சரிந்த சோபாவில் அமர்ந்தபடி புன்சிரிப்பு கலக்கப் பேசும் ஸ்ரீனிவாஸுக்கு இரண்டு குழந்தைகள்.
பெற்றோர்களுடன் கூட்டுக் குடும்பச் சூழ்நிலையின் மகத்துவத்தைச் சுவாசித்து, அது நிரப்புகிற இடைவெளிகளைப் பற்றிப் பரவசப்படுகிறார்.
கார்த்திக், சின்மயி போன்ற இளம் பாடகர்களை ரஹ்மானிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறார்.
“நம் திறமை மீது நமக்கு நம்பிக்கை இருந்தால் அடுத்த திறமைசாலியைப் பார்த்துப் பொறாமைப்படத் தோன்றாது” சற்று ஆன்மிகத் தொனியில் தான் மேலேறி வந்த சரடைப் பற்றி மிருதுவான குரலில் சொல்கிறார்.
”நிறைய இடைஞ்சல்கள், தடங்கல்கள் வரும். இதனால் ஒருவித மனச்சோர்வு கூட வரலாம். அதை வரவிடாமல் தடுப்பதுதான் முதல் வேலை.
நாம் செய்கிற ஒவ்வொரு வேலையும் நாம் போய்ச் சேர நினைக்கிற இடத்தை அடைவதற்கான வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்கள் என்பதை உணர்ந்தால் மனச் சோர்வு வராது.
என்னைப் புரிந்து கொள்ளாமல் யாராவது என்னை அவமானப்படுத்திப் பேசினால் அது என் பிரசினை அல்ல. அது அவர்களது பிரச்சினை. நான் செய்கிற வேலை, அதை எந்த அளவுக்கு ஆத்மசுத்தியுடன் அனுபவித்துச் செய்கிறேன் என்பதுதானே முக்கியம்.
அங்கீகாரத்துக்காகவே நான் ஒரு விஷயத்தை பண்ணவும் கூடாது. நாம் விரும்பும் காரியத்தைப் பண்ணும்போது இருக்கிற ‘த்ரில்’லை விட வேறு என்ன வேண்டும்?”.
****
மணா ‘கனவின் பாதை’ என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.