சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் அதிமுக!

இபிஎஸ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் பிரதானக் கட்சிகளாக திமுகவும் அதிமுகவும் மட்டுமே இருந்த நிலையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு, பெரிய கட்சிகளுக்கும், பரவலாக வாக்குகளை வைத்திருக்கும் சிறிய கட்சிகளுக்கும், உள்ளூர கிலியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் வாக்குகளை தவெக விழுங்கிவிடுமோ என்ற அச்சமே அதற்கு காரணம்.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிக்க, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (06.11.2024) நடைபெற்றது. இதில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, மாவட்ட செயலாளர்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பழனிசாமி, “சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க அனைவரும் தயாராக வேண்டும் – வாக்குச்சாவடி குழுக்கள் இல்லாத இடங்களில் உடனடியாக அமைக்க வேண்டும் – கட்சியைத் தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டும் – திமுக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அதிமுக அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

“2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் – தொண்டர்களை உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக விரைவில் நான் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.

தற்போது அரசியல் சூழல் மாறி வருகிறது – தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – திமுகவும், பாஜகவும் தான் நமக்கு பிரதான எதிரிகள் – அதிமுக குறித்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விமர்சிக்காத வரை, அவர்களை அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம்” என்று நிர்வாகிகளை பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

‘தேர்தல் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் – வலுவான கூட்டணி நிச்சயம் அமையும் – அதனை தலைமை பார்த்துக் கொள்ளும் – கூட்டணித் தொடர்பாக தொண்டர்கள் அச்சப்பட வேண்டாம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கட்சி அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

– மு. மாடக்கண்ணு

Comments (0)
Add Comment